தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : நவ 15, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 15, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா-கே

அலுவலகம். அன்று , லென்ஸ் மாமா வருவதற்கான அறிகுறியே தெரியவில்லை; 'திண்ணை' நாராயணனும் வரவில்லை. இருவரும் இல்லாமல், ஆபிஸ், 'கலகல'ப்பின்றி, 'வெறிச்'சென்று இருந்தது. 'டிவி'யில் செய்தி சேனல் பக்கம் பார்வையை திருப்ப, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், பதவி விலக வேண்டும் என்பதற்காக, நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டங்கள் பற்றிய செய்தி ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. அவர் பதவி விலக செய்வதில், எதிர்க்கட்சியினர் ஏன் போராட வேண்டும்? ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்வது அவ்வளவு கஷ்டமா? என் மனதில் பல கேள்விகள் எழுந்தன. அச்சமயம், ஆசிரியரைப் பார்க்க, வழக்கறிஞர் ஒருவர் வந்தார். ஆசிரியர் வரும்வரை அவருடன் பேசிக் கொண்டிருக்கலாமே என்று அருகில் அழைத்து, என் சந்தேகங்களை கேட்டேன். மடைத்திறந்த வெள்ளம் போல் சொல்ல ஆரம்பித்தார், வழக்கறிஞர்: கடந்த, சில வாரங்களாக நம் தேர்தல் ஆணையர், ஞானேஷ்குமாரை பதவி விலகச் செய்ய வேண்டும் என, நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வந்தாலும், அவரை பதவி நீக்கம் செய்வது அவ்வளவு சுலபமல்ல என்று, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அவரது சகாக்களுக்கும் நன்கு தெரியும்.

அடுத்து, போராட்டத்துக்கு பயந்து, ஞானேஷ்குமாரே ராஜினாமா செய்து விடுவார் என, எதிர்பார்த்தனர். ஆனால், அதுவும் நடக்கவில்லை.

அதுசரி, ஜனாதிபதி நினைத்தால், ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்துவிட முடியுமா என்றால், அதுவும் முடியாது.

என்ன காரணம் என்று சொல்வதற்கு முன், சில முன்னுதாரணங்களை பார்ப்போம்.

அரசு சார்ந்த எந்த அங்கத்திலும் சேராமல், தன்னாட்சியாக செயல்படுபவர்கள், உயர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தலைமை கணக்குத் தணிக்கையாளர் போன்றவர்கள் உள்ளனர். இவர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தால், உடனடியாக அவர்களை பதவி நீக்கம் செய்ய முடியாது.

அப்படியே, பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்றால், நாடாளுமன்றத்தில் இரு அவைகளில், ஏதாவது ஒன்றில் குற்றச்சாட்டு முன்னெடுக்கப்பட்டு விவாதம் நடைபெறும். நான்கில் ஒரு பங்கு உறுப்பினர்கள், 14 நாட்களுக்கு முன் இதுகுறித்து முன் அறிவிப்பு வெளியிட வேண்டும். இரு அவைகளைச் சேர்ந்த மொத்த உறுப்பினர்களிடையே ஓட்டெடுப்பு நடத்தப்பட்டு, பதவி நீக்கம் செய்யலாம் என்பதற்கு, மூன்றில் இரண்டு பங்கு, வாக்குகள் பெற்றிருக்க வேண்டும்.

அடுத்து, பெற்ற வாக்குகள் அடிப்படையில், சம்பந்தப்பட்டவரை பதவி நீக்கம் செய்வதா, வேண்டாமா என்பதற்கான தீர்மானம் கொண்டு வரப்படும்.

நீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்ட விசாரணைக்குழு, சம்பந்தப்பட்டவர், தவறான நடத்தை அல்லது கடமையை செய்ய தகுதியில்லாதவர் போன்ற குற்றச்சாட்டை முன் வைத்தால், அரசியலமைப்பு சட்டப்பிரிவின் 124(4) மற்றும் 218-ன் கீழ் அவர்களை பதவி நீக்கம் செய்யலாம்.

இது, இந்தியாவில், பிரிட்டிஷ் ஆட்சி இருந்த காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ளது.

