PUBLISHED ON : ஜூன் 21, 2026

அன்பு சகோதரிக்கு,
நான், 52 வயது பெண். கணவர் வயது: 55. மத்திய அரசு பணியில் உள்ளார். எனக்கு ஒரு மகள், வயது: 23. ஒரு மகன், வயது: 21.
என்னுடன் பிறந்தவர்கள் மொத்தம், ஐந்து பேர். வீடு எப்போதும் கலகலப்பாக இருக்கும். சின்ன விசேஷம் என்றாலும், உறவினர்கள் படையெடுத்து எங்கள் வீட்டுக்கு வந்து விடுவர். அப்படி இருந்த எனக்கு, ஒரே மகன் உள்ள குடும்பத்தில், நல்ல வரன் என்று திருமணம் செய்து வைத்தனர்.
மாமனார் - மாமியார் பாதி நாட்கள் வெளியூர்களுக்கு சென்று விடுவர். கணவரும் அதிகமாக பேசக் கூடியவர் அல்ல.
அவர் அலுவலகத்திலிருந்து வந்தவுடன், அன்று நடந்த சின்ன சின்ன விஷயங்கள் உட்பட அனைத்தையும் அவரிடம் கொட்டி விடுவேன். எல்லாவற்றையும் கேட்டு, அமைதியாக சென்று விடுவார்.
என் மகள் மற்றும் மகனை தோழி, தோழனாக கருதி அவர்களிடம் நட்புடன் பேசுவதை வழக்கமாக்கி கொண்டேன். அவர்களும், எல்லா விஷயங்களையும் என்னுடன் பகிர்ந்து கொள்வர். காபி ஷாப், தியேட்டர், பிரண்ட்ஸ் வீட்டுக்கு சென்றது என, எதையும் என்னிடம் மறைக்காமல் சொல்லி விடுவர்.
நானும், வழக்கம் போல், எல்லாவற்றையும் கேட்டு, என் கணவரிடம் கூறி விடுவேன்.
அவரோ, என்னிடம் விஷயங்களை கறந்து, பிள்ளைகளை திட்டி, மனதை நோகடிப்பார். இப்படி பல முறை நடந்திருக்கிறது. நானும், வாயை கட்டுப்படுத்தி கொள்ள நினைத்தாலும் முடிவதில்லை.
ஒருநாள், என் மகள், தான் ஒரு பையனை காதலிப்பதாகவும், நல்ல பர்சனாலிட்டி, குணம், பழக்கவழக்கங்கள், வேலை, கை நிறைய சம்பளம், கண்ணியமான குடும்பம் என்று கூறினாள்.
ஆனால், 'வேறு ஜாதியை சார்ந்தவன். அப்பா, ஜாதியை காரணம் காட்டி, பெரிய பிரச்னை செய்வார். நான் உடனடியாக நல்ல வேலையில் சேருவது தான் குறிக்கோள். அப்பாவிடம் இப்போதே போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டாம். சமயம் வரும்போது நானே பக்குவமாக கூறிக் கொள்கிறேன். இப்போதைக்கு எதையும் அப்பாவிடம் கூற வேண்டாம். கல்யாணத்துக்கு அவசரமும் இல்லை. நானும் ஓடிப் போக மாட்டேன்...' என்று தெளிவாக என்னிடம் கூறினாள், மகள். நானும், சம்மதம் தெரிவித்தேன்.
ஆனால், ஒருநாள், கணவரின் நண்பர் ஒருவரின் மகனுக்கு திருமணம் நிச்சயமாகியிருப்பதை கூறும்போது, கவனக் குறைவாக மகளின் காதலை போட்டு உடைத்து விட்டேன். அதைக்கேட்டு, கொந்தளித்தவர், அந்த பையனை பற்றி விசாரித்து, அவனது வீட்டுக்கே சென்று பிரச்னை செய்ததோடு, மகளையும் அடித்து விட்டார்.
அப்போது தான் என் தவறு புரிந்தது. அதிலிருந்து என் மகள் என்னுடன் பேசுவதே இல்லை.
'அக்காவோட வாழ்க்கையே சீரழிச்சுட்டீங்க...' என்று மகனும், என்னை குற்றம் சாட்ட, வெறுத்து போனேன்.
