PUBLISHED ON : செப் 27, 2026

பா கே
அன்று, லென்ஸ் மாமா, அலுவலகம் வரவில்லை, லீவும் சொல்லவில்லை. அவரது மொபைல்போனும், 'ஸ்விட்ச் - ஆப்' செய்யப்பட்டிருந்தது. வெளியில் எங்காவது போய் விட்டாரா அல்லது, 'நைட்' அளவுக்கதிகமா உ.பா., அருந்தி, 'ஹேங்க்' ஆகிவிட்டாரோ... நாளை வருகிறாரா பார்ப்போம். இல்லாவிட்டால் நேரில் சென்று பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டேன். மறுநாள் முகமெல்லாம் கீறல்களுடன், 'செவ்வானமாக' வந்தார், லென்ஸ் மாமா. 'என்ன ஆச்சு மாமா... மாமியிடம் தகறாரா? முகமெல்லாம் நகத்தால் கீறியது போல் இருக்கிறதே...' என்றேன். 'அட சும்மா இரு, மணி... பக்கத்து வீட்டுக்காரன் பூனை ஒன்றை வளர்த்து வருகிறான். வெளியே விடாம, வீட்டுக்குள்ளேயே வைத்து வளர்த்துக்கன்னு பலமுறை சொல்லிட்டேன். அவன் கேட்பதே இல்லை. நேற்று, என் வீட்டு வாசலில் வந்து, 'கக்கா' போய்விட்டது. 'பக்கத்து வீட்டுக்காரனை வந்து, 'கிளீன்' பண்ண சொன்னா, ஓடி ஒளிந்து கொண்டான். இவனிடம் சொல்லி பிரயோஜனமில்லை. பூனையைப் பிடித்து, கண்காணாத இடத்துக்கு கொண்டு போய் விட்டுடணும்ன்னு காத்திருந்தேன். சற்று நேரத்தில், என் வீட்டு பால்கனியில் உட்கார்ந்திருந்தது, அந்த பூனை. அதை பிடிக்க போனேனா, என் கையிலிருந்து நழுவி, நகத்தால் பிராண்டி விட்டுட்டு தப்பி விட்டது...' என்றார், லென்ஸ் மாமா. 'டாக்டரிடம் போனீர்களா? ஊசி போட்டு கொண்டீரா? மருந்து கொடுத்தாரா?' என்றேன், நான். 'ஓய் லெஞ்சு... பூனையிடம் போய் எதுக்கு வம்பு வைச்சுக்கிறீர். ஆதிகாலத்திலிருந்தே நாயும், பூனையும் வளர்ப்பு பிராணிகளாக இருந்து, மக்களோடு மக்களாக பழகி வருகிறது தெரியுமா...' என்றவர், தொடர்ந்து கூற ஆரம்பித்தார், 'திண்ணை' நாராயணன்: பூனை வளர்ப்பதால், என்னென்ன நன்மை கிடைக்கும் என்று ஆராய்ந்து சொல்லியுள்ளனர்... மன அழுத்தம் குறையும், இதய ஆரோக்கியம் மேம்படும், துாக்கம் நன்றாக வரும், தனிமை விலகும்...' என்று இப்படி பல நன்மைகள் கிடைக்குமாம்.
பூனைகளில் பல வகைகள் உண்டாம். பாரசீக பூனை, சயாமிஸ் பூனை, ராக்டால் பூனை மற்றும் மைனேசடன் பூனை. இவையெல்லாம் வெளிநாட்டு பூனை வகைகள். மீதி உள்ளவை, இந்திய நாட்டு பூனைகள்.
பொதுவாக, இந்திய பூனைகளுக்கு, குறைவான நீளம் கொண்ட முடி மற்றும் நடுத்தர அளவானதாக இருக்கும். இந்திய தட்பவெட்ப நிலைக்கு ஒத்துப்போக கூடியவை இவை. பிரபல ஹிந்தி நடிகையரான, அலியா பட், சோனாக்ஷி சின்ஹா, ஷில்பா ஷெட்டி, ஜாக்குலின் பெர்னாண்டஸ், ஸ்ரத்தா கபூர் போன்றோர், விலையுயர்ந்த வெளிநாட்டு பூனை வகைகளை செல்லமாக வளர்த்து வருகின்றனர். ஒவ்வொரு பூனையும், பல லட்ச ரூபாய் பெறுமானமுள்ளவை.
நம்மூர் நடிகையரில், நிவேதா பெத்துராஜ், ஆண்ட்ரியா ஆகியோரும், மலையாள நடிகர், மோகன்லாலும் பூனை பிரியர்கள். இவர்களிடம் விதவிதமான விலையுயர்ந்த பூனைகள் உள்ளன. அவ்வப்போது, தங்கள் எஜமானர்களுடன், சமூக வலைதளங்களில் அவைகள் தலைக்காட்டுவதுண்டு.
நடிகரும், தற்போதைய தமிழக முதல்வருமான விஜய், நடித்த, மாஸ்டர் படத்தில், பெர்ஷியன் ரக பூனை ஒன்று அவருடன் இணைந்து நடித்திருந்தது, தெரியுமா?
