PUBLISHED ON : ஆக 23, 2026

பா கே
அ ன்று, அலுவலகத்துக்கு இளைஞர் ஒருவரை, தன்னுடன் அழைத்து வந்தார், லென்ஸ் மாமா. 'மணி... இவர் பல்கலைக்கழகம் ஒன்றில், முனைவர் பட்டப்படிப்புக்காக ஆய்வு கட்டுரை ஒன்று எழுதி வருகிறார். அது சம்பந்தமாக, பொறுப்பாசிரியரிடம் பேச வேண்டுமாம். என்ன ஏதென்று விசாரித்து, பொறுப்பாசிரியரிடம் சொல்லிவிடு...' என்று கூறி, அந்த இளைஞரை அறிமுகப்படுத்தி வைத்தார். 'வழக்கமாக கொண்டாடப்படும் சிறப்பு தினங்கள் பற்றி அடிக்கடி, 'வாரமலர்' இதழில் வெளியாவதைப் படித்துள்ளேன். அவை பற்றிய விபரங்களை என் ஆய்வுக் கட்டுரையில் சேர்த்துக் கொள்ள பொறுப்பாசிரியரின் அனுமதி கேட்க வந்துள்ளேன்...' என்றார், அந்த இளைஞர். பொறுப்பாசிரியர் வர, இன்னும் நேரம் இருந்ததால், அவரது ஆய்வு கட்டுரை பற்றி விசாரித்தேன். கூற ஆரம்பித்தார், அந்த இளைஞர்: உ லக அளவில், ஆண்டு முழுவதும், சர்வதேச மகளிர் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம், நண்பர்கள் தினம், தொழிலாளர் தினம், சுகாதார தினம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம் என, பல சிறப்பு தினங்கள் கொண்டாடப்படுகின்றன. சில தினங்கள், வரலாற்று நிகழ்வுகளையும், சில தினங்கள், சமூக விழிப்புணர்வையும் நினைவுப்படுத்துகின்றன.
அவற்றுள், மனிதர்களின் கற்பனைக்கும், நகைச்சுவை உணர்வுக்கும் இடம் கொடுத்து உருவாக்கப்பட்ட, சில வித்தியாசமான தினங்களும், உலகின் பல பகுதிகளில் பிரபலமாக உள்ளன.
அன்றாட வாழ்க்கையில், நாம் பெரிதாகக் கவனிக்காத பொருட்கள், பழக்கங்கள், மர்மங்கள், கற்பனைக் கதாபாத்திரங்கள் என, பலவற்றுக்காகவும் தனித்தனி தினங்கள் இருப்பது, வியப்பளிக்கிறது.
அதில் சில சுவாரஸ்யமான தினங்கள்...
* செப்டம்பர் 19 அன்று, உலகின் பல பகுதிகளில், சர்வதேச கடற்கொள்ளையர் போல பேசும் தினம் வித்தியாசமான முறையில் கொண்டாடப்படுகிறது. கடந்த,1995ல், அமெரிக்காவில் இரு நண்பர்களின் யோசனையாகத் தொடங்கிய இந்த நாள், பின்னர் உலகம் முழுவதும் பிரபலமானது. இந்த நாளில் மக்கள், வழக்கமான மொழிக்குப் பதிலாக, திரைப்படங்களிலும், கதைகளிலும் வரும் கற்பனைக் கடற்கொள்ளையர்களைப் போல, 'அஹாய் மற்றும் மேட்டி' போன்ற ஆங்கிலச் சொற்களை பயன்படுத்தி, நண்பர்களிடம் வேடிக்கையாக உரையாடுகின்றனர். அதிகாரப்பூர்வமான முக்கியத்துவம் இல்லாவிட்டாலும், மக்களைச் சிரிக்க வைக்கும் தனித்துவமான நாளாக, இது விளங்குகிறது
* டிசம்பர் 5 அன்று, 'சர்வதேச நிஞ்ஜா தினம்' அனுசரிக்கப்படுகிறது. ஜப்பானிய வரலாற்றில், ரகசியமாக செயல்பட்ட உளவாளிகள் மற்றும் போர்வீரர்களாக கருதப்படும், நிஞ்ஜாக்கள், பின்னர் திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் வீடியோ கேம்கள் மூலம், உலகம் முழுவதும் பிரபலமாயினர். கருப்பு உடை, முகமூடி, அமைதியாக நகரும் திறன் போன்றவை, நிஞ்ஜாக்களின் கற்பனை உருவமாக மாறிவிட்டன. அதிகாரப்பூர்வ வரலாற்று நினைவு நாள் அல்ல என்றாலும், சிலர், நிஞ்ஜா உடைகளை அணிந்து, நகைச்சுவையாக நிஞ்ஜா போல நடந்து, இந்த நாளை கொண்டாடுகின்றனர்