குற்ற உணர்ச்சியில், அல்லாடுகிறேன். சமீபகாலமாக என் கணவரிடம் எந்த விஷயத்தையும் சொல்லாமல் தவிர்க்கிறேன். அதற்கும் என்னை திட்டுகிறார், கணவர். மகள் விரும்பிய வாழ்க்கையை அமைத்து தரவும், கணவரை சமாதானப்படுத்தவும் வழி சொல்லுங்கள், சகோதரி.
-இப்படிக்கு, உங்கள் சகோதரி.
அன்பு சகோதரிக்கு,
கணவரிடம் பிறந்த வீட்டு ரகசியம் மற்றும் வயதுக்கு வந்த மகள், மகன் சார்ந்த ரகசியங்களை மனைவி கூறலாமா, வேண்டாமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. பதில், ஆளுக்கு ஆள் வேறுபடும். முன்கோபக்கார கணவர் மற்றும் அவசரபுத்தி கணவர் என்றால், பெரும்பாலும் முடிவு கெடுதியாக தான் முடியும். மகளின் காதலை கணவரிடம் போட்டுடைத்தது தேச துரோக குற்றமல்ல. நீ சொல்லாவிட்டாலும், அடுத்த சில நாட்களில் வேறு ஏதாவது வழியில், விஷயம் உன் கணவரின் காதுகளுக்கு போயிருக்கக் கூடும்.
இன்றைய தலைமுறை யுவன்-யுவதிகளின் காதல்கள், பெரும்பாலும் பித்தலாட்ட தில்லுமுல்லு காதல்கள். காதல் என்ற பெயரில் அவர்கள் வாழ்க்கையை சூதாடுகின்றனர். தீர விசாரிக்காமல் மகளின் குற்றத்தில் பங்குதாரர் ஆகாதே.
மகனிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்து.
மகள் காதலிக்கும் ஆணின் பெயர், முகவரி, மொபைல் எண், வேலை பார்க்கும் இடம் பற்றி தெரிந்து கொள்.
நீயும், உன் மகனும் ஒரு, துப்பறியும் நிறுவனத்தை அணுகுங்கள்.
அந்த நிறுவனம், துப்பறிந்து பையனை பற்றி நல்லவிதமாக அறிக்கை கொடுத்தால், உன் உடன் பிறப்புகளிடம் பேசு. மகனிடம், 'உன் தந்தையை இந்த திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கிறேன். கெட்டவிதமாக அறிக்கை கொடுத்தால், உன் அக்கா தன் காதலை தலை முழுக வேண்டும்...' என, நிபந்தனை விதி.
துப்பறியும் நிறுவனம், நல்லவிதமாக அறிக்கை கொடுத்தால், சகோதர - சகோதரிகளை மணமகன் வீட்டுக்கு அழைத்து போய் பூர்வாங்க பேச்சுவார்த்தை நடத்து.
அவர்கள் பக்கம் ஆட்சேபனை இருந்தால், பேசி, தீர்க்கப் பார்.
ஆட்சேபனை இல்லாவிட்டால் காயை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்து. உன் தரப்பு உறவினரையும், கணவர் தரப்பு உறவினரையும் வரவழைத்து, உன் கணவருடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்து.
கணவர் இறுதி முடிவு எடுக்கட்டும்.
மகளை அடிப்பதோ, வீண்பழி பேசவோ கூடாது என்ற நிபந்தனையுடன் உன் கணவரை, உன் மகளிடம் பேச அனுமதி. இருவரும் தனிமையில் பேசட்டும்.
இந்த காதல் திருமணம் நடந்தால், நிகழப்போகும் சாதக, பாதகங்களை இருவரும் அலசி ஆராயட்டும்.
பெற்றோர் நிச்சயிக்கும் திருமணம் போல் படிப்படியாக செயல்படு. திருமணத்திற்கு பின், எல்லாம் நன்றாக நடந்தால் உன்னை பாராட்ட மாட்டார்கள். கெட்டவிதமாய் ஒன்று நடந்தாலும் உன்னை, கடுமையாக குறைக்கூறி விடுவர்.
எல்லாம் நல்லதே நடக்கட்டும்.
--என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
