தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

1


PUBLISHED ON : அக் 11, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 11, 2026

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவுக்கு,

நான், 29 வயது பெண். முதுநிலை பட்டப்படிப்பு படித்துள்ளேன். நான் வீட்டிற்கு ஒரே பெண். ஏழ்மையான குடும்பம். அப்பா கூலி வேலை செய்து, கஷ்டப்பட்டு என்னை படிக்க வைத்தார்.

நானும் நன்றாக படித்தேன். என் பெற்றோருக்கு ஒரே பிள்ளை என்பதால், செல்லமாக வளர்ந்தேன். இப்படி இருக்கையில் எங்கள் வாழ்க்கையில் விதி விளையாடியது. என் அப்பா திடீரென மரணமடைந்தார். என் அம்மாவும் நோயில் விழுந்தார். சொந்தபந்தங்கள் யாரும் இல்லை. என் அப்பாவின் பால்ய நண்பர், ராணுவத்தில் பெரிய பொறுப்பில் இருந்து, ஓய்வு பெற்றவர். திருமணம் ஆகாதவர். நல்ல வசதியானவரும் கூட. கம்பெனி ஒன்று வைத்திருக்கிறார். என் இக்கட்டான சூழ்நிலையில் அவர் தான் கைக்கொடுத்தார். அவர் நிறுவனத்தில், எனக்கு வேலையும் தந்து, நிறுவனத்தையும் கவனிக்க சொன்னார்.

நானும் திறம்பட நிர்வகித்து வந்தேன். என் அம்மாவின் மருத்துவ செலவையும் அவரே கவனித்து கொண்டார்.

எனக்கு திருமணம் செய்து, என் குழந்தையை பார்த்து விட்டால், கண் மூடி விடுவேன் என்று சொல்லி, என்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்தார், அம்மா.

என் முதலாளியான, என் அப்பாவின் நண்பர், ஒருநாள் என்னிடம், 'என்னை திருமணம் செய்துகொள். எனக்கு பிறகு, என் சொத்துகள் அரசுக்கு செல்வதை விரும்பவில்லை...' என்று சொல்லி, அதிர்ச்சியடைய வைத்தார்.

'இப்படி சொல்கிறீர்களே... என் வயது என்ன? உங்கள் வயது என்ன?' என்று கேட்டேன்.

'என் விருப்பத்தை உன்னிடம் சொல்லிவிட்டேன். முடிவு எடுக்க வேண்டியது நீ தான்...' என்று சொல்லி விட்டார். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. என், அம்மாவிடம் சொன்னேன். 'நமக்கு இப்படி ஒரு சோதனையா?' என்று அழுதார்.

நானும், பல நாட்கள் யோசித்து, ஒரு முடிவுக்கு வந்தேன்.

'திருமணத்துக்கு முன், உங்கள் சொத்துகள் அனைத்தும் சட்டப்படி என் பெயரில், பதிவு பண்ணி தரவேண்டும் என்றும், திருமணம் அனைவருக்கும் தெரிந்து தான் நடக்க வேண்டும், சட்டப்படி, 'ரிஜிஸ்டர்' பண்ண வேண்டும்...' என்றும் சில நிபந்தனைகள் போட்டேன்.

'சரி' என்று சொல்லி, அனைத்தையும் என் பெயரில் மாற்றி தந்தார். திருமணமும் நடந்தேறியது. வீட்டையும், கம்பெனியையும் கவனித்து கொண்டு வந்தேன். இப்போது, 'எப்படியாவது ஒரு குழந்தை பெற்று விடு...' என்று நச்சரிக்கிறார், அம்மா. நான் தயாராக இருக்கிறேன். ஆனால், அதற்கு கணவர் தயாராக இல்லை.

எங்களுக்குள் தம்பத்ய உறவு நடக்கவேயில்லை. இதுகுறித்து, அவரிடம் கேட்டால், 'என் நண்பனின் மகளை நான் திருமணம் செய்து கொண்டு, பெரும் தவறு செய்து விட்டேன்...' என்று அழுகிறார்.

'அதெல்லாம் முடிந்த கதை. இப்போது நான், உங்கள் மனைவி, என் அம்மாவின் கடைசி ஆசையையும் நிறைவேற்ற வேண்டும்...' என்று சொல்லி பார்த்து விட்டேன். ஒன்றுக்கும் பலனில்லை.

நான் என்ன செய்ய வேண்டும்.

அவருக்கு வயது: 68. பார்த்தால் அப்படி தெரியாது. 34 வயது தான் மதிக்கலாம். எந்தவொரு கெட்டபழக்கமும் கிடையாது.

உங்கள் ஆலோசனைகளை தாருங்கள், அம்மா.

-இப்படிக்கு, உங்கள் மகள்.

அன்பு மகளுக்கு,

உன்னுடைய கேள்வி, விக்ரமாதித்தனுக்கு வேதாளம் விடுகதை கேள்வி கேட்டது போல இருக்கிறது.

மிலிட்டரிக்காரர், உன்னை மணக்க சம்மதம் கேட்டதும், நீ உறுதியாக, மறுக்கவில்லை. அதற்கு பதிலாக, உனக்கு சொத்தாசையை காட்டியிருக்கிறார்; அதற்கு, உன் அம்மாவும் உடந்தை.

உன்னை அடையும் ஆசையில் தன் சொத்து அனைத்தையும் அவர் உனக்கு எழுதி வைத்து விட்டார். பொம்மை வேண்டும் என, குழந்தை அடம்பிடிக்கிறது. பொம்மை வாங்கிக் கொடுத்தால் குழந்தை, பொம்மையுடன் விளையாட மறுக்கிறது. கிடைக்கும்வரை இருந்த ஆர்வம் கிடைத்தபின் போய் விட்டது.

உறவினர் யாராவது, அவரை, 'லெப்ட் அண்ட் ரைட்' வாங்கியிருப்பார். 'என்ன காரியம் பண்ணினாய்? நண்பனின் மகள் உனக்கும் மகள்தானே? அவளை சொத்தாசை காட்டி, மணந்து பெரும் குற்றம் இழைத்து விட்டாயே?' என, சாடியிருப்பார்.

தவிர, நாற்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், 'மேல்-மெனோபாஸ்' நிலைக்கு ஆளாகி, தாம்பத்யத்தில் ஈடுபாடு இல்லாதவர்களாக மாறி விடுகின்றனர்.

மிலிட்டரிகாரரின் தாமதமான ஞானோதயம், எதற்கும் உதவாது.

வயோதிக கணவரிடமிருந்து ஒரு மனைவி தாம்பத்யத்தை எதிர்பார்ப்பது அவளின் அடிப்படை உரிமை.

நீயும், உன் கணவரும் ஒரு, பாலியல் மருத்துவரிடம் சென்று மருத்துவ ஆலோசனை பெறுங்கள். உன் கணவரின் மனதடையை, மனநல ஆலோசனை மூலம் நிவர்த்தி செய்யலாம்.

நீ அவரிடம் நெருங்கி பேசு. உடலாலும், பேச்சாலும் ஒப்பனையாலும் அவரை வசீகரி.

குளிக்கும் ஆசையில் அருவிக்கு போய்விட்டோம். கொட்டும் நீரின் அடியில் நிற்கிறோம். அதன்பின், குளிப்பது பற்றிய ஆராய்ச்சி ஏன்?

வயோதிகர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் பிரமாதமான, 'ஐக்யூ'வுடன் பிறக்கும்.

'எண்ணித் துணிக கர்மம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு!'



- என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us