* நவம்பர் 16 அன்று, 'வேர்ல்ட் பட்டன் டே' எனப்படும், உலக பொத்தான் தினம் அனுசரிக்கப்படுகிறது. சட்டையின் சிறிய பட்டன் முதல், வரலாற்று சிறப்புமிக்க ஆடை அலங்காரங்கள் வரை, மனித நாகரிகத்தில் பட்டன்களுக்கு நீண்ட வரலாறு உண்டு. பழங்காலத்தில் அவை ஆடைகளை இணைப்பதற்காக மட்டுமல்லாமல், அலங்காரப் பொருட்களாகவும் பயன்படுத்தப்பட்டன. இன்று, 'பிளாஸ்டிக்', உலோகம், மரம், கண்ணாடி உள்ளிட்ட பல பொருட்களால் பட்டன்கள் தயாரிக்கப்படுகின்றன. அருங்காட்சியகங்களிலும், சேகரிப்பாளர்களிடமும் ஆயிரக்கணக்கான பழமையான பட்டன்கள் பாதுகாக்கப்படுகின்றன. நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு சிறிய பொருளுக்கு, சிறப்பு தினமாக இருப்பது வியப்புக்குரியது
* ஜூன் 6 அன்று, சில குகை ஆர்வலர்கள், 'நேஷனல் கேவிங் டே' எனப்படும், தேசிய குகை ஆய்வு தினத்தை அனுசரிக்கின்றனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உருவான குகைகள், இன்னும் முழுமையாக ஆராயப்படாத இயற்கை உலகங்களாக உள்ளன. சில குகைகளில், பழங்கால மனிதர்களின் ஓவியங்களும், சிலவற்றில் இதுவரை அறியப்படாத உயிரினங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குகைப் பயணமும் புவியியல், தொல்லியல் மற்றும் உயிரியல் குறித்த புதிய தகவல்களை வெளிப்படுத்தக் கூடும்
* ஜ னவரி 25 அன்று, சில இடங்களில், 'நேஷனல் மிஸ்டரி டே' எனப்படும், தேசிய மர்ம தினம் கொண்டாடப்படுகிறது. தீர்க்கப்படாத குற்றங்கள், வரலாற்றுப் புதிர்கள், காணாமல் போன பொருட்கள் மற்றும் விளக்கமளிக்க முடியாத நிகழ்வுகள் மீதான மனிதர்களின் ஆர்வத்தை, இது பிரதிபலிக்கிறது. சில மர்மங்களுக்கு அறிவியல் விளக்கம் கிடைக்கிறது; சிலவற்றுக்கு ஒருபோதும் விடை கிடைப்பதில்லை. விடை தெரியாத கேள்விகளுக்கான மனிதர்களின் இயல்பான தேடலை நினைவூட்டும் நாளாக, இது உள்ளது
* மார்ச் 20 அன்று, 'நேஷனல் பாக்கெட்ஸ் டே' எனப்படும், தேசிய, 'பாக்கெட்' தினம் அனுசரிக்கப்படுகிறது. ஆடைகளில் உள்ள, 'பாக்கெட்'டுகள், அன்றாட வாழ்க்கையை எளிதாக்கிய முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று. பழங்காலங்களில், சிறிய பொருட்களை தனியாக எடுத்துச் செல்ல வேண்டியிருந்த நிலையில், ஆடைகளுடன் இணைக்கப்பட்ட, 'பாக்கெட்'டுகள், அந்தச் சிரமத்தைப் போக்கின. ஆண்களின் ஆடைகளில், 'பாக்கெட்'டுகள் அதிகமாகவும், பெண்களின் பாரம்பரிய ஆடைகளில் குறைவாகவும் இருந்த வரலாறும் குறிப்பிடத்தக்கது
* ஜனவரி 16 அன்று, அமெரிக்காவில், 'நேஷனல் நத்திங் டே' எனப்படும், தேசிய ஒன்றும் செய்யாத தினம் அனுசரிக்கப்படுகிறது.
கடந்த, 1973ல், பத்திரிகையாளர் ஹரோல்ட் புல்மேன் காபின் என்பவரால் முன்மொழியப்பட்ட இந்த நாளில், சிறப்பு நிகழ்ச்சிகளோ, கொண்டாட்டங்களோ எதுவும் இருக்காது. உண்மையில், ஒன்றும் செய்யாமல் இருப்பதே, இதன் நோக்கம். எப்போதும் பரபரப்பாக இயங்கும் நவீன மனிதன், ஒரு நாளாவது, எந்த இலக்கும் இல்லாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்ற சிந்தனையை, இது முன் வைக்கிறது. ஆனால், ஒன்றும் செய்யாத நாளை கடைப்பிடிப்பதே, ஒரு செயலாகிவிடுகிறது என்பது தான், இதன் மிகப்பெரிய முரண்பாடு.
இப்படி, உலகின் வித்தியாசமான தினங்கள், வெறும் வேடிக்கைக்காக உருவாக்கப்பட்டவையாக இருந்தாலும், அவை மனிதர்களின் கற்பனை, நகைச்சுவை உணர்வு, வரலாறு, கலாசாரம் மற்றும் அன்றாட வாழ்க்கையின் சிறிய விஷயங்களையும் ரசிக்கும் மனப்பான்மையை வெளிப்படுத்துகின்றன.
- என்று கூறி முடித்தார், அந்த இளைஞர். அந்த இளைஞரின் வித்தியாசமான முயற்சியை அறிந்து ஆச்சரியப்பட்டேன். விரைவில், முனைவர் பட்டம் கிடைக்க வாழ்த்தினேன்.