* இந்தியாவில், ஏறக்குறைய, 50 கோடி பூனைகள் இருக்கும் என, 2026ல் எடுக்கப்பட்ட ஒரு குத்துமதிப்பு கணக்கெடுப்பு கூறுகிறது
* கடந்த, 2025-2026ம் ஆண்டில், இந்தியாவில் இதுவரை, 'ஆன்-லைன்' மூலம் வாங்கப்படும் வளர்ப்பு பிராணிகளுக்கான உணவுகளில், 80 சதவீதம் பூனைக்கான உணவு தான்
* மாவீரர் அலெக்சாண்டர், சீசர் போன்ற சில வரலாற்று நாயகர்களின், விருப்பமான வளர்ப்பு பிராணியாக, பூனை இருந்துள்ளது
* இந்தியாவில் பூனை குறுக்கே செல்வது கெட்ட சகுனம். ஆனால், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பூனை குறுக்கே செல்வது அதிர்ஷ்டம் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது
* எவ்வளவு உயரத்திலிருந்து குதித்தாலும், அடிபடாமல், லாவகமாக நிற்கும் ஆற்றல் பூனைக்கு உண்டு
* பூனைகள் சராசரியாக, 12 ஆண்டுகள் உயிர் வாழும். மனிதர்களிடம் எளிதில் பழகி விடும் தன்மை கொண்டவை
* ஜப்பானியர்கள் பூனை வளர்ப்பதில் விருப்பமுள்ளவர்கள்.
- இப்படி சொல்லிக்கொண்டே போனார், நாராயணன்... 'ஓய், நாணா... பூனை பிராண்டிய எரிச்சலால் அவதிப்பட்டுட்டு இருக்கிறேன். நீர் பூனை புராணத்தை சொல்லிக் கொண்டிருக்கிறீரா?' என்றார் கடுப்பாக, லென்ஸ் மாமா. 'என் மீது பாயாதீர். நான் கூட பல சந்தர்ப்பங்களில் மன உளைச்சலுடன் இருக்கும் போது, நீர் குறுக்கே புகுந்து எதையாவது கிண்டலாக சொல்வதில்லையா. உமக்கு வந்தா, ரத்தம்; எனக்கு வந்தா, தக்காளி சட்னியா?' என்று வடிவேலுவின், 'பஞ்ச் டயலாக்'கை எடுத்து விட்டார், நாணா. 'இருவரும் இப்படியே சண்டை போட்டுக் கொண்டிருக்கப் போகிறீர்களா? இதோடு இந்த பேச்சை விடுங்க...' என்று சமாதானப்படுத்தினேன், நான்.
ப
நம்மூர், தெனாலிராமன், பீர்பால் போல், துருக்கி நாட்டு நகைச்சுவையாளர், முல்லா. அவர் ஒருநாள், கடைத்தெருவுக்கு சென்று, ஒரு உயரமான மேடையில நின்னு முரசு கொட்டினார். அங்கிருந்தவர்கள் என்னன்னு பார்க்க அவர் அருகில் வந்தனர்.
'எளிமையான முறையில் உழைக்காம நீங்க கோடீஸ்வரர் ஆகறது எப்படின்னு நான் இப்ப சொல்ல போறேன். எல்லாரும் இங்க வாங்க. உழைக்காம, கஷ்டப்படாம பணம் சம்பாதிக்கிறது எப்படின்னு நான் சொல்லப்போறேன். எல்லாரும் வாங்க...' என்று அழைத்தார், முல்லா.
அந்த கடைத் தெருவில் இருக்கிற அத்தனைப் பேரும் அந்த மேடை அருகில் வந்து நின்றனர்.
முல்லாவும், 'உழைக்காம, கஷ்டப்படாம சம்பாதிக்கிறதுக்கான வழியை எல்லாம் நான் சொல்லப்போறேன் வாங்க'ன்னு மீண்டும் மீண்டும் அழைத்தார். ஊரே கூடி நின்றது.
கொஞ்சம் நேரத்துக்கு பின், எதுவும் பேசாமல், அங்கிருந்தவர்களைப் பார்த்துக்கிட்டே இருந்தாரு, முல்லா.
'முல்லா, நீ உழக்காம, கஷ்டப்படாம, எளிமையா சம்பாதிக்கலாம்ன்னு சொன்னியே... எப்படி சம்பாதிக்கிறது? அதை சொல்லவே மாட்டேங்கிற. அமைதியா நின்னுகிட்டே இருக்கறியே...' என்று கேட்டனர், அங்கு கூடியிருந்தவர்கள்.
சிரித்துக்கொண்டே, 'இல்ல இந்த ஊர்ல எவ்வளவு முட்டா பயலுக இருக்காங்கன்னு நான் பார்க்கணும்ன்னு ஆசைப்பட்டேன்; யார் யாரெல்லாம் பேராசைப் பிடிச்சவங்கன்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டேன். இத்தனை பேராடா இந்த ஊர்ல முட்டாளா இருப்பீங்க? ஒரு ஊர்ல ஒண்ணு ரெண்டு முட்டாள் இருக்கலாம். ஊரே முட்டாளாவா இருப்பீங்க!
'உழைக்காம, போராடாம வாழ்க்கையில் எப்படி சம்பாதிக்க முடியும்? உழைக்காம எப்படி பணம், பொருள் வரும்? இவ்வளவு பெரிய முட்டாளா இந்த ஊர் இருக்கிறதேன்னு நினைச்சு சிரிப்பா வருது. இனிமேலாவது உழைச்சு சம்பாதிக்கப் பாருங்கள்...' என்று சொல்லி அங்கிருந்து போனார், முல்லா.
இது எப்படி இருக்கு? எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.
