PUBLISHED ON : ஆக 30, 2026

பா கே
எழுத்தாளர் நண்பர் ஒருவர், சமீபத்தில், சீ ன நாட்டுக்கு சென்று திரும்பியவர், அன்று அலுவலகம் வந்திருந்தார். 'என்ன ஓய்... சீனாவில், நாய்க்கறி, பாம்புக்கறி எல்லாம் சாப்பிட்டீரா?' என்றார், லென்ஸ் மாமா.
'ஐயய்யோ... அதையெல்லாம் திரும்பிக்கூட பார்க்கலை...' என்றார், நண்பர்.
'என்ன திடீர் சீனா பயணம்?' என்றேன், நான். 'என் மாப்பிள்ளை, சீனாவிலுள்ள நுாலகத்துடன் இணைந்த அருங்காட்சியகம் ஒன்றில் பணிபுரிகிறார். அவரது அழைப்பை ஏற்று, ஒரு வாரம் அங்கு சென்றிருந்தேன். என் மாப்பிள்ளை பணிபுரியும் அருங்காட்சியகத்தை பார்க்க சென்றேன். சீனாவின் பழம்பெருமையை அப்படியே கண்முன் கொண்டு வருகிறது...' என்றார்.
'அந்த அருங்காட்சியகத்தில் என்னென்ன பார்த்தீர்கள்... சொல்லுங்களேன்...' என்றேன். கூற ஆரம்பித்தார், எழுத்தாளர் நண்பர்: இன்று, புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில், உலக நாடுகளை வியக்க வைக்கும் நாடாக திகழ்ந்தாலும், புதியவற்றை உருவாக்குவதில் சீனர்களின் ஆர்வம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, அறிவியல், மருத்துவம், போக்குவரத்து, அச்சுத்தொழில் உள்ளிட்ட, பல துறைகளில் வியக்கத்தக்க சாதனைகளைப் படைத்துள்ளனர்.
கி.மு., 3ம் நுாற்றாண்டில், சீனாவின் முதல் பேரரசரான, கின் ஷி ஹுவாங், தன் மரணத்துக்கு பிறகும் மிகப்பெரிய படை தன்னை பாதுகாக்க வேண்டுமென்று விரும்பினார். இதற்காக, தன் கல்லறை வளாகத்தில், ஆயிரக்கணக்கான சுட்ட களிமண்ணால் செய்யப்பட்ட வீரர்கள், குதிரைகள், ரதங்களை உருவாக்க செய்தார். ஒவ்வொரு வீரரின் முகமும் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டிருப்பது, இன்றும் உலக மக்களை வியப்பில் ஆழ்த்துகிறது.
* கி.பி., 132ம் ஆண்டில், சீன அறிஞர் ஜாங் ஹெங், நிலநடுக்கம் ஏற்படும் திசையை அறிய, ஒரு வித்தியாசமான கருவி யை உருவாக்கினார். 'ஹவ்பெங் டிடோங் யி' என அழைக்கப்பட்ட அந்தக் கருவியில், பல உலோகப் பந்துகள் பொருத்தப்பட்டிருந்தனவாம். நிலநடுக்கம் ஏற்பட்டபோது, குறிப்பிட்ட திசையில் இருந்த பந்து கீழே விழுந்து, நிலநடுக்கம் எந்தத் திசையில் ஏற்பட்டது என்பதை, துல்லியமாக சுட்டிக்காட்டியது
* இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் காகிதப் பணத்தின் ஆரம்ப வடிவம், சீனாவில் உருவானது. குறிப்பாக, சாங் வம்ச காலத்தில், கி.பி., 11ம் நுாற்றாண்டில், 'ஜியாவ்சி' என்ற காகிதப் பணம், அரசு சார்பில் வெளியிடப்பட்டது. அதற்கு முன்பே, தொலைதுார வணிகப் பயணங்களில், அதிக அளவு உலோக நாணயங்களை எடுத்துச் செல்வதில் இருந்த சிரமத்தைத் தவிர்க்க, வணிகர்கள் காகித ஆவணங்களைப் பயன்படுத்தி வந்தனர்
* சீனர்கள் உருவாக்கிய ஆரம்பகால காந்த திசைகாட்டிகள், முதலில் கடல் பயணத்துக்காக உருவாக்கப்படவில்லை. அவை, பெங் ஷுய் உள்ளிட்ட, பாரம்பரிய நடைமுறைகளில் திசைகளை நிர்ணயிக்கப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், இதே தொழில்நுட்பம், கடல் பயணங்களில் பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம், உலகின் கடல் பயண வரலாற்றில், காந்த திசைகாட்டி மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது
* கி.பி., 9ம் நுாற்றாண்டில், சீன வேதியியலாளர்கள், நீண்ட ஆயுளுக்கான மருந்தைத் தேடி, பல்வேறு பொருட்களை சேர்த்துப் பரிசோதித்தனர். அப்போது, பொட்டாசியம் நைட்ரேட், கந்தகம் மற்றும் கரி ஆகியவற்றின் கலவையால், வெடிமருந்து உருவானதாக கருதப்படுகிறது. பின்னர், இந்தக் கண்டுபிடிப்பு, பட்டாசுகள், ராக்கெட்டுகள் மற்றும் போரில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு வெடிப்பொருட்களின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது.
வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் சீனாவில், மூங்கில் குழாய்களுக்குள் வெடிக்கும் பொருட்களை வைத்து உரத்த சத்தம் எழுப்பும் பழக்கம் உருவானது. தீய சக்திகளை விரட்டும் நம்பிக்கையுடன், இவை பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. காலப்போக்கில், இந்த நடைமுறை, வண்ணமயமான பட்டாசுகளாக வளர்ந்தது
* பட்டுப்புழுவிலிருந்து பட்டு நுால் தயாரிக்கும் கலையை, சீனர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அறிந்திருந்தனர். இந்தத் தொழில்நுட்பத்தை, அவர்கள் நீண்ட காலம் ரகசியமாகப் பாதுகாத்ததாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன
* ஐரோப்பாவில், கூட்டன்பெர்க் அச்சுக்கருவி அறிமுகமாவதற்கு பல நுாற்றாண்டுகளுக்கு முன்பே, சீனாவில் மர அச்சுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மரப்பலகையில் எழுத்துகளைச் செதுக்கி, அதில் மை தடவி காகிதத்தில் பதிக்கும் முறை நடைமுறையில் இருந்தது. கி.பி., 868ம் ஆண்டைச் சேர்ந்த, 'டைமண்ட் சூத்ரா' என்ற நுால், முழுமையான பழமையான அச்சிடப்பட்ட நுால்களில் ஒன்றாகப் புகழ்பெற்றுள்ளது.
கடந்த, 11ம் நுாற்றாண்டில், சீன அறிஞர், சு சாங் என்பவர் உருவாக்கிய வானியல் கடிகாரக் கோபுரம், அக்கால அறிவியல் வளர்ச்சிக்கு மிகச்சிறந்த உதாரணமாகக் கருதப்படுகிறது. நீரால் இயக்கப்படும் இயந்திர அமைப்புகள், சுழலும் வானியல் மாடல் உள்ளிட்ட, பல நுட்பங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. இது, நேரத்தைக் கணக்கிடும் கருவியாக மட்டுமின்றி, வானியல் நிகழ்வுகளைப் பார்வையிட உதவும் மையமாகவும் செயல்பட்டது.
* சீனாவின் பாரம்பரியத்தில், 'ஸ்கை லாண்டர்ன்ஸ்' எனப்படும் வான விளக்குகளுக்கும் முக்கிய இடம் உண்டு. கனமான காகிதத்தால் செய்யப்பட்ட இலகுவான உறைக்குள் சூடான காற்று உருவாகும்போது, அதில் பொருத்தபட்ட இந்த விளக்குகள் வானில் மிதக்கத் தொடங்கும். இவை கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படுவதுடன், பழங்காலத்தில் தொலைதுார தகவல் தொடர்புக்கான சைகைகளாகவும் பயன்படுத்தப்பட்டதாக, வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
- என்று கூறி முடித்தார். அதுவரை, அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த, லென்ஸ் மாமா, 'சீனா எவ்வளவு தான் அசுர வளர்ச்சி அடைந்திருந்தாலும், இந்தியாவின் பாரம்பரியத்தையும், முன்னேற்றத்தையும் காழ்ப்புணர்ச்சியுடன் தான் கவனித்து வருகிறது.
'நம் நாட்டிற்குள் ஊடுருவி, இங்கிருந்து பல ரகசியங்களை அவர்கள் கடத்தி வருகின்றனர் என்று சொன்னால் நம்புவீர்களா? 'சமீபத்தில், நம் நாட்டிலிருந்து அவர்கள் திருட்டுத்தனமாக கடத்திச் சென்ற பொருள் என்ன தெரியுமா? 'பிளசன்ட்டா' எனப்படும் தொப்புள் கொடிதான்.
'கருவில் இருக்கும் குழந்தைக்கும், தாய்க்கும், தொடர்பை ஏற்படுத்தும், பிரசவத்துக்கு பின் வெட்டப்படும் தொப்புள் கொடியை தான், 'டன்' கணக்கில், இங்குள்ள பணப்பித்து பிடித்த, 'ஏஜென்ட்'கள் மூலம் கடத்தி சென்றுள்ளனர். இது, எத்தனை காலம் நடந்ததோ தெரியவில்லை. சமீபத்தில், கப்பலில் கொண்டு செல்லப்பட்ட, 'தொப்புள் கொடி' கொண்ட, 'கன்டெய்னர்'களை கண்டுபிடித்து அதிர்ந்து போயுள்ளனர், நம் சுங்க அதிகாரிகள்.
'எதற்காக இதை கடத்துகின்றனர் என்று ஆராய்ந்தபோது, வயதான பின்னரும், தோலில் சுருக்கம் ஏற்படாமல், இளமையாக இருப்பதற்கான மருந்தை இதிலிருந்து தயாரிக்கின்றனர் என்ற தகவல் கிடைத்துள்ளது. 'அப்படி தயாரிக்கப்பட்ட மருந்துக்கு, உலக சந்தையில் கோடிக்கணக்கான விலை மதிப்பு உள்ளதாம். 'அடுத்த நாட்டை சுரண்டுபவர்களை ஆஹா, ஓஹோ என, புகழ்ந்து தள்ளுகிறீர்களே...' என்று காட்டமாக கூறினார், லென்ஸ் மாமா. எழுத்தாளர் நண்பர், 'கப்சிப்' ஆனார்.
மாமா கூறியதை கேட்ட நான் அதிர்ந்து போனேன்.
