தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஆக 16, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 16, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா கே

முக்கிய வேலை விஷயமாக, என்னையும், லென்ஸ் மாமாவையும், கோயம்புத்துார் போய் வர சொன்னார், ஆசிரியர்.

சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இரவு 9:05 மணிக்கு கிளம்பும், நீலகிரி எக்ஸ்பிரஸ்ஸில் எங்களுக்கு இரண்டு டிக்கெட், 'புக்' செய்யப்பட்டிருந்தது.

நானும், லென்ஸ் மாமாவும் சரியான நேரத்துக்கு ரயில் நிலையத்துக்கு சென்று விட்டோம்.

நான்கு பேர் பயணிக்கும், செகண்ட், 'ஏசி' பெட்டியில் ஏறி, 'லக்கேஜ்'களை வைத்ததும், 'மணி... இதோ வந்து விடுகிறேன்...' என்று கூறி, கீழே இறங்கி சென்றார், லென்ஸ் மாமா.

அடுத்த, ஐந்தாவது நிமிடம், டி.டி.ஆர்., மற்றும் இன்னொரு நபருடன் திரும்பி வந்தார், மாமா.

'மணி... இவர், ரயில்வே, 'யார்டு' பொறுப்பாளராக பணிபுரிந்து, இப்போது பணி ஓய்வு பெற்றவர்...' என்று, டி.டி.ஆருடன் உடன் வந்த நண்பரை அறிமுகப்படுத்தி வைத்தார்.

டி.டி.ஆர்., எனக்கு முன்பே அறிமுகமானவர் என்பதால், 'ஹலோ' சொல்லி, நலம் விசாரித்தேன்.

மணி, நண்பருடன் பேசிட்டு இரு...' என்று கூறி, டி.டி.ஆருடன் சென்று விட்டார், மாமா.

வழக்கம் போல், டி.டி.ஆரை கூட்டு சேர்த்துக் கொண்டார் என்று நினைத்து, அந்த மற்றொரு நண்பரிடம் பேச்சுக் கொடுத்தேன்.

அதற்கு முன்...

பயணிகள் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்களை நிறுத்தி வைக்கும், மிகப்பெரிய வெட்ட வெளியான இடத்திற்கு தான், 'யார்டு' என்று பெயர். சரக்கு ரயில்களை இங்கு நிறுத்தி தான், சரக்குகளை ஏற்றவும், இறக்கவும் செய்வர்.

அதேபோல், பயணிகள் ரயில்களை பொறுத்தவரை, ஒரு, 'டிரிப்' முடிந்ததும், ரயில் பெட்டிகளை, 'கிளீன்' செய்யவும், ஏதாவது, பழுது ஏற்பட்டிருந்தால், சரி செய்வதற்கும், 'யார்டி'ல் நிறுத்திய பின்தான் செய்வர்.

இது தவிர, பழைய ரயில்களையும் இங்கு நிறுத்தி வைப்பதுண்டு.

'கம்மிங் பேக் டு த பாயின்ட்!'

முன்னாள், 'யார்டு' பொறுப்பாளரான அந்த நண்பருடன் பேசியதில் கிடைத்த தகவல்கள் இதோ:

மனிதர்களைப் போலவே, ரயில்களுக்கும் ஆயுள்காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, பயணிகள் ரயில் பெட்டிகள், 25 முதல் 30 ஆண்டுகள் வரை மட்டுமே சேவையில் இருக்கும். பாதுகாப்பு குறைவு, அதிக பராமரிப்பு செலவு மற்றும் பழைய தொழில்நுட்பம் போன்ற காரணங்களாலும், ரயில் பெட்டிகளுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு விடும்.

ஓய்வு பெற்றாலும் அவற்றின் பயணம் முடிந்து விடுவதில்லை. பழைய ரயில் பெட்டிகள், சரக்கு பெட்டிகளாக மாற்றப்பட்டு, கார், டிராக்டர், டூ-வீலர் மற்றும் சிறிய வாகனங்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப் படுகின்றன. இவை, மேலும் ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை சேவையில் இருக்கும்.

முற்றிலும் பயன்பாட்டிற்கு தகுதியற்றதாக மாறிய ரயில் பெட்டிகள் பிரிக்கப்பட்டு, அதிலுள்ள இரும்பு, தாமிரம், அலுமினியம் மற்றும் பித்தளை போன்ற உலோகங்கள் மறுசுழற்சிக்கு எடுத்துக்கொள்ளப்படும். ரயில் பெட்டிகளில் இருந்த, மின் விசிறி, விளக்கு, பேட்டரி ஆகியவற்றில் நல்ல நிலையில் இருப்பவைகள் பிரிக்கப்பட்டு, மற்ற ரயில்களில் மீண்டும் பொருத்தப்படும்.

சில பழைய ரயில் பெட்டிகளின் சின்ன சின்ன பழுதுகளை நீக்கி, புது, 'பெயின்ட் அடித்து, ரயில்வே சம்பந்தப்பட்ட அலுவலகங்கள், உணவகங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளாக புதிய வடிவம் பெறும்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ரயில்கள் மட்டும், ரயில் அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்பட்டு, அடுத்த தலைமுறைக்கு நினைவு சின்னங்களாக காட்சிப்படுத்தப்படும்.

