தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப

அந்துமணி பா.கே.ப

அந்துமணி பா.கே.ப

1


PUBLISHED ON : நவ 01, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 01, 2026

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா கே

நவராத்திரி, சரஸ்வதி பூஜை என, தொடர் விடுமுறை காரணமாக, 'பீச்' நண்பர்கள் வெகு, 'பிசி!' அலுவலகத்தில் இருந்தவர்கள், அவரவர் வேலையில் மூழ்கி இருந்தனர். தன், 'கேபினில்' கலைந்திருந்த பழைய புகைப்படங்களை ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்தார், லென்ஸ் மாமா. அப்போது, எழுத்தாள நண்பர் ஒருவர் வந்தார். அவர், எழுத்தாளர் மட்டுமல்ல... சித்த வைத்தியர், ஜோதிடர், ஆன்மிகவாதி என, பன்முகம் கொண்டவர்.

அனைவரையும், ஒரு, 'லுக்' விட்டு, 'ஏம்பா, இப்படி கர்மமே கண்ணாக இருந்தால் எப்படி?' என்றார்.

'ஓய்... நீர் வந்தவுடன் எல்லாவற்றையும் விட்டுட்டு, உம்மை வரவேற்கணுமா? இல்லாவிட்டால் நெற்றிக்கண்ணை திறந்து எரிச்சிடுவீரோ!' என்று வசனம் பேசினார், மாமா.

'அப்படியெல்லாம் செய்வேனாப்பா நான். எல்லாரும் சீரியஸா வேலைப் பார்க்கிறீங்களே... கொஞ்சம், 'ரிலாக்ஸ்' செய்யலாம்ன்னு... சரி... சரி நம் கண்களைப் பற்றியும், அதன் சக்தி பற்றியும் தெரியுமா?' என்று கேட்டார், அந்த சகலகலா வல்லவர்.

'தெரியாத விஷயத்தை, தெரிந்து கொள்வதற்கு, நானும், மணியும் எப்பவுமே தயார்தான். நீர் பாட்டுக்கு சொல்லும். காதில் வாங்கிக் கொள்கிறேன்...' என்றார், மாமா.

கூற ஆரம்பித்தார், நண்பர்: நம் உடலில் இருக்கும் உறுப்புகளில் முதன்மையானது, கண்கள் தான். கண்களை வைத்தே ஒரு மனிதனின் குணத்தை அறிந்துகொள்ள முடியும். உடல் மற்றும் மனதில் உள்ள நோய்களையும், கண்கள் காட்டிக் கொடுத்து விடும்.

'ஹிப்னாடிசம்' பயிற்சி செய்வதில் முக்கிய பங்கு வகிப்பது கண்கள் தான்.

மகாபாரதத்தில், துரியோதனனின் தாய், காந்தாரி கண்களைக் கட்டி கொண்டு இருந்ததால், அவளது பார்வையின் சக்தி அதிகரித்திருந்தது. மகாபாரத போரின் போது, துரியோதனனுக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என்பதற்காக, தாய் காந்தாரி முன், அவன் முழு நிர்வாணமாக நிற்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், பெற்ற தாயின் முன், வளர்ந்த மகன் நிர்வாணமாக நிற்பது நன்றாக இருக்காது என்பதால், இடுப்பில் சிறு துண்டு கட்டிக்கொள்வது என்று முடிவானது.

காந்தாரி, தன் கண்களில் கட்டியிருந்த துணியை அவிழ்த்து, துரியோதனனை தலை முதல் கால் வரை பார்த்தாள். உடனே, அவன் உடல் முழுவதும் வஜ்ரம் போல் உறுதியானது. இடுப்பில், துண்டு கட்டியிருந்த இடத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதை அறிந்த பாண்டவர்களில் ஒருவனான, பீமன் தன் கதாயுதத்தால், துரியோதனனின் தொடைப் பகுதியில் அடித்து, போரில் வெற்றி பெற்றான்.

கண் பார்வைக்கு எவ்வளவு சக்தி இருக்கிறது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இது.

அதேபோல், பிரபல கராத்தே வீரர், புரூஸ்லீ, எதிரிகளிடம் சண்டையிடும் போது, தன் கைகளால், தன் கண்களை மறைத்தபடி தான் சண்டையிடுவார். எதிரி, தன் கண்களை கூர்ந்து பார்த்து, வசியம் செய்துவிடக் கூடாது என்பதற்காகவே அப்படி செய்வாராம்.

அடுத்து, ராமாயணத்தில் வாலியின் முன், ஒருவன் சண்டையிட வந்தால், தன் கண் பார்வையால், எதிரியின் பலத்தில் பாதியை தன்வசமாக்கிக் கொள்ளும் சக்தி அவரிடமிருந்தது. இது தெரிந்து தான், வாலியை மறைந்திருந்து கொன்றார், ராமர்.

