PUBLISHED ON : ஜூன் 28, 2026

அன்புள்ள அம்மாவுக்கு,
நான், 42 வயது பெண். பள்ளி இறுதி வரை படித்தவள். நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். ஒரு தம்பி மற்றும் தங்கை உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. என் பெற்றோர், தம்பி வீட்டு மாடியில், தனியாக வசிக்கின்றனர்.
என் கணவர் வயது: 46. ஹார்டுவேர் கடை உரிமையாளர். கணவருக்கு ஒரே அக்கா, திருமணமாகி வெளியூரில் வசிக்கிறார். என் மாமனார் - மாமியார் கிராமத்தில் வசிக்கின்றனர். எனக்கு ஒரு மகள்.
திருமணமான சில ஆண்டுகள் மட்டுமே வாழ்க்கை இனிமையாக சென்றது. திடீரென, கணவருக்கு மனநல கோளாறு ஏற்பட்டது. தீவிர சிகிச்சைக்கு பின் குணமானார். ஆனாலும், ஏனோ தானோ என்று வாழ்கிறார். முன்பிருந்த சுறுசுறுப்போ, தொழில் மீது கவனமோ இல்லை.
காலையில் எழுந்து, குளித்து, சாப்பிட்டு, கடைக்கு செல்வார். அவரால் தொடர்ந்து கணக்கு வழக்குகளை பார்க்க முடியாததால், நான் சமைத்து, மகளுக்கு தேவையானதை செய்து, பள்ளிக்கு அனுப்பிவிட்டு, கடையை பார்த்துக்கொள்ள சென்று விடுவேன்.
கணவர் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு துாங்கி விடுவார். இடையில், நான் சாப்பிட, பள்ளியிலிருந்து வரும் மகளுக்கு டிபன் செய்து தர வீட்டுக்கு வந்து விடுவேன். அப்போதெல்லாம் கடையை, பணியாளை பார்த்துக் கொள்ள சொல்லி வருவேன்.
தொழிலை சரிவர கவனிக்க முடியாமல் தவிக்க, என் அப்பா வந்து, கடை பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
என் கணவர், என்னிடமோ, மகளிடமோ எந்த அக்கறையும் இல்லாமல், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார்.
மகளை நல்லபடியாக வளர்க்க வேண்டுமே என்று, முழு கவனத்தையும் அவள் மீது வைத்தேன்.
அவளும் நன்றாக படித்தாள். பி.இ., படிக்க விரும்பியதால், கல்லுாரியில் சேர்த்தேன்.
இன்னும் ஒரு வருட படிப்பு இருக்க, காதலில் விழுந்தாள் அவள். என்னிடம் விஷயத்தை கூற, அப்பையனை பற்றி விசாரித்தேன். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன், அவனுக்கு, இரு அக்கா மற்றும் ஒரு தம்பி இருக்கின்றனர்.
இவன் படித்து முடித்து, சம்பாதித்து தான் அக்காக்கள் திருமணத்தை நடத்த வேண்டும் என்ற சூழ்நிலை.
மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டுமே என்ற அக்கறையுள்ள அம்மாவாக, 'அவன் வேண்டாம். முதலில் படிப்பை முடி. பிறகு நல்ல வரனாக பார்க்கலாம்...' என்று மகளிடம் கூறினேன்.
என் கணவரிடமும் விஷயத்தை கூற, 'முதலில் படிப்பு முடியட்டும்...' என்று மொட்டையாக கூறி, சென்று விட்டார்.
ஒருநாள், திடீரென, அப்பையனுடன் சென்று விட்டாள், என் மகள். அந்த பையனின் நண்பர்கள் சேர்ந்து, இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர் என்று பிறகு அறிந்தேன். மனம் நொந்து போனேன். படிப்பும் இல்லாமல், வீட்டு வேலைகள் எதுவும் செய்ய தெரியாத என் மகள், அந்த வறிய குடும்பத்தில் எப்படி வாழ்க்கையை நகர்த்துவாளோ என்று நினைத்து வருந்துகிறேன்.
கணவரின் அரவணைப்பும், மகளின் ஆதரவும் இல்லாமல் தனி மரமாக நிற்கிறேன். இனி, யாருக்காக வாழணும் என்ற கேள்வியே என் முன் விஸ்வரூபமாக எழுந்து நிற்கிறது.
நான் என்ன செய்வது அம்மா?
-இப்படிக்கு, உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு,
நன்றாக இருந்த உன் கணவர், திடீரென்று மனநலம் பாதிக்கப்பட்டார். அதை உரிய நேரத்தில் கண்டறிந்து உன்னால் தடுக்க முடிந்ததா?
