PUBLISHED ON : செப் 20, 2026

பா கே
மழை லேசாக துாறிக் கொண்டிருந்த ஒரு மாலை நேரம்... 'பீச்சுக்கு போக வேண்டாம்; நம் அலுவலக மொட்டை மாடியிலேயே, 'மீட்டிங்' வைத்துக் கொள்ளலாம்...' என்றார், குப்பண்ணா.
அதன்படி, மொட்டை மாடியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூரையின் கீழ், சேர்கள் போடப்பட்டு குழுமியிருந்தோம். வழக்கம் போல், கேன்டீனில் இருந்து சுடச்சுட பஜ்ஜி, வடை வகை மற்றும் இஞ்சி டீயும் வரவழைக்கப்பட்டன.
மொபைல் போனில், சமூக வலைதள பக்கத்தில் மூழ்கியிருந்த, லென்ஸ் மாமா, திடீரென, இந்த கட்சிக்காரங்களின், 'ஜென் சி' பிரிவினர் செய்யும் அலப்பறைகள் அளவுக்கு மீறி போயிட்டு இருக்கு...' என்றார்.
'இதையெல்லாம் பார்ப்பதை நிறுத்துங்கள், மாமா...' என்றேன், நான்.
'ஏம்ப்பா லெஞ்சு... 'ஜென் சி' தலைமுறைன்னு புதுசா ஒரு வார்த்தை இப்போதெல்லாம் பரவலாக பயன்படுத்தப் படுகிறதே... அப்படின்னா என்ன?' என்றார், குப்பண்ணா.
தன் மொபைல் போனை, 'ஸ்விட்ச்-ஆப்' செய்த, லென்ஸ் மாமா, ஒரு வடையை எடுத்து கடித்தபடி, 'அதுவாப்பா...' என்று கூற ஆரம்பித்தார்:
'ஜென் சி' தலைமுறையினர் யாரென்றால், 1997 முதல் 2013ம் ஆண்டு வரையுள்ள, காலகட்டத்தில் பிறந்தவர்கள். அடுத்து, 18 முதல் 26 வயதுள்ளவர்களை, 'ஜென்-ஆல்பா' என்று வகைப்படுத்துகின்றனர். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை, 'ஆல்பா கிட்ஸ்' என்கின்றனர்.
இந்த வகைப்பாடு உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நாம், இளம் தலைமுறையினர் என்று சொல்வது போல், அலங்காரமான வார்த்தைகளில் இப்படி சொல்கின்றனர்.
உலக மக்கள் தொகையில், 47.7 சதவீதம் பேர், 'ஜென் சி' மற்றும் 'ஜென்-ஆல்பா' தலைமுறையை சேர்ந்தவர்கள் என்று, ஐக்கிய நாடுகள் சபையின், மக்கள் தொகை மதிப்பீடுகள் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில், உலகின் பல நாடுகளில் குழந்தை பிறப்பு சதவீதம் அதிகரித்துள்ளதும், மருத்துவ வசதிகள் மற்றும் வாழ்க்கைத்தரம் மேம்பட்டிருப்பதாலும் இளம் தலைமுறையினரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, 'ஜென் சி, ஜென்-ஆல்பா' தலைமுறையினர் உலக மக்கள் தொகையில் பெரும் பங்கு வகிக்கின்றனர்.
இந்த இரண்டு தலைமுறையினர் தான் எதிர்கால உலகின் கல்வி, தொழில்நுட்பம், வேலை வாய்ப்பு, பொருளாதாரம் மற்றும் சமூக மாற்றங்களில் முக்கிய பங்கு வகிக்க உள்ளனர். குறிப்பாக, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் இணையதள பயன்பாட்டுடன் வளர்ந்த முதல் தலைமுறையினர் இவர்கள் என, கருதப்படுகின்றனர்.
இத்தலைமுறையினரில் பலர், ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட்டு, நாட்டின் வளர்ச்சிக்கு உதவுபவர்களாக இருந்தாலும், வேறு சிலர், சமூக வலைதளங்களில், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, 'ரீல்ஸ்' போடுவது, வேண்டாதவர்களை நார் நாராக கிழித்து ஆபாசமாக பேசி, 'வீடியோ' போடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதைத்தான் தாங்க முடியவில்லை...' என்று கூறி முடித்தார், லென்ஸ் மாமா.
'ஜென் சி என்ற பெயருக்கு பின் இவ்வளவு பெரிய வரலாறு இருக்கிறதா?' என்றார், குப்பண்ணா.
'பிளாஸ்க்'கில் இருந்த இஞ்சி டீயை அனைவருக்கும், 'கப்'பில் ஊற்றி கொடுத்தார், குப்பண்ணா.
'டீ குடிக்கிற நேரமா இது. என் வாயை கிளறி, நேரத்தை கடத்தி, 'மூடை'யும், 'ஸ்பாயில்' செய்து விட்டீங்க...' என்று சலித்துக் கொண்டார், லென்ஸ் மாமா.
