PUBLISHED ON : செப் 13, 2026

அன்புள்ள அம்மாவுக்கு,
நான், 36 வயது ஆண். டிப்ளமோ படித்து, அரபு நாடு ஒன்றில், 'போர்மேன்' ஆக பணிபுரிகிறேன். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். எனக்கு ஒரு தம்பியும், தங்கையும் உள்ளனர்.
அங்கு முதலில், கூலி ஆளாகத்தான் சென்றேன். கொஞ்சம் கொஞ்சமாக வேலை கற்று, இன்று, 'போர்மேன்' பணிக்கு வந்துள்ளேன். இந்த நிலைமைக்கு வருவதற்கு, நான் பட்ட கஷ்டங்கள் சொல்லி மாளாது. இப்போது தான், என் குடும்பம் ஓரளவுக்கு தலை நிமிர்ந்துள்ளது. தங்கைக்கு திருமணம் செய்து வைத்தேன்.
மூன்று ஆண்டுகளுக்கு முன் எனக்கும் திருமணம் நடந்து, இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. மனைவியும், ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவள் தான். திருமணமாகி, ஆறு மாதம் மட்டும் தான் மனைவியுடன் வாழ்ந்துள்ளேன்.
சொந்த ஊருக்கு திரும்பி, வேறு ஏதாவது வேலையில் சேர்ந்து, குடும்பத்துடன் ஒன்றாக வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால், என் அம்மா, 'இன்னும் கொஞ்ச நாள் அங்கேயே வேலை செய். வீடு கட்ட வேண்டும், சிறிது நிலம் வாங்கி, தோப்பு வைக்கணும். அதற்கெல்லாம் பணம் வேண்டாமா?' என்கிறாள்.
என் மனைவியோ, 'நீங்கள் எவ்வளவு சம்பாதித்து அனுப்பினாலும், உங்க பெற்றோரும், தம்பியும் செலவழித்து விடுகின்றனர். சேமிப்பே இல்லாமல் போகிறது. வீடு கட்டுவதும் தாமதமாகிறது. மகளை படிக்க வைக்க வேண்டாமா? உள்ளூரில் இருந்தால் எங்களுக்கு பாதுகாப்பாகவும் இருக்கும்...' என்கிறாள்.
ஒருநாளைக்கு, 18 மணி நேரம் உழைக்க வேண்டியுள்ளது. சரியான உணவும், துாக்கமும் இல்லாமல், மிகவும் சோர்ந்து போகிறேன்.
அம்மாவின் பேச்சை மீறி, ஊருக்கு சென்றால், இதற்கெல்லாம், என் மனைவி தான் காரணம் என்று, அவளுடன் பிரச்னை செய்வாளோ என்று பயமாக இருக்கிறது; நிம்மதி போய்விடும். நான் என்ன செய்யட்டும் அம்மா.
- இப்படிக்கு, உங்கள் மகன்.
அன்பு மகனுக்கு,
அரபு நாட்டில் எத்தனை ஆண்டுகளாக வேலை செய்கிறாய்? உனக்கு, என்ன சம்பளம் தருகின்றனர்? மாதம் எவ்வளவு சேமிக்க முடிகிறது? ஊருக்கு பணத்தை மனைவியின் வங்கி கணக்குக்கு அனுப்புகிறாயா அல்லது பெற்றோரின் வங்கி கணக்குக்கு அனுப்புகிறாயா?
இந்தியாவில், தமிழ்நாட்டில் இதே பணியை செய்தால், உனக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும்? உனக்கு, உயர் ரத்த அழுத்தமோ, நீரழிவு நோயோ இருக்கிறதா? உன் மனைவி மற்றும் உன் அம்மாவின் குணாதிசயம் பற்றிய உன் பொதுவான மதிப்பீடு என்ன? இத்தனை ஆண்டு அரபு பணியில் எவ்வளவு சேர்த்து வைத்துள்ளாய்? உனக்கென தனி வங்கிக்கணக்கு வைத்திருக்கிறாயா?
உன்னுடைய பணியில் மனைவியையும், குழந்தையையும் அழைத்து செல்ல அனுமதி உண்டா? உன் தம்பி திருமணமானவனா அல்லது பிரம்மச்சாரியா? அவன் என்ன வேலை பார்க்கிறான்? -இது போன்ற பல இணை கேள்விகள் என்னுள் எழுகின்றன.
நீ பிறந்த ஊரில், உனக்கு நெருக்கமான உண்மையான நண்பர்கள் இருந்தால், உன் தாய் மற்றும் தம்பி செய்யும் ஊதாரி செலவீனங்களை உளவறிய சொல்.
உன் மனைவிக்கும், உன் தாய்க்கும் இடையே உள்ள உறவுமுறை பற்றி ஆய்ந்தறிய சொல். உன் சொந்த வீட்டு நிலவரத்தை முழுமையாக மோப்பமிடு.
நீ சம்பாதிக்கும் முழு பணத்தை உன் மனைவிக்கோ, உன் தாய்க்கோ அனுப்பாதே. அவரவர் குடும்பச் செலவுக்கு மட்டும் போதுமான பணத்தை அனுப்பி விட்டு, நீ, தனியாக வங்கி கணக்கில் பணத்தை சேமி. உன் தம்பியை ஒரு வேலைக்கு போகச் சொல்.
இன்னும் ஐந்து ஆண்டுக்கான செயல்திட்டம் ஒன்றினை உருவாக்கு. 60 மாத சம்பள சேமிப்பில், கட்டின ஒரு புதுவீட்டை விலைக்கு வாங்கு; வீட்டை உன் பெயரில் பதிவு செய்.
வீட்டின் முன்பகுதியை திருத்தி கடை கட்டு. அரபுநாட்டிலிருந்து திரும்பியவுடன் சில, பல காலிமனைகளை வாங்கிப்போடு. ஊர் திரும்பும் போது உனக்கு, 41 வயதாகி இருக்கும். உன் மகளுக்கு, ஏழு வயதாகி இருக்கும். உன்னுடைய ஐந்தாண்டு திட்டத்தில், இந்தியாவுக்கு இருமுறை வந்து போ.
அம்மா கோண்டுவாகவும் இருக்காதே; பொண்டாட்டி தாசனாகவும் இருக்காதே. இருவருக்கும் மத்திமமாய், நீதமாய் நடந்து கொள். கோபத்தில் அவசரத்தில் முடிவெடுக்காதே.
நீ பணி செய்யும் நிறுவனத்தின் நிலை, உன் உடல் நிலை, பணசேமிப்பு திட்டம், ஊரில் நீ செய்யப் போகும் முதலீடு, தாம்பத்ய எதிர்பார்ப்புகள், ஊர் திரும்பியதும் நீ செய்யப் போகும் பணி எல்லாவற்றையும் தெளிவான மனதோடு அசைபோட்டு எந்த முடிவையும் எடு.
தினம் மனைவியுடன், 'வீடியோகால்' போட்டு பேசு.
திட்டம் போட்டு காய் நகர்த்தி நீ இந்தியா திரும்பினால், உன் இரண்டாவது, 'இன்னிங்ஸ்' ஜெகஜோதியாய் அமையும். வாழ்த்துகள்!
--என்றென்றும் தாய்மையுடன்,சகுந்தலா கோபிநாத்.
