தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

2


PUBLISHED ON : ஜூலை 12, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 12, 2026

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவுக்கு,

நான், 35 வயது பெண். படிப்பு : பி.காம்., எனக்கு ஒரு தம்பி. எனக்கு, திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகின்றன. ஏழு வயதில் ஒரு மகனும், ஐந்து வயதில் ஒரு மகளும், உள்ளனர். கணவர் அரசு பணியில் உள்ளார். நான், இல்லத்தரசி.

கல்லுாரியில் படிக்கும் போது, என் தோழிகளிடம் சந்தோஷமாக, 'எனக்கு வரப்போகும் என்னவருடன் சந்தோஷமாக கைக்கோர்த்து நடக்க வேண்டும். இருவரும் சேர்ந்து வெளியிடங்களுக்கு சென்று வர வேண்டும். பிறந்த நாள், திருமண நாளுக்கு ஆசையாக பரிசு தந்து அசத்த வேண்டும். ஊரும், உறவினர்களும் பொருத்தமான ஜோடி என, பாராட்ட வேண்டும்...' என்றெல்லாம் கூறுவேன்.

ஆனால், நிஜத்தில், அதற்கு முரணாக வந்து அமைந்தார், என் கணவர்.

திருமணத்தன்று, என் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்ததோடு சரி. அதற்கு பின், இந்த, 10 ஆண்டு திருமண வாழ்க்கையில், வீட்டு ஹாலில் கூட அருகருகே இருவரும் அமர்ந்ததில்லை. தாம்பத்தியம் என்பது அவரை பொறுத்தவரை ஒரு கடமை, அவ்வளவே! அன்பு, அரவணைப்பு என்றால் என்னவென்றே தெரியாமல் இருக்கிறார்.

நினைப்பதெல்லாம் நடக்காது, எதிர்பார்த்தது கிடைக்காது என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.

எனக்கோ அல்லது குழந்தைகளுக்கோ உடல் சுகமில்லை என்றால் கூட, அனுசரணையாக இரண்டு வார்த்தை பேச மாட்டார். தனக்கும், இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் நடந்து கொள்வார்.

ஆனால், அலுவலகத்தில், 'நண்பர்களுடன் கலகலப்பாக, நகைச்சுவையாக பேசுவதில் வல்லவர்...' என்று, அவரது உறவினர் ஒருவர் சொன்னார்.

ஒருவேளை என்னை திருமணம் செய்து கொண்டதில் அவருக்கு விருப்பம் இல்லையோ என்று நினைத்து, மாமியாரிடம் ஒரு முறை கேட்டேன். பதில் ஏதும் கூறாமல் மவுனமாக இருந்தார்.

நல்ல வேலை, சம்பளம், மனைவி, குழந்தைகள் என்று எல்லாம் இருந்தும், இவர் ஏன் இப்படி உம்மணாம்மூஞ்சியாக இருக்கிறார். மீதி வாழ்க்கையையும் இப்படியே தான் கடந்து செல்ல வேண்டுமா? மனம் விட்டு பேசவும் மறுக்கிறார்.

இந்த ஆண்கள் ஏன் வீட்டில் ஒரு மாதிரி, வெளியில் ஒரு மாதிரி இருக்கின்றனர்?

- இப்படிக்கு, உங்கள் மகள்.

அன்பு மகளுக்கு,

எப்போதுமே திருமணமான ஆண்களுக்கு நான்கைந்து முகங்கள் உண்டு.

* பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகளுக்கு ஒரு முகம்

* மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஒரு முகம்

* அலுவலக முதலாளி மற்றும் சகஊழியர்களிடம் ஒரு முகம்

* அழகிய பெண்களிடம் ஒரு முகம்

* பொது மக்களிடம் ஒரு முகம்.

நீ, உன் கணவருக்கு எழுதி கொடுக்கப்பட்ட கொத்தடிமை. கொத்தடிமைகளின் அபிலாஷைகளை தெரிந்து கொள்வதே அனாவசியம். வீட்டுக்கு வாங்கப்பட்ட பொருட்களில் மனைவியும் ஒருவர் என்ற எண்ணம் உள்ளவராக இருக்கிறாரோ என்னவோ!

இப்படிப்பட்டவர்கள், தனக்கும், வீட்டில் உள்ளவர்களுக்கும் இடையே எந்த சம்பந்தமும் இல்லை, என்பது போல், 'பேயிங் கெஸ்ட்' போல தன்னை பாவிக்கிறாரோ என்று நினைக்கிறேன்.

'என்னை திருமணம் செய்து கொண்டதில் உங்கள் மகனுக்கு விருப்பம் இல்லையோ?' என, உன் மாமியாரை கேட்டிருக்கிறாய்; அவர் மவுனம் சாதித்திருக்கிறார். இதிலிருந்து என்ன தெரிகிறது? உன் கணவரின் உம்மணாம் மூஞ்சித்தனம் மரபியல்ரீதியாக வந்திருக்கிறது.

திருமணமான ஆண்களில் ஆயிரம் வகை உண்டு. ஒருவரைப் போல ஒருவர் இல்லவே இல்லை. மனைவியிடம் நல்லபெயர் வாங்காத ஆண் வெளியுலகில் ஓர் ஆணி கூட பிடுங்க முடியாத வெத்துவேட்டு.

பி.காம்., படித்த நீ, ஒரு வேலையில் இருந்து சொந்தக்காலில் நின்று சம்பாதித்தாய் என்றால், உன் கணவரின் கண்களுக்குள் விரலை விட்டு ஆட்டி விடலாம்.

அலுவலகத்தில் மேலதிகாரியிடம் சிரித்து, 'ஜால்ரா' அடித்தால் பதவி உயர்வு, அலுவலக ஆண்களிடம் சிரித்து கூத்தாடினால் ஓசிக் குடி கிடைக்கும்.

உன்னிடம் சிரித்துப்பேசி, உன் கணவருக்கு புதிதாய் என்ன கிடைத்து விடப்போகிறது?

நான் சொல்வது போல செய்.

நீயும், உன் குழந்தைகளும், உன் கணவரிடம் ஒரு வாரம் பேசாமல் முகத்தை துாக்கி வைத்துக் கொள்ளுங்கள். சாப்பாட்டை, தட்டில் போட்டு, டைனிங் டேபிளில் வைத்து விடு. மாமியாரை ஓர் அந்நியரை பார்ப்பது போல பார். மகனும், அம்மாவும் அரண்டு போவர்.

உன் கணவர் மனம் பொறுக்காமல், 'என்ன நடக்கிறது இங்கு? எல்லாரும் ஏன் இப்படி இருக்கிறீர்கள்?' என, கேட்பார்.

'இப்படித்தான் நான், கடந்த 10 வருஷமா குடும்பம் நடத்துறேன்! நல்லா பேசுறியா, சிரிக்கிறியா, பிள்ளைகளை தான் கொஞ்சுறியா, பதில் சொல்...' என, நாக்கை பிடுங்கிற மாதிரி கேள்.

உன் கணவர் உடனடியாக திருத்தி விடுவார் என, சொல்வதற்கில்லை. ஆனால், ஒரு உயர் அழுத்த மின் கம்பியை மிதித்த குரங்கு போல துாக்கி வீசப்படுவார்.

இதை ஒரு, தற்காலிக வெற்றியாக கருது. நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக மாற வாய்ப்புள்ளது.

- என்றென்றும் தாய்மையுடன்,சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us