தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : அக் 25, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 25, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா.கே.

செய்தி பிரிவில் பணிபுரிந்து, தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு சென்ற நண்பர் அவர். லென்ஸ் மாமாவின், - 'கிளாஸ்மேட்!' ('Glassmate-கிளாஸ்மேட்' என்றால் தெரியும் தானே... உ.பா., தோழர் என்று அர்த்தம்.) அந்த நண்பரின் இன்னொரு பெயர், 'பெட் பொன்னுசாமி!' எதற்கெடுத்தாலும், பந்தயம் கட்டுவார்.

உதாரணமாக, * இன்று மழை பெய்யுமா, பெய்யாதா?

* இந்த செய்தி, முதல் பக்கத்தில், தலைப்பு செய்தியாக வருமா, வராதா?

* நடிகை, த்ரிஷாவுக்கு கல்யாணம் ஆகுமா, ஆகாதா?

* ரயில், சரியான நேரத்துக்கு வருமா, வராதா?

* சமீபத்தில் வெளியான படத்துக்கு, தேசிய விருது கிடைக்குமா, கிடைக்காதா? - இப்படியெல்லாம் பந்தயம் கட்டுவார். இவரிடம் பந்தயம் கட்டினால், தோற்றுப்போனவர் தான் இவருக்கு, 'ட்ரீட்' வைக்கணும். சமயத்தில், இவரே தோற்றுப் போனாலும், 'இந்த முறை, ஜெயித்தவர் தான், 'ஸ்வீட்' வாங்கித்தரணும்...' என்று அழிச்சாட்டியம் செய்வார். இவரைப்பற்றி தெரிந்தவர்கள், இவர், பந்தயம் கட்ட கூப்பிட்டால், ஓடி ஒளிந்து கொள்வர். 'கம்மிங் பேக் டு த பாயின்ட்!' தன் கேபினில், அந்த நண்பருடன் ஏதோ ரகசியமாக பேசிக்கொண்டிருந்தார், லென்ஸ் மாமா. 'என்ன, மாமா... எதற்காகவாவது, 'பெட்' கட்டப் போகிறீர்களா?' என்று கேட்டார், பெண் உதவி ஆசிரியர் ஒருவர். 'ஆமாம்மா, இன்று, 'பீச்'சில், அக்கா கடையில், மீன் வறுவல் கிடைக்குமா? கிடைக்காதா? என்று, 'பெட்' கட்டினேன்...' என்றார், மாமா. 'உமக்கு எப்பவும், 'நக்கல்' தான்...' என்றவர், 'பெட்' பொன்னுசாமியிடம், 'ஏம்பா, உனக்கு, பந்தயம் கட்டாமல் இருக்க முடியாதா?' என்றார், உ.ஆ., 'பந்தயம் கட்டுவதில் ஒரு, 'திரில்' இருக்கிறது. அதெல்லாம் உங்களுக்கு புரியாது. இன்று, நேற்றா இந்த பழக்கம் இருக்கிறது. ஆதிகாலத்திலிருந்தே இருப்பது தான்...' என்றார், நண்பர்.

'ஆதிகாலத்திலிருந்தா? அதைப்பற்றி சொல்லுங்களேன்...' என்று நான் கேட்டதும், கூற ஆரம்பித்தார், நண்பர்: ஒரு காலத்தில், உலக நாடுகள் பலவற்றில், குதிரை பந்தயம் பிரபலமாக இருந்தது. குதிரை பந்தயத்தில் கலந்து கொள்ளும் குதிரைகளின் மீது பணம் கட்டுவதைப் பற்றி கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், குதிரை பந்தயத்தை வேடிக்கை பார்க்க வந்தவர்களில் சிலர், இந்த குதிரை ஜெயிக்குமா, தோற்குமா என்று தங்களுக்குள், 'பெட்டிங்' அதாவது, பந்தயம் கட்டுவதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அக்காலத்தில், குதிரை பந்தயத்தை அடிப்படையாக வைத்து, 'பெட்' கட்டியவர்களில், தோற்றவர்தான், வெற்றி பெற்றவருக்கு விருந்து வைக்க வேண்டும். விருந்துக்கு பதிலாக, வித்தியாசமான பரிசுகள் தருவதாக ஒப்பந்தம் செய்து கொள்வதும் உண்டு.

இவ்வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக பரிணாம வளர்ச்சி பெற்று, குதிரை பந்தயம் மட்டுமல்லாமல், இரு நண்பர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரிந்திருந்தால், அவர்களை சமாதானப்படுத்த, 'நட்பு பந்தயம்' என்ற பெயரில், மற்ற நண்பர்கள் அந்த இருவருக்கும் இரவு விருந்து அளித்து, பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்த நிகழ்வுகளும் நடந்தேறியுள்ளன.