பிரபல குத்துச்சண்டை வீரரான, முகம்மது அலி, கண்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுத்து, அபாரமான சக்தியுடன் களத்தில் இறங்குவாராம். போட்டி களத்திற்குள் நுழைந்தவுடன், சிறிது நேரம் எதிரில் நிற்கும் போட்டியாளரை கூர்ந்து பார்ப்பார். அப்போது, 'ஒரே சுற்றில் இவரை தோற்கடிப்பேன்...' என்று, அவர் மனதிற்குள் சொல்லி, சண்டையை ஆரம்பிப்பாராம். அந்த பார்வையில் நிலைகுலைந்து போய்விடுவார், எதிரி. முதல் சுற்றிலேயே வெற்றியும் பெற்று விடுவார் முகம்மது அலி.

வர்ம கலையில், நோக்கு வர்மம் என்று ஒன்று உண்டு. இந்த கலையில், கண்களால் பார்த்தே ஒருவரை அடித்து வீழ்த்த முடியும். அதுமட்டுமல்லாமல், 10 கி.மீ., துாரத்திலுள்ள ஒருவரை கூட, கண்களின் காந்த சக்தியை காற்றில் கலந்து அனுப்பி, அந்நபரை அடித்து வீழ்த்த முடியும்.

இத்தகைய சக்திகளை பெற, நிறைய பயிற்சிகளும் உள்ளன.

உதாரணமாக, எரியும் மெழுகுவர்த்தியின் தீ ஜ்வாலையை தொடர்ந்து, இமைக்காமல் நீண்ட நேரம் பார்க்க வேண்டும். கண்களுக்கு அற்புதமான சக்தி கிடைக்கும், ஞாபக சக்தி அதிகரிக்கும் மற்றும் மனம் ஒருநிலைப்படும்.

கண்ணாடி முன் அமர்ந்து, அதில் தெரியும் நம் பிம்பத்தில், ஆக்கினை சக்கரம் என்று சொல்லப்படும் புருவ மத்தியை தொடர்ந்து பார்க்க வேண்டும். அடுத்தவரை, தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முக்கியமான பயிற்சி இது.

இன்னொரு பயிற்சி... காலையில் உதயமாகும் சூரிய ஒளிக் கதிர்களை கண் இமைக்காமல், தொடர்ந்து பார்க்க வேண்டும். கண்கள் சக்தி பெறுவதுடன், முகமும் பொலிவு பெறும்.

நண்பர் சொல்லிக் கொண்டிருக்கும் போது, 'கொஞ்சம் இருப்பா... இளம் வெயிலை பற்றி சொல்லும் போது, ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது...' என்று இடையில் புகுந்தார், லென்ஸ் மாமா... 'அது என்னன்னா, முன்பெல்லாம் காலை வேளையில், சென்னை, 'பீச்'சில் நடைபயிற்சி செய்து வருவேன். அப்படி ஒருநாள் நடைபயிற்சி சென்றபோது, அண்ணாதுரை சமாதிக்கு பின்பக்கம், நடுத்தர வயது தம்பதியர், ஸ்கூட்டரில் வந்து நின்றனர்.

'மனைவி, மணற்பரப்பில், இளம் சூரியனை பார்த்தபடி அமர்ந்து, அதன் ஒளியை கண்களால் உள்வாங்கிக் கொண்டிருந்தார். கணவனோ, ஸ்கூட்டரிலிருந்து இறங்காமல், ஒரு காலை தரையில் ஊன்றியபடி ஸ்டைலாக அமர்ந்திருந்தார். நடைபயிற்சியில் இருந்த இளம் பெண்களை, எந்தவித, 'லஜ்ஜை'யுமின்றி, கண்களால் அளந்துக் கொண்டிருந்தார்.

'துாரத்திலிருந்தே இதைப் பார்த்த நான், அவன் அருகில் சென்று, அவன் மனைவியை உற்றுப் பார்க்க, சுதாரித்து, கடலைப் பார்த்தபடி திரும்பி நின்று கொண்டான்...' என்று மாமா கூறியதும், அனைவரும் சிரித்து விட்டனர்.

'மாமா, உமக்கு குசும்பு அதிகம்தான்...' என்றார், உதவி ஆசிரியர் ஒருவர். 'கண்களைப் பற்றி அவ்வளவு தானா, இன்னும் இருக்கிறதா?' என்றார், மாமா. 'நிறைய இருக்கிறது... இப்போதைக்கு இது போதும்...' என்று முடித்துக் கொண்டார், நண்பர். என்ன வாசகர்களே... பகலிலேயே நட்சத்திரங்களை பார்க்க பயிற்சி எடுத்துக் கொள்வோமா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us