ப
ப ணி ஓய்வு பெற்ற ஒருவரின் புலம்பல் இது: 1. பணி ஓய்வு பெற்றவர்: அதிக நேரம் படுக்கையில் படுத்திருந்தால்...
மனை வி: இன்னுமா எழுந்துக்கல? எவ்வளவு நேரம் துாங்குவீங்க! வேலை இல்லைன்னா எப்ப பாரு துாங்கணுமா?
2.ஓய்வு பெற்றவர்: அதிகாலையில் எழுந்து விட்டால்...
மனைவி: உங்களுக்கு துாக்கமே வராதா? காலையில், 4:00 மணிக்கே எழுந்து சத்தம் போட்டால், மத்தவங்க எப்படி துாங்குவாங்க? ஆபிஸ் இல்லேன்னா, பேசாம துாங்குங்க!
3.ஓய்வு பெற்றவர்: வீட்டிலேயே இருந்தால்...
மனைவி: எழுந்ததும் மொபைலும் கையுமா உட்கார்ந்தா எப்படி? எப்பப் பாரு டீ கொடுன்னு கேட்டுக்கிட்டு. சின்ன சின்ன வேலைகளை செய்யலாம் இல்ல. வீட்டை விட்டு வெளியே கிளம்பாமல், இங்கேயே உட்கார்ந்துகிட்டு... உங்களால எல்லாருக்கும் லேட்டாகுது!
4.ஓய்வு பெற்றவர்: எப்போதும் வெளியே சுற்றித் திரிந்தால்...
மனைவி: இவ்வளவு நேரம் எங்க போனீங்க? ஆபிஸ் தான் இப்ப கிடையாதே? இப்போவும் வீட்டிலே சும்மா இருக்க முடியலையா? குடும்பத்தோடு கொஞ்சம் பேசலாம் இல்ல.
5.ஓய்வு பெற்றவர்: பக்தி வழிபாட்டில் ஈடுபட்டால்...
மனைவி: கோவில் கோவிலா சுத்தினா பணம் வருமா? அப்படி இருந்திருந்தா பூசாரிகள் தான் பெரிய பணக்காரர்கள் ஆகியிருப்பாங்க. எப்பவும், 'ராம் ராம், சங்கரா சங்கரா'ன்னு அதே வேலை தானா!
6.ஓய்வு பெற்றவர்: மீண்டும் வேலையில் சேர்ந்தால்...
மனைவி: உங்களுக்கு வேலை தான் எல்லாமா? இவ்வளவு வயசு ஆகிவிட்ட பிறகும் பணத்துக்காக ஓடிக்கொண்டே இருக்க வேண்டுமா? எப்பவுமே உங்களுக்காக காத்திருக்கணுமா நாங்க?
7.ஓய்வு பெற்றவர்: மனைவியை புனித யாத்திரைக்கு அழைத்து சென்றால்...
மனைவி: பக்கத்து வீட்டுக்காரனைப் பாருங்க... ஒவ்வொரு மாதமும் தன் மனைவியை சிம்லா, டார்ஜிலிங் எல்லாம் கூட்டிட்டு போறாராம்! நீங்க, எப்பவும் என்னை மருதமலைக்கு தான் கூட்டிட்டு போறீங்க!
8. ஓய்வு பெற்றவர் : மனைவியை சுற்றுலா இடங்களுக்கு, நைனிடால், காஷ்மீர், கோவா, ஊட்டி என, அழைத்து சென்றால்...
மனைவி: வீடு தான் முக்கியம். வீணா, செலவு பண்ணுறீங்க. உங்ககிட்ட பணம் கொட்டிக்கிடக்குதோ? அந்தப் பணத்தை வச்சு, வீட்டை பழுது பார்க்கலாம், எனக்கு நாலு புடவை வாங்கி தரலாம்...
9.ஓய்வு பெற்றவர் : பழைய பாடல்களை ரசித்தால்...
மனைவி: கிழத்துக்கு காதல் பாட்டு கேக்குதோ; இளமை ஊஞ்சலாடுதோ? பாடணும்னா பக்திப் பாடல் பாடுங்க!
10.ஓய்வு பெற்றவர் : நண்பர்களை மொபைல் போனில் அழைத்து பேசினால்...
மனைவி: எப்பவும் மொபைலும் கையுமா பேச்சுப் பேச்சு தான். யார்கிட்ட இவ்வளவு நேரம் பேசறீங்க? நாங்க யாருடனும் இப்படி பேசி போரடிக்க மாட்டோம்!
11. ஓய்வு பெற்றவர் : அழகாக, 'மேக்-அப்' போட்டு இருந்தால்...
மனைவி: இந்த வயசில அலங்காரம் கேக்குதோ? வேற எங்கே போகப் போறீங்க? வீட்டில் மருமகள் இருக்கிறா, உங்களைப் பார்த்து என்ன நினைப்பா?
பணி ஓய்வு பெற்றவங்க, நிம்மதியா இருப்பாங்கன்னு நினைப்பது பொய். உண்மையிலேயே, பலருக்கும் ஏற்படும் அனுபவங்கள் தான் இவை.
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.