நன்றாக படித்த உன் மகள், திடீரென்று ஓர் ஏழை வாலிபனை காதலித்து அவனுடன் ஓடிப் போனாள். அதை உரிய நேரத்தில் கண்டறிந்து உன்னால் தடுக்க முடிந்ததா?
அப்படி தடுக்கும் சக்தி உன்னிடம் இல்லை. இயற்கையாய் நடக்கும் ஓர் அசம்பாவிதத்தை தடுக்கும் அதிகாரம் உலகின் எந்த மனிதரிடமும் இல்லை.
மனதால், உடலால், கணவனுக்கும், மகளுக்கும் என்ன செய்ய முடியுமோ அதை செய். அதற்குமேல் இறைவனின் விருப்பம்.
உன் மகள், தன் காதலை உன்னிடம் கூறிய போது, நீ, உன் பெற்றோரிடமும், தம்பியிடமும் கலந்தாலோசித்திருக்க வேண்டும்.
அதிகபட்சம் அவர்கள், உன் மகளிடம் பேசி, அவளின் எண்ணத்திற்கு தற்காலிக முட்டுக்கட்டை போட்டிருப்பர்.
உன் மகள் மேஜர். தனக்கு பிடித்தவனை காதல் திருமணம் செய்து கொண்டாள். அதற்காக குற்ற உணர்ச்சி கொண்டு அழுது புலம்பாதே, அரற்றாதே.
நீயும், பெற்றோரும், தம்பியும் தற்சமயம் உன் மகள் இருக்கும் வீட்டுக்குப் போங்கள். மகளையும், மருமகனையும் ஆசிர்வதியுங்கள். மருமகனின் பெற்றோர் இருந்தால், பெற்றோர் மற்றும் அவனது இரு அக்காக்களை, ஒரு தம்பியை நலம் விசாரியுங்கள்.
பட்டுப்புடவை மற்றும் சீர் செனத்திகளை பரிசளியுங்கள்.
உன் மகளும், மருமகனும் தொடர்ந்து கல்லுாரிக்கு போய் படிக்க அவர்களை முடுக்கி விடுங்கள்.
கல்லுாரி சென்ற நேரம் தவிர்த்து, மீதிநேரங்களில் உங்கள் மருமகனை ஹார்டுவேர்ஸ் கடையை பார்த்துக் கொள்ள சொல்.
ஒட்டுமொத்தத்தில் மருமகனின் குடும்பத்தை முழுமையாக தத்தெடு.
மகளையும், மருமகனையும் உங்கள் ஊருக்கு வரச்செய்து ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்து.
உன் மகளின் படிப்பு முடியும் வரை கர்ப்பம் தரித்து விடாமல் பார்த்துக்கொள்.
நான் சொல்வதெல்லாம் சுலபமாக நடந்து விடும் என்று நினைக்க வேண்டாம். உன் மகளுக்கும், மருமகனுக்கும், 'ஈகோ' தலைதுாக்கி, உன் யோசனைக்கு உடன்பட மறுக்கலாம்.
'நான் செய்யும் ஏற்பாடுகள் உங்கள் எதிர்காலத்தை பிரகாசமாக்கும். படித்த படிப்பு வீணாகாது. தகுந்த நேரத்தில் குழந்தை பெறுவாய். உன் நாத்தனார்களுக்கும், கொழுந்தனுக்கும் சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பேன். அடுத்த மூன்று ஆண்டுகள், நீங்கள் இருவரும் ஒத்துழைத்தால், நீங்கள் செய்த தவறுகளை சரி செய்து கொடுத்து விடுவேன்...' என்று உறுதி அளி.
நீ சொல்வதை அவர்கள் கேட்க மறுத்தால், அவர்களின் போக்கில் விடு.
பெற்றோரின் அரவணைப்புடன் கணவருக்கு தொடர் சிகிச்சைகள் மேற்கொண்டபடி, ஓர் சாத்வீகமான வாழ்க்கையை வாழப் பார். நீ, தனிமரமல்ல; அப்பா, அம்மா, தம்பி கொண்ட தோப்பு.
உன் அரவணைப்பு இல்லாவிட்டால், உன் மகள் - மருமகன் தோற்று விடுவர் என, நினைக்காதே. அவர்கள் கடுமையாக உழைத்து, மிகப்பெரிய வெற்றியை ஈட்டினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.
பாறை இடுக்கிலும் செடி முளைக்கும் மகளே!
- என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
