PUBLISHED ON : ஆக 23, 2026

அன்பு சகோதரிக்கு,
நான், 44 வயது பெண். பிளஸ் 2 வரை படித்துள்ளேன். என், 20வது வயதில் எனக்கு திருமணமானது. கணவர் சொந்தமாக லாரி வைத்து, நடத்தி வந்தார். எங்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள்.
பத்து ஆண்டுகளுக்கு முன், விபத்து ஒன்றில் என் கணவர் கால்கள் இரண்டையும் இழந்து, முடமாகி போனார். அப்போது, மகள் பள்ளியில் படித்து வந்தாள். எனக்கும் வேலை ஏதும் இல்லை.
எங்கள் இருவரது குடும்பமும் ஏழ்மை நிலையில் தான் இருந்தது. கணவரது சிகிச்சைக்காகவும், குடும்ப செலவை சமாளிக்கவும், லாரியை, ஒருவரிடம் விற்று விட்டேன். கிடைத்த பணத்தை வைத்து, ஓரளவு சமாளித்தேன்.
ஒரு கட்டத்தில் வருமானத்துக்கு வழி இல்லாமல், லாரி விற்றவரிடமே, உதவி கேட்டு சென்றேன். அவர் என்னை விட வயதில் சிறியவர். மரக்கடை 'பிசினஸ்' செய்து வந்தார். அவரது மனைவி, வேறு ஒருவருடன் சென்றுவிட்டதாக அறிந்தேன்.
'மனைவி என்னை மறந்து விட்டு போனாலும், நான் அவளை மறக்க முடியாது...' என்று கூறி, தனி மரமாக வாழ்ந்து வருகிறார்.
அவரது உறவினர்கள், மறுமணம் செய்து கொள்ள வற்புறுத்தியும் மறுத்து விட்டதாக கூறினார்.
என்னை உடன் பிறந்தவளாக நினைப்பதால், நான் கேட்கும் போதெல்லாம், பண உதவி செய்வார். என் மகளை கல்லுாரியில் சேர்த்து படிக்க வைக்கிறார். இதற்கெல்லாம் பிரதியுபகாரமாக தினமும், அவர் வீட்டுக்கு சென்று, வீட்டு வேலை அனைத்தையும் செய்து, சமையலும் செய்துவிட்டு வருவேன். இது, என் கணவருக்கு பிடிக்கவில்லையென்றாலும், வேறு வழியில்லாமல் அமைதியாக இருந்தார்.
ஆனால், அக்கம்பக்கத்தினர், எங்கள் இருவரையும் இணைத்து கேவலமாக பேச ஆரம்பித்தனர். இது, அந்த மனிதருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த, தன், 'பிசினஸை' வேறு ஊருக்கு மாற்றிக்கொண்டு சென்று விட்டார்.
ஆனாலும், என் மகளுக்கு, இதுவரை கல்லுாரி கட்டணம் கட்டி வருகிறார்.
அவர் வெளியூர் செல்வதற்கு முன், எனக்கு தனியார் மருத்துவமனை ஒன்றில், உதவியாளராக பணியில் சேர்த்து விட்டு சென்றுள்ளார். அந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருகிறேன்.
இப்போது, பிரச்னை என்னவென்றால், என் மகள், அந்த மனிதர் மீது அதிக பாசம் வைத்துள்ளாள். 'படிப்பு முடிந்ததும், அவரிடமே வேலைக்கு சென்று விடுவேன்...' என்கிறாள். அவருக்கு போன் செய்யக்கூடாது, எதுவானாலும் நான் தான், அவருக்கு போன் செய்து சொல்வேன், என்று கண்டிப்பாக கூறியுள்ளேன்.
மகள், அந்த நல்ல மனிதரின் மனதை கெடுத்து, தீரா பழிக்கு ஆளாகி விடப்போகிறாளே என்று பயமாக இருக்கிறது.
நான் என்ன செய்யட்டும் அம்மா?
- இப்படிக்கு, உங்கள் சகோதரி.
அன்பு சகோதரிக்கு,
உலகில் பெரும்பாலான ஆண்கள், எதிர்பாலின ஈர்ப்பு இல்லாமல் எந்தப் பெண்ணுக்கும் உதவி செய்வதில்லை. அபூர்வமாகத்தான் ஆண்கள் வலுக்கட்டாயமாகவோ அல்லது இருதரப்பு விருப்பமாகவோ ஒரு நாள் தாம்பத்யம் அல்லது கள்ள உறவு தேடுகின்றனர்.
மரக்கடை மனிதர் உன்னை உடன்பிறப்பாக பாவிக்கவில்லை. மனைவி இல்லாத தனிமையில் புதுஉறவை அனிச்சையாக தேடியுள்ளார்.
நீ, அவருக்கு வீட்டு வேலைகள் மற்றும் சமையல் வேலைகள் செய்து கொடுத்து அவருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளாய்.
அது, உங்களுக்குள், உடல் சாரா பிணைப்பை ஏற்படுத்தியுள்ளது.
உன் மகளுக்கு கல்லுாரி கல்வி கட்டணம் கட்டுகிறார். உனக்கு ஒருவேலையும் வாங்கிக் கொடுத்துள்ளார். இது, சாதாரண விஷயமல்ல.
ஊனமுற்ற கணவருடன் வாழும் உன்னை, உன் கணவரிடமிருந்து அவர் பிரிக்க விரும்பவில்லை. ஒருநாள் தாம்பத்யமும் அவருக்கு நோக்கமல்ல.
உன் நன்றியுணர்வு சார்ந்த ஈர்ப்பை அவர் ஆதரிக்கவும் இல்லை. உன் வாழ்க்கையில் ஒரு நல்ல மனிதரை சந்தித்து உதவிகள் பெற்றிருக்கிறாய் என, சந்தோஷப்படு.
மரக்கடை உரிமையாளருக்கு வயது 35லிருந்து 40 வயதுக்குள் இருக்கும் என யூகிக்கிறேன். அவர் வெளியூருக்கு புலம் பெயர்ந்ததும், உன் குடும்பத்துக்கு நன்மை பயக்கும் செயல்தான்.
இப்போது உன் மகள் விஷயத்துக்கு வருவோம்...
ஒரு இளங்கலை பட்டப்படிப்பு முடித்த பெண்ணுக்கு மரக்கடையில் என்ன வேலை இருக்க முடியும்.
மரக்கடை உரிமையாளரிடம் பேசி, அவரின் கைபேசி எண்ணை மாற்றச்சொல்.
மரக்கடை உரிமையாளரிடமிருந்து, தாயும், மகளும் பாதுகாப்பான துாரம் விலகுங்கள்.
மகளிடம் தனியாக மனம் விட்டு பேசி, அவளின் உள்ளக்கிடக்கை அறித்துகொள். தேவைப்பட்டால் அவருக்கு ஆக்கப்பூர்வமான அறிவுரை வழங்கு.
அதிக கல்விக்கட்டணம் தேவைப்படாத முதுகலை பட்டப்படிப்பில் மகளை சேர். மகளுக்கான கல்விக்கட்டணத்தை நீயே செலுத்து.
உன் மகளின் உலகம் விரிந்தால், தேவையற்ற ஈர்ப்புகள் கலைந்து விடும்.
-என்றென்றும் உங்கள் அன்பு சகோதரி, சகுந்தலா கோபிநாத்.
