PUBLISHED ON : மே 31, 2026

அன்புள்ள அம்மாவுக்கு,
நான், 40 வயது பெண். மருத்துவராக பணி புரிகிறேன். பெற்றோருக்கு ஒரே மகள். கல்லுாரியில் படிக்கும் போது, சீனியர் மாணவர் ஒருவரை காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டேன். கணவரும், மருத்துவர். பிரபலமான மருத்துவமனையில் பணிபுரிகிறார். வரமாக, ஒரு மகள் பிறந்தாள்.
சிறுவயதிலிருந்தே எனக்கு தோழிகள், நண்பர்கள் வட்டம் அதிகம். அவர்களுடன், நான் சகஜமாக பழகுவது என் கணவருக்கு பிடிக்கவில்லை. கணவருக்காக, அவர்களது நட்பை முறித்து கொண்டேன்.
வீடு, மருத்துவமனை, குழந்தை என, சீராக போய் கொண்டிருந்த வாழ்க்கையில், மொபைல் போனில் வந்த ஒரு, 'ராங் கால்' தலைகீழாக புரட்டி போட்டு விட்டது.
அதிலிருந்து, சந்தேக புயல் வீச ஆரம்பித்து விட்டது. வெளியில் சொல்ல முடியாத சித்ரவதைக்கெல்லாம் ஆளானேன்.
நிலைமை மோசமாக, குழந்தையுடன் பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டேன். 16 ஆண்டுகளாக பெற்றோருடன் தான் வசிக்கிறேன். என் மகள் இப்போது, கல்லுாரியில் சேர்ந்துள்ளாள்.
தற்போது, தான் செய்தது தவறு என்றும், மன்னிக்கும்படியும் கெஞ்சுகிறார், கணவர். எனக்கு தெரியாமல், கல்லுாரிக்கு சென்று, மகளை சந்திக்கிறார். மகளுக்கு அவர் மீது பாசம் இல்லையென்றாலும், அவர் சந்திக்க வரும்போது, பேசுவதாக கூறுகிறாள்.
என் பெற்றோரும், மகளுக்காகவாவது, அவருடன் சேர்ந்து வாழ கூறுகின்றனர். 'மகளுக்கு திருமணம் செய்யும்போது தந்தை இருக்க வேண்டாமா?' என்றும் கேட்கின்றனர்.
ஆனால், கணவரின் உண்மையான குணத்தை அறிந்த என்னால், அவருடன் சேர்ந்து வாழவே முடியாது என்றே தோன்றுகிறது. மகளையும், அவரது சித்ரவதைக்கு உள்ளாக்க வேண்டுமா என்று தோன்றுகிறது.
காதலிக்கும் போது, சாதுவாக இருந்தவர், எப்படி இப்படி மாறி போனார் என்று நினைத்தால், வேதனை தான் மிஞ்சுகிறது.
நான் என்ன செய்யட்டும், அம்மா.
- இப்படிக்கு, உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு,
பதினாறு ஆண்டுகளுக்கு முன் உனக்கு வந்த 'ராங்' காலை பண்ணியது யார்? உனக்கு வேண்டாதவர்களா? அல்லது உன் கணவருக்கு வேண்டாதவர்களா? அந்த, போன் அழைப்பில் சொல்லப்பட்ட எதிர்மறை செய்தி என்ன? 100 கணவர்மார்களுக்கு, மனைவி பற்றிய அவதுாறு செய்தி கூடிய, போன் வந்தால், 95 சதவீத கணவர்மார் சந்தேகப்படவே செய்வர். காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான் அதிகம் சந்தேகப்படுவர்.
உன் கணவர் என்ன வகை சித்திரவதைகள் செய்தார்? அடித்து உதைத்திருக்க வாய்ப்பே இல்லை. எல்லாம் வாய் வழி நாரச வார்த்தைகளைத்தான் கொட்டி இருப்பார்.
நீயும் மருத்துவர், உன் கணவரும் மருத்துவர். உங்கள் இருவருக்கும் குறைந்தபட்ச சபை நாகரிகம் தெரியாதா?
மோசமான வார்த்தைகளை உன் கணவர் பேசுகிறார் என்றால், தகுந்த விதத்தில் செயல்பட்டு, அவரை அடக்கியிருக்க வேண்டும்.
உனக்கு வந்த அனாமதேய, போன் அைழப்பை காவல்துறையிடம் புகார் பண்ணி இருக்கலாமே? அவர்கள் கண்டுபிடித்து தகுந்த நடவடிக்கை எடுத்திருப்பர்.
மூன்று மாதத்தில் சரியாகக் கூடிய பிரச்னைக்கு, 30 ஆண்டு பிரிவை உருவாக்கி விட்டாயே! உன்னைச் சுற்றி அகழி வெட்டி, முதலைகளை விட்டு இருக்கிறாயே... இது நியாயமா?
சரி, நீயும், உன் கணவரும் பிரிந்து, 16 ஆண்டுகள் ஆகின்றன.
உன் கணவர், குடிப்பழக்கத்திற்கு ஆளாகி, 'பிராக்டிஸை' விட்டுவிட்டு, நடுரோட்டில் நிற்கிறாரா?
உன் கணவர், சக மருத்துவர் அல்லது செவிலியர் நங்கை யாருடனாவது குடும்பம் நடத்துகிறாரா?
விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினாரா?
நீ, அவரை பிரிந்து வந்த பின் நேரிலோ, போனிலோ ஆபாசமாக பேசினாரா?
மோசமான கணவர்கள் பல பேர், தத்தம் மகள்களுக்கு சி றப்பான அப்பாவாக இருக்கின்றனர். காதலித்தாய், மணந்தாய், பிரிந்தாய். இப்போது சேர்ந்து வாழும் வாய்ப்பு வருகிறது. அதை உன், 'ஈகோ'வால் கெடுத்து விடாதே.
மருத்துவர்களுக்கு இரண்டு கொம்பும், இரண்டு இறக்கையுமா முளைத்திருக்கிறது. வீட்டுக்கு வெளியே நீங்கள் மருத்துவர்கள். வீட்டுக்கு உள்ளே கணவன்-மனைவி மற்றும் பெற்றோர்.
நீயும், உன் கணவரும், ஏதாவது கோவிலில் சந்தித்து பேசுங்கள். மன வேற்றுமைகளை களைந்து கொள்ளுங்கள். மீண்டும் சேர்ந்து வாழ்வது சிறப்பானதாக அமையுமா என, உறுதி செய்து கொள்ளுங்கள்.
ஒரு சுபயோக சுபதினத்தில் வீட்டு பெரியவர்கள் மற்றும் மகள் முன் நீங்கள் இருவரும் ஒன்று சேருங்கள்.
விட்டுப்போன, 16 வருட தாம்பத்யத்தை தீவிரமாக பூர்த்தி செய்யுங்கள்.
நீங்கள் செய்த காதலுக்கு மீண்டும் சேர்ந்து வாழ்ந்து ஒரு கவிதை நியாயம் படையுங்கள். வாழ்த்துகள்!
- என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