- இப்படி கூறி முடித்தார், அந்த அன்பர். தண்ணீர் பாட்டில், நொறுக்குத்தீனி என, கை கொள்ளாத அளவுக்கு வாங்கி வந்த லென்ஸ் மாமா, 'மணி... நீ சாப்பிட்டு படுத்துவிடு. நான் பிறகு வருகிறேன்...' என்று கூறி, அந்த நண்பரையும் அழைத்துச் சென்றார். நான், கையோடு கொண்டு சென்ற, மிளகாய் பொடியில் ஊறிய இட்லியையும், தயிர் சாதமும் சாப்பிட ஆரம்பித்தேன்.



ஆங்கில புத்தகம் ஒன்றில் படித்தது: மு தன்முதலில் மனித இனம் வாழ்ந்ததாக கூறப்படும் மொகஞ்சதாரோவில், தொல்பொருள் ஆய்வாளர், எர்னஸ்ட் மெக்கே என்பவரால் தோண்டி எடுக்கப்பட்டு, தற்போது, புதுடில்லியின் தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள ஒரு நிர்வாண நடன மங்கை சிலைக்கு ஒரு சுவாரஸ்யமான வரலாறு உண்டு.

நிர்வாணமாக இருக்கும் இந்த சிலை ஒரு தேசிய அவமானம் எனக்கூறி, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலை சேர்ந்த சில பாட நுால் ஆசிரியர்கள், 100 ஆண்டுகளாக கிடப்பில் போட்டிருந்தனர். ஆனால், அச்சிலை கண்டுபிடிக்கப்பட்ட நுாற்றாண்டு விழா கொண்டாட இருக்கும் இச்சமயத்தில், இந்த சிலைக்கு ஆடை அணிவிக்க முயற்சித்தனர். ஆனால், இதற்கு எதிர்ப்பு எழுந்ததால், தற்போது ஆடை அணிவிப்பு முயற்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த, பழங்கால நடன மங்கை சிலை, தற்போது இந்தியாவில் பாதுகாப்பாக இருப்பதே ஆச்சரியம் தான். காரணம், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது, புதிதாக சுதந்திரம் பெற்ற நாடுகளுக்கிடையே, நிலப்பரப்பு முதல் அகராதி வரை அனைத்தும் பிரித்துக் கொள்ளப்பட்டன. அக்காலத்தில், அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட, ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ இரண்டுமே பாகிஸ்தானில் இருந்ததால், அவற்றின் பாரம்பரியம் மற்றும் கலைப்பொருட்கள் அனைத்தும் தங்களுக்கே சொந்தம் என, உரிமை கோரியது, பாகிஸ்தான்.

இருப்பினும், விதியின் விசித்திரமான திருப்பத்தால், அதுவரை, பாகிஸ்தானின் லாகூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த பெரும்பாலான கலைப் பொருட்கள், 1944 முதல் 1948 வரை, இந்திய தொல்லியல் துறையின் தலைவராக இருந்த, புகழ்பெற்ற, சர் மோர்டிமர் வீலர் என்பவரால், கண்காட்சிக்காக, புதுடில்லிக்கு கொண்டுவரப்பட்டு, இந்தியாவிலேயே தங்கி விட்டது.

அதிலிருந்த, நிர்வாண நடன மங்கை மற்றும் அதே அளவு புகழ்பெற்ற ஆடையணிந்த பூசாரி மன்னன் ஆகிய இரண்டு சிலைகளில் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் வந்த போது, நிர்வாண சிலை வேண்டாம் எனக்கூறி, மன்னன் சிலையை எடுத்துக் கொண்டது, பாகிஸ்தான் அரசு. அதன் விளைவாகத்தான், இந்த நிர்வாண நடனமங்கை சிலை இன்று இந்தியாவில் உள்ளது.

சி.பி.எஸ்.சி., பாடத்திட்டம் கொண்ட, ஒன்பதாம் வகுப்பு பாடப்புத்தகத்தில், அச்சிலை சார்ந்த பாடமும், படமும் இடம் பெற்றுள்ளது. அதற்கு தான், பாடநுால் ஆசிரியர்களால் ஆடை அணிய வைக்க முயற்சி நடந்தது; அந்த முயற்சி ஈடேறவில்லை.

கலைப் பொருளை, கலையாக பார்க்க வேண்டும். அதுமட்டுமல்ல, நுாறாண்டுகள் பழமையான, மனித வரலாற்று ஆதாரமாக இருக்கும் பொக்கிஷம். அதன் மதிப்பு தெரியாமல், ஆடை அணிவிக்கிறேன், அலங்காரம் செய்கிறேன் என்று பொறுப்பான பாடநுால் தயாரிப்பு பணியில் இருக்கும் ஆசிரியர்கள் செய்யலாமா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us