PUBLISHED ON : செப் 27, 2026

அன்பு சகோதரிக்கு,
நான், 42 வயது ஆண். தனியார் நிறுவனம் ஒன்றில், உயர் பதவியில் இருக்கிறேன். எனக்கு ஒரு தங்கை. அவளுக்கு திருமணமாகி விட்டது.
நான் திருமணமாகி, விவாகரத்தும் பெற்றவன். முதல் மனைவியால், குழந்தை பாக்கியம் தர முடியாது என்பதால், அவளாகவே விவாகரத்து வாங்கிக் கொண்டாள்.
இரண்டாவது திருமணம் செய்து, இரு குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது மனைவி படித்தவள், நல்ல குடும்பத்தை சேர்ந்தவள் என்று தான் திருமணம் செய்தேன். ஆனால், படித்தவள் போல் நடந்து கொள்வதில்லை.
எதற்கெடுத்தாலும் பிரச்னை செய்து வருகிறாள். என் பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டாள். இப்போது அவர்கள், என் தங்கையின் வீட்டு மாடியில் குடியிருக்கின்றனர். தங்கையும், அவள் கணவரும், அவர்களை நன்றாக கவனித்துக் கொண்டாலும், பெண் வீட்டில் வந்து தங்கும்படி ஆகிவிட்டதே என்று வருத்தப்படுகின்றனர். 'கொஞ்ச நாட்களுக்கு பின், அழைத்து செல்கிறேன்...' என்று கூறி சமாதானப்படுத்தி வருகிறேன்.
மனைவியின் பெற்றோர், அவளது மூன்று சகோதரிகள் மற்றும் உறவினர்கள் அடிக்கடி என் வீட்டிற்கு வந்து தங்கி, ஜாலியாக இருக்கின்றனர். என்னால் எதுவும் செய்ய முடியாத நிலை. ஏதாவது சொல்லி விட்டால், அவ்வளவு தான். வீடே இரண்டாகி விடும். குழந்தைகள் தான் பாதிக்கப்படுவர் என்று அமைதியாக இருக்கிறேன்; குழந்தைகளை நினைத்து தான் விவாகரத்து செய்வதை தவிர்த்து வருகிறேன்.
அதுமட்டுமல்லாமல், ஏற்கனவே ஒரு முறை விவாகரத்து ஆகியுள்ள நிலையில், இரண்டாம் முறையும் விவாகரத்து செய்தால், என் மீது தான் குறை இருக்கிறது என்று கேவலமாக பேசுவரே என்றும் பயப்படுகிறேன்.
என் மனைவியோ, என் குடும்பத்தை பற்றி தரக்குறைவாக பேசி, 'என் பெற்றோரின் கட்டாயத்தால் தான் உன்னை திருமணம் செய்து கொண்டேன்...' என்கிறாள்.
எனக்கு எந்தவித கெட்டப்பழக்கமும் இல்லை. நிறுவனத்தில் எனக்கு நல்ல பெயர் உண்டு. 'என்னிடம் ஏதாவது குறை இருந்தால் சொல்லு திருத்திக் கொள்கிறேன்...' என்று கூட சொல்லி பார்த்து விட்டேன். ஆனால், அவள் மாறுவதாக இல்லை.
'நண்பர்கள் யாரும் வீட்டுக்கு வரக்கூடாது. நானும் யாருடனும் பழகக் கூடாது...' என்கிறாள். அவளது பெற்றோரிடமும் பேசிப் பார்த்து விட்டேன். எனக்கு தான், 'அட்வைஸ்' செய்கின்றனர். வாழ்க்கையே வறண்ட பாலைவனம் போல் இருக்கிறது.
நான் என்ன செய்வது? நல்ல ஆலோசனை தாருங்கள் அம்மா.
-இப்படிக்கு, உங்கள் சகோதரன்.
அன்பு சகோதரனுக்கு,
உன் கடிதத்தை, 10 முறைக்கு மேல் படித்து விட்டேன். மனக்காயங்களை திறந்து காட்டி இருக்கிறாய்.
