PUBLISHED ON : அக் 11, 2026

பா கே
'சரித்திரம் திரும்புகிறது...' என்றபடி வந்தமர் ந்தார், 'திண்ணை' நாராயணன். 'நாராயணன்... நல்லவேளை, லென்ஸ் மாமா இன்னும் வரவில்லை. இப்படி தலையும், வாலும் இல்லாமல் பேசியதற்கு, உங்களை வறுத்தெடுத்திருப்பார். விஷயத்தை சொல்லாமல் புலம்பினால், என்ன அர்த்தம்...' என்றேன், நான். 'அது, ஒண்ணுமில்லை, மணி... இன்று காலை, ஆங்கில நாளிதழ் ஒன்றின் கடைசி பக்கத்தில், சின்னதாக, 10 செ.மீ., அளவுக்கு ஒரு செய்தி வெளியாகியிருந்தது. ஆனால், விஷயம் சிக்கலானது...' என்றார், நாணா. 'முழுசா சொன்னால் தானே புரியும்...' என்பதற்குள், லென்ஸ் மாமா வந்து விட்டார். 'என்ன, வழக்கம் போல், மொட்டைத் தாத்தா குட்டையில் விழுந்த கதை போல், எதையாவது சொல்லி, குழப்பி விட்டாரா?' என்றார், லென்ஸ் மாமா. லென்ஸ் மாமா முன் சொல்லலாமா, வேண்டாமா என்று சற்று தயங்கிய, நாராயணன், 'சரி, சொல்லி விடுகிறேன்...' என்று ஆரம்பித்தார்: முற்காலத்தில், அரசர்கள், நீதிநெறி தவறாமல் ஆட்சி புரிந்தனர் என்று படித்துள்ளோம். அப்படிப்பட்ட அரசர் ஒருவன், தன்னிடம் வந்த வழக்கை புத்திசாலித்தனமாக தீர்த்து வைத்த கதையெல்லாம் நாம் கேள்விப்பட்டுள்ளோம்.
உதாரணத்துக்கு, இரு பெண்கள், ஒரு குழந்தைக்கு உரிமை கொண்டாடி, நீதி கேட்டு, அரசரிடம் சென்றுள்ளனர்.
அரசரோ, குழந்தையை வெட்டி ஆளுக்கு பாதியாக தரும்படி அறிவித்தார். உண்மையான தாய், மனம் பதறி, குழந்தையை வெட்டுவதை தடுத்து, இன்னொரு பெண்ணிடமே கொடுத்துவிட சொல்ல, உண்மையான தாய்க்கு தான் குழந்தையின் அருமை தெரியும் என்று உணர்ந்து, குழந்தையை அத்தாயிடம் ஒப்படைத்தார், அரசர்.
அதுபோல், ஒரு வழக்கு, சமீபத்தில், பீகார் மாநிலம், கயா மாவட்டம், சியோதார் கிராமத்தில் நடந்துள்ளது. ஆனால், குழந்தைக்காக அல்லாமல், ஒரு எருமை கன்றுக்காக, இருவர் உரிமை கொண்டாடியுள்ளனர்.
இக்கிராமத்தில் வசிக்கும், சூரஜ் யாதவ் என்பவனது, எருமைக்கன்று காணாமல் போயுள்ளது. பக்கத்து கிராமமான நவ்ரங்காவைச் சேர்ந்த, பிரகாஷ் மஞ்சி என்பவரது தொழுவத்தில் அந்த கன்றை பார்த்ததாக ஒருவர் வந்து, சூரஜிடம் சொன்னார்.
உடனே, காவல்துறையினர் உதவியுடன், அந்த கன்றை வீட்டிற்கு கொண்டு வந்துவிட்டான், சூரஜ்.
ஆனால், பிரகாஷ் மஞ்சி விடுவதாயில்லை. அது, தன்னுடைய கன்று தான் என்று, தன் கிராம காவல் நிலையத்தில் புகார் அளித்தான்.
உள்ளூர் காவல் நிலைய அதிகாரி, புத்திசாலி. சூரஜ், மஞ்சி இருவரிடமும், அவரவர் வளர்க்கும் தாய் எருமையை காவல் நிலையத்துக்கு அழைத்து வர கூறினார்.
இரு தாய் எருமைகளையும், இரு பக்கம் நிறுத்தி வைத்து, கன்றுக்குட்டியை அவிழ்த்து விட்டார், காவல் அதிகாரி. அந்த கன்று, நேராக, சூரஜ் வளர்த்த தாய் எருமை அருகில் சென்று நின்றது.
உடனே, அந்த கன்று, சூரஜுக்குத்தான் சொந்தம், என்று தீர்மானித்து, அவனிடம் ஒப்படைத்து விட்டார்.
வழக்கு முடிந்தது, என்று சந்தோஷமாக, தாய் எருமையையும், கன்றையும் ஓட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான், சூரஜ்.
ஆனால், பிரகாஷ் மஞ்சி, இந்த தீர்ப்பை ஏற்காமல், தான் சேர்ந்த ஜாதி தலைவரிடம் முறையிட்டான்.
