தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

6


PUBLISHED ON : ஆக 09, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 09, 2026

6


6
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவுக்கு,

நான், 30 வயது ஆண். முதுநிலை பட்டப்படிப்பு படித்து, அரசு பணியில் உள்ளேன். என் பெற்றோருக்கு நான் ஒரே மகன். சொந்த ஊரில் சின்னதாக மளிகை கடை வைத்துள்ளார், என் அப்பா. நான், பணிபுரியும் ஊரில், வாடகை வீட்டில் தங்கியுள்ளேன்.

நானும், வேறொரு ஜாதிப்பிரிவை சேர்ந்த பெண்ணும், மூன்று ஆண்டுகளாக காதலித்தோம். விஷயம், அப்பெண்ணின் வீட்டுக்கு தெரிந்ததும், என்னை யாரென்றே தெரியாது. நண்பர்களாக மட்டுமே பழகியதாக என்று கூறி, என்னை கழட்டி விட்டு விட்டாள்.

எங்களது விஷயம் தெரிந்த, அவளது உறவுக்கார பெண்ணின் உதவியை நாடினேன். அப்பெண்ணை, காதலியிடம் பேச சொன்னேன்.

'திருமணம் செய்யும் எண்ணத்தில் பழகவில்லை. ஜாதியும் வேறு என்பதால், வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள். போராட்டத்துடன் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டாம் என்று தான் விலகிக் கொண்டேன்...' என்று கூறியிருக்கிறாள், என் காதலி.

இது நடந்து, சில மாதங்களுக்கு பிறகு, வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு, வேறு ஊருக்கு சென்றுவிட்டாள், என் முன்னாள் காதலி.

அந்த உறவுக்கார பெண், எங்கள் அலுவலகத்துக்கு அருகில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிவதால், அவளை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

அவளே ஒருநாள், 'நானும் காதலில் தோல்வியடைந்தவள் தான். எனக்கு அம்மாவும், ஒரு தங்கை மட்டும் உள்ளனர். நாம் திருமணம் செய்து கொள்ளலாமா?' என்று கேட்டாள்.

இங்கு ஜாதி பிரச்னை வராதா? என்று நினைத்து, முதலில் ஒதுங்கினேன். ஆனால், அப்பெண் மீண்டும் மீண்டும் கேட்டதால், 'உன் அம்மாவிடமும், தங்கையிடமும் சம்மதம் வாங்கி வா. நானும், என் பெற்றோரிடம் பேசுகிறேன்...' என்று கூறினேன்.

'அம்மாவும், தங்கையும் எதுவும் சொல்ல மாட்டார்கள்...' என்று கூறி விட்டாள்.

வழக்கம்போல் தினமும் சந்தித்து, பேசி வந்தோம்.

திடீரென ஒருநாள், அவள் என்னிடம், 'இரண்டு ஆண்டுகளுக்கு முன், என் தங்கை, அவளுடன் படிக்கும் ஒருவனால் பாதிக்கப்பட்டாள். தங்கையை அந்த இக்கட்டிலிருந்து காப்பாற்ற, என்னுடன் பணிபுரியும் ஒருவனின் உதவியை நாடினேன். அவனும் தலையிட்டு, பிரச்னையை தீர்த்து வைத்தான். ஆனால், அதற்கு பதிலாக என்னையே கேட்க, வேறு வழியில்லாமல் அவனுக்கு உடன்பட்டேன்.

'அதற்கு பின், அவன், என்னை தொந்தரவு செய்வதில்லை. இந்த விஷயம் உனக்கு தெரிய வேண்டுமென்பதற்காக தான் கூறுகிறேன்...' என்றாள்.

முதலில் இதை என்னால் நம்ப முடியவில்லை. இதுபற்றி தீவிரமாக விசாரிக்கவும் தயக்கமாக இருக்கிறது. இப்படியொரு சம்பவமே நிகழ்ந்திருக்காது என்றும் தோன்றுகிறது. ஒருவேளை, என்னை சோதிக்கிறாளா என்றும் தெரியவில்லை.

இப்போது, என் வீட்டில் எனக்கு பெண் பார்த்து வருகின்றனர்.

உண்மையில், அப்படி நடந்திருந்தால், அதை மறந்து, அவளை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். அவள், என்னை முழுமையாக நம்புகிறாளா என்று அறிந்து கொள்வது எப்படி? குழப்பமாக இருக்கிறது. நல்ல ஆலோசனை கூறுங்கள், அம்மா.

இப்படிக்கு, உங்கள் மகன்.

அன்பு மகனுக்கு,

முதுநிலை பட்டப்படிப்பு படித்துள்ளாய். நிலையான அரசுப்பணியில் உள்ளாய். வீட்டுக்கு ஒரே மகன். மூன்று ஆண்டு காதல். இத்தனை, 'பிளஸ் பாயின்ட்'கள் இருந்தும், உன் காதலி உன்னை விட்டு போகிறாள் என்றால், உன்னிடமிருக்கும் சில எதிர்மறை குணாதிசயங்கள் அவளை பயமுறுத்தியிருக்கக்கூடும். பெண்களுக்கு, காதல் -திருமணத்தை விட, பாதுகாப்பு உணர்வே அடிப்படை. பாதுகாப்பும், அங்கீகாரமும் தராத ஆணை, ஒரு பெண் மிக எளிதாக துாக்கி எறிவாள்.

உன்னை நீயே சுயபரிசோதனை செய்.

உன்னுடைய கெட்ட குணங்களை, உன் நலனுக்காகவும், உனக்கு மனைவியாய் வரப் போறவளின் நலனுக்காகவும் விட்டொழி.

இப்போது, உன் இரண்டாவது காதலுக்கு வருவோம்.

'மைனஸும் மைனஸும் பிளஸ்' ஆகும் என்பது கணிதத்தின் ஓர் அடிப்படை. காதல் தோல்வியால் காயப்பட்ட இருவர் ஜோடி சேர்வது நியாயமானது தான்.

நன்கு கவனி. உன் இரண்டாவது காதலி, உன்னை விட மிகவும் புத்திசாலி. எதிராளிகளை துல்லியமாக எடை போடுபவள்.

தங்கையை காப்பாற்றிய நண்பனுக்கு, உன் காதலி ஒரு நாள் தாம்பத்யத்தை எலும்புத் துண்டாய் வீசியிருப்பதாக கூறுகிறாள்.

இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று பார்ப்போம்.

* பொய். ஆழம் பார்க்கிறாள்

* உண்மை. மன்னித்து ஏற்றுக்கொள்ள சொல்கிறாள்

* விரும்பிதான் போனாள்

* 'வேறு காதலன் கிடைத்து விட்டான். நீ தேவையில்லை...' என்ற மறைமுக உணர்த்துதல்.

நீ, ஒரு துப்பறிவாளன் போல, நடந்த அல்லது நடக்காத ஒரு சம்பவத்தை துப்பறிய கிளம்பாதே; யானைப் பொறியில் போய் சிக்கிக் கொள்ளாதே.

ஒரே ஒரு காரியம் செய்.

அவளை கோவிலுக்கு கூப்பிடு. சாமி கும்பிட்டு, இருவரும் மனம் விட்டு பேசுங்கள். உன் மீது அவளுக்கு ஏதாவது அதிருப்தி இருந்தால், அதை நீக்க பார். 'உன்னை திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லாமல் தான் ஒரு பொய் புனைவை கூறினேன்...' என, அவள் சொன்னால், 'குட்பை' சொல்லி, நல்ல நண்பர்களாக விலகுங்கள்.

-என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us