உன்னை முழுமையாக நம்பி உனக்கான பதிலைக் கூறுகிறேன்.
நீயும் படித்தவன். உன் இரண்டாவது மனைவியும் படித்தவள். நீங்கள் இருவரும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று நினைக்கிறேன். தாம்பத்தியத்தில் குறை இல்லை. இரண்டு குழந்தைகளும் பெற்றிருக்கிறாள், உன் மனைவி. இருந்தும் உன் மனைவிக்கு இத்தனை அகங்காரம் ஏன்?
உன்னிடம் இருக்கும் பலவீனங்களை அவள் மோப்பம் பிடித்துள்ளாள். அதாவது,
* நீ ஊர் வாய்க்கு பயப்படும் பயந்தாங்கொள்ளி
* 'சென்டிமென்ட்' பார்ப்பவன்
* தன்னிடம் எந்தவித, கெட்ட பழக்கவழக்கங்கள் இல்லாததை பெரிய, 'பிளஸ் பாயின்ட்'டாக கருதும் வெகுளி
* போக்கிரிதனத்திற்கு சலாம் போடுபவன்.
உன் மீதான இதுபோன்ற மதிப்பீடுகளை கருத்தில் கொண்டு, உன்னிடமும், உன் தரப்பு உறவினரிடமும் சண்டைக்கோழி விளையாட்டு விளையாடி பார்க்கிறாள், உன் மனைவி.
அடுத்தடுத்து நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்.
* இரண்டாவது மனைவி திருமண வாழ்க்கைக்கு ஒத்துவராமல் சண்டிதனம் செய்தால், அவளை விவாகரத்து செய்யக்கூடாது- என, எந்த இந்திய குற்றவியல் சட்டமும் சொல்லவில்லை. வாங்கிய புதுசெருப்பு காலுக்கு ஒத்துவராது போனால், செருப்பை மாற்றுவோமா அல்லது செருப்புக்கு ஏற்றவாறு கால்களை வெட்டிவிடுவோமா? செருப்பு என்ற வார்த்தையை உதாரணத்திற்கு கூறினேன். 99 சதவீத தமிழ்நாட்டு பெண்கள் இணக்கமாய் கணவருடன் குடும்பம் நடத்துபவர்கள். விதிவிலக்காய் சில முரட்டு பெண்கள், பெண்களின் நற்பெயரை கெடுக்கின்றனர்
* உன் இரண்டாவது மனைவியின் எரிச்சலுாட்டும் நடத்தைக்கு பின்புலமாய் ஏதாவது ஒரு காரணம் ஒளிந்திருக்கும். காரணத்தை சரி செய்து, மனைவியை நேர்படுத்து
* உன் மனைவியும், நீயும் தனியே அமர்ந்து ஒருவரையொருவர் குற்றம் சாட்டாமல், மனம் விட்டு பேசுங்கள். உன் குறைகளை அவள் பட்டியல் போடட்டும். நீ நிவர்த்தி செய். அவள் தரப்பில் இன்னென்ன விஷயங்கள் தொண்டையில், ஊவா முள்ளாய் உறுத்துகிறது என, மென்மையாகக் கூறு. உரிய அவகாசம் எடுத்து, அவள் மாறட்டும்.
இருவரும் சமாதானப் போக்கை கடைபிடிக்கா விட்டால், குடும்பநல நீதிமன்றத்தில் மனு செய்து பரஸ்பர சம்மத விவாகரத்து செய்து கொள்வோம் எனக் கூறு.
மிரட்டலாய் கூற வேண்டாம் நோயாளியின் சிகிச்சை முறைகளில், தெரிவு கொடுக்கும் மருத்துவராய் நடந்து கொள்.
எதற்குமே உன் இரண்டாவது மனைவி ஒத்துவராவிட்டால், நாலுபேர் என்ன சொல்வரோ என்ற அச்சத்தை துாக்கி எறிந்துவிட்டு, விவாகரத்துக்கான நடைமுறைகளில் இறங்கு.
வாழ்த்துகள்!
--என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