பீகார் மாநிலத்தைப் பொறுத்தவரை, ஏதாவது தகராறு என்றால், ஜாதி பிரிவுகள் தலையிடும்; ஜாதிகள் சம்பந்தப்பட்ட இடத்தில், அரசியல்வாதிகள் தலையிட்டு, பிரச்னையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவர்.
இங்கும் அப்படித்தான் நடந்தது...
தன் ஜாதி பிரிவான, மகா தலித் அந்தஸ்தை வலியுறுத்தி, பட்டியல் இ னத்தவர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் அளித்தான், பிரகாஷ்.
சூரஜ் சும்மா இருப்பானா? சூரஜுக்கு ஆதரவாக, பீகார் முன்னாள் முதல்வர், லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் களம் இறங்கியது. அக்கட்சியின், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான, ரஞ்சித் யாதவ், இந்த வழக்கை அப்பகுதி காவல் ஆய்வாளரிடம் கொண்டு சென்றார்.
அரசியல்கட்சிகளிடம் வழக்கு சென்றுவிட்டால், ஆண்டு கணக்கில் இழுத்தடிக்கப்படும் என்று நினைத்த, காவல்துறை உயரதிகாரியான ஐ.ஜி., விகாஸ் வைபவ் என்பவர், ஒரு அசாதாரண நடவடிக்கை எடுத்தார். அதன்படி, கன்றுக்கும், அதன் தாய்க்கும் டி.என்.ஏ., எனப்படும் மரபணு சோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
எருமைகளுக்கு, டி.என்.ஏ., சோதனை செய்வது ஒன்றும் புதிதல்ல. சில ஆயிரம் ரூபாய் செலவில், விவசாயிகள், தாங்கள் வளர்க்கும் எருமைகளின் ஆரோக்கியத்தை சோதிக்க, டி.என்.ஏ., சோதனை செய்வது வழக்கம் தான்.
ஆனால், கன்றின் தாயை கண்டுபிடிக்க, டி.என்.ஏ., சோதனை நடத்தப்படுவது நாட்டிலேயே இது தான் முதல் முறையாம்.
உண்மையான, தாய் எருமையை கண்டுபிடித்தனரா என்ற தகவல் இல்லை. ஆனால், சக்திமிக்க அரசியல் அமைப்புகள் மோதிக்கொண்டது தான் பேச்சு பொருளாகி விட்டது.
- என்று கூறி முடித்தார், நாராயணன்.
'ஓய், நாணா... முடிவு தெரியாவிட்டாலும், 'இன்ட்ரஸ்ட்' ஆன, ஒரு தகவல் சொல்லியிருக்கிறீர். வாரும்... உமக்கு, 'கேன்டீனில்' வடையும், டீயும் வாங்கித் தருகிறேன்...' என்று, வலுக்கட்டாயமாக, நாராயணனை அழைத்துச் சென்றார், லென்ஸ் மாமா.
ப
இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பொது தொலைபேசி பூத்துக்கு போவான், இளைஞன் ஒருவன். அங்கிருந்து, ஒருவருக்கு போன் செய்து பேசுவான்.
'சார், உங்களுக்கு டிரைவர் யாராவது தேவைப்பட்டா சொல்லுங்க, சார். நான் நல்லா கார் ஓட்டுவேன்...' என்று, தன்னைப் பற்றிய விஷயங்கள் எல்லாம் சொல்வான்.
எதிர்முனையில் இருப்பவர், 'இல்லப்பா என்கிட்ட ஏற்கனவே டிரைவரா ஒரு பையன் இருக்கான். அவன் நல்ல பையனா இருக்கான். எனக்கு, டிரைவர் தேவையில்லப்பா'ன்னு சொல்லி விடுவார்.
அப்போதும் விடாமல், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, அந்நபருக்கு போன் செய்வான், அந்த இளைஞன்.
இதை தினமும் பார்த்துக் கொண்டிருந்த, எஸ்.டி.டி., பூத் உரிமையாளர், 'உனக்கு வேலை வேணுமாப்பா? டிரைவரா உன்னை இன்னொரு இடத்துல சேர்த்து விடட்டுமா?' என்று கேட்டார்.
அதற்கு, அந்த இளைஞன், 'எதிர்முனையில் இருந்தவர், 'என்கிட்ட ஏற்கனவே டிரைவர் இருக்கான். அவன் நல்லா வேலை செய்றான்'னு ஒருவனைப் பற்றி சொன்னாரே, அந்த பையன் வேற யாரும் இல்ல, நான் தான். என்கிட்ட என்ன குறை இருக்கு என்பதை தெரிந்துகொள்வதற்காக, நானே இப்படி, அடிக்கடி போன் பண்ணி கேட்பேன். அவரு, என்னைப் பற்றி நம்பிக்கையோட சொல்லும்போது தான், நான், என் வேலையை சரியா பார்க்குறேன்ற நம்பிக்கை எனக்கு வருகிறது...' என்றான்.
வேலை பார்க்கும் இடத்தில், நம் குறைகளை நாம் தெரிந்து கொண்டால் மட்டும் தான், அந்த வேலையில் வெற்றியாளனாகத் திகழ முடியும் என்று புரிந்து கொண்ட அந்த பையனை பாராட்டினார், 'பூத்' உரிமையாளர்.
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.