அதற்கடுத்து, தேர்தலில் போட்டியிடும் இரு கட்சி தலைவர்களோ அல்லது அவர்களின் ஆதரவாளர்களோ, யார் ஜெயிப்பர் என்று பந்தயம் கட்டுவர். தேர்தல் முடிவுக்கு பின், தோற்ற வேட்பாளரோ அல்லது அவரது ஆதரவாளர்களோ, மீசை, தாடியை மழித்து கொண்ட கூத்தும் நடந்துள்ளது.

இன்றும் கூட, 'நான் இதை செய்யலைன்னா ஒரு பக்க மீசையை எடுத்து விடுகிறேன்...' என்றோ, 'மொட்டை அடித்துக் கொள்வேன்...' என்றோ வீராப்பாக பேசுவதில்லையா? அது போன்றது தான்.

ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரை, கால்பந்தாட்டத்தின் போதும், பந்தயம் கட்டுவதுண்டு. குறிப்பாக, இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் நடைபெறும் கால்பந்து போட்டிகளின் போது, எந்த அணி வெற்றி பெறும் என்று பார்வையாளர்கள் மத்தியில், 'பெட்' கட்டுவது சகஜம்.

தாங்கள், ஆதரவளித்த கால்பந்து அணி, தோற்றுப்போனால், தோற்றவர், வெற்றி பெற்ற அணியினர் அணிந்துள்ளது போன்ற, 'ஜெர்சி' எனப்படும் பனியனை அணிந்து, புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும். சில நேரங்களில், அந்த புகைப்படத்தை, சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்படும்.

இங்கிலாந்து நாட்டில், கிறிஸ்துமஸ் அன்று, பனிப் பொழிவு இருக்குமா அல்லது வெப்பம் நிலவுமா என்று பந்தயம் நடத்தப்படும். தோற்றவர்கள், பனியிலோ அல்லது வெயிலிலோ விழுந்து புரள வேண்டுமா என்பதற்கு சரியான தகவல் இல்லை.

சில நாடுகளில், பிரபலமான, வி.ஐ.பி.,களின் சொந்த வாழ்க்கையை பற்றியும் பந்தயம் வைக்கப்படும்.

'இவரது காதல், திருமணத்தில் முடியுமா? யாருக்கு, யாருடன் திருமணம் நடைபெறும், என்ன குழந்தை பிறக்கும், என்ன பெயர் வைப்பர். இவர் நடித்த படம் வெற்றி பெறுமா? இந்த தலைவர், நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயிப்பாரா?' என்பதற்கெல்லாம் பந்தயம் கட்டுவர்.

அமெரிக்காவில், 'ஆஸ்கர்' திரைப்பட விருது வழங்கும் நிகழ்வின் போது, பரிசீலனைக்கு வந்துள்ள படங்களில், எது சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்படும், எந்த நடிகருக்கு, 'சிறந்த நடிகர்' விருது கிடைக்கும் என்று பந்தயம் கட்டுவர். இந்த பந்தயத்தில், தோற்றவர், வெற்றி பெற்றவர்களுக்கு, குறிப்பிட்ட காலத்துக்கு இனிப்பு மற்றும் மதுபானம் வாங்கித்தர வேண்டும்.

அமெரிக்காவில், பேஸ்பால் விளையாட்டு மிகவும் பிரபலம். இரண்டு அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டியின் போது, சில அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள், இரண்டு அணியாக பிரிந்து, பந்தயம் கட்டுவர். இதில் பணத்துக்கு பதிலாக, பந்தயத்தில் தோற்றவர்கள், இனிப்பு அல்லது மதிய உணவு வாங்கி, வெற்றி பெற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும். உணவுக்கு பதிலாக, அலுவலகத்தை அலங்கரிக்க வேண்டும் என்று விதியும் இருக்கும்.

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளில், ஆண்டுதோறும், 'கிராண்ட் நேஷனல்' குதிரை பந்தயம் நடைபெறும். இந்த பந்தயத்தை வைத்து, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் தங்களுக்குள் பந்தயம் கட்டிக் கொள்வர். தோற்றவர், ஜெயித்தவருக்கு, தேநீர் விருந்து அளிக்க வேண்டும் அல்லது ஒருநாள் மட்டும் ஜெயித்தவர் வீட்டு வேலைகளை செய்ய வேண்டும்.

பணத்தை மையமாக கொண்ட பந்தயங்களை விட, நட்பு, நகைச்சுவை, வேடிக்கை மற்றும் சமூக உறவுகளை வலுப்படுத்தும் இத்தகைய சவால்களும், பந்தயங்களும் பல நாடுகளின் கலாசாரங்களில் தனித்துவமான இடத்தை பிடித்துள்ளன. போட்டியை விட, பங்கேற்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியையே பிரதானமாக கரு தப்படுகிறது.

- என்று கூறி முடித்தார், நண்பர். உடனே, நண்பரை அவசரமாக வெளியே அழைத்து சென்று விட்டார், லென்ஸ் மாமா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us