பிரிட்டிஷ் ஆட்சியின் போது, கவர்னர் ஜெனரலாக இருந்த, வாரன் ஹேஸ்டிங்சும், அப்போது தலைமை நீதிபதியாக இருந்த, இம்பே ஆகிய இருவரும் பஞ்சாப் பகுதியை ஆட்சி செய்து வந்த மகாராஜா நந்தகுமார் மீது, போலி ஆவணம் தயாரித்ததாக பொய்யான குற்றச்சாட்டை முன் வைத்து, அவரை துாக்கிலிட ஆணை பிறப்பித்து, அதை நிறைவேற்றியும் மகிழ்ந்தனர்.

இத்தனைக்கும் போலி ஆவணம் தயாரிப்பது, மரணத்தண்டைக்குரிய குற்றமல்ல என்ற சட்டமே இருந்தது.

இதைத் தொடர்ந்து, 1780ல், வாரன் ஹேஸ்டிங்ஸ் மற்றும் இம்பே ஆகிய இருவரையும், இங்கிலாந்து அரசு திரும்ப அழைத்துக் கொண்டதோடு, அவர்கள் மீது விசாரணை குழுவும் அமைத்தது.

ஆனால், ஹேஸ்டிங்க்ஸ் மீதான விசாரணைக்கு பின், பாராளுமன்ற உறுப்பினர்களின் போதிய ஆதரவு கிடைக்காததால், அவரை விடுதலை செய்தது.

தலைமை நீதிபதி, இம்பேக்கு எதிரான குற்றச்சாட்டின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கிடப்பில் போட்டு விட்டனர்.

சுதந்திர இந்தியாவில், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில், நீதிபதியாக இருந்த, சவுமித்ரா சென் மீதும் ஏதோ ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. அவரை பதவி நீக்கம் செய்ய, நாடாளுமன்ற மேலவையில், 2011ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்து, மக்களவையிலும் விவாதிக்கப்பட்டது. இரு அவைகளிலும் முடிவெடுப்பதற்குள், அவராகவே பதவி விலகி விட்டார்.

அதேபோல், உச்ச நீதிமன்றத்தை சேர்ந்த, வி.ராமசாமியை பதவி நீக்கம் செய்ய, 1993ல், மக்களவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அப்போதைய பிரதமர், நரசிம்ம ராவ் மற்றும் அவரது கட்சியினர் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாததால், தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.

ஜாதிய இட ஒதுக்கீட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்த, குஜராத் மாநில உயர் நீதிமன்ற நீதிபதி, ஜே.பி.பர்திவாலாவை பதவி நீக்கம் செய்வதற்காக, 2015ல், அறிவிப்பு செய்யப்பட்டது. ஆனால், நீதிபதி, தான் பேசியதை வாபஸ் பெற்றுவிட்டதால், தீர்மானம் கைவிடப்பட்டது.

மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த, எஸ்.கே.கங்கேலே என்பவர், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி, விசாரணை குழுவினரால் விசாரிக்கப்பட்டார். போதிய ஆதாரம் இல்லை என்று, அப்பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்து விட்டனர்.

தமிழகத்தில், கடந்த ஆண்டு, திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் பிரச்னையில் தீர்ப்பு சொன்ன, நீதிபதி, ஜி.ஆர்.சுவாமிநாதன் மீதும் குற்றம் சாட்டப்பட்டு, பதவி நீக்குவதற்கான தீர்மானம் பாதியிலேயே கைவிடப்பட்டது நினைவிருக்கலாம்.

சில மாதங்களுக்கு முன், டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி, யஷ்வந்த் சர்மா வீட்டில் இருந்த கட்டுக்கட்டான பணக்குவியல், திடீரென எரிந்து சாம்பலானது நினைவிருக்கிறதா? அவருக்கு எதிரான வழக்கு, ஆரம்பத்தில் தீவிரமாக இருந்து, பின், 'கப்சிப்' என, அணைந்து போனது.

முன்பு, தலைமை தேர்தல் ஆணையராக இருந்த, டி.என்.சேஷன், ஒருமுறை இடைத்தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலை நடத்த, தன்னிச்சையாக முடிவு செய்தபோது, நாடாளுமன்றத்தில் சில உறுப்பினர்கள், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொடி பிடித்தனர்.

ஆனால், அரசு, கூடுதலாக இரண்டு ஆணையர்களை நியமித்து, சேஷனின் அதிகாரத்தை குறைத்தது.

இப்ப, ஞானேஷ்குமார் விஷயத்துக்கு வருவோம். ஞானேஷ்குமார், மற்றொரு சேஷனா என்று தெரியாது. ஆனால், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி விஷயத்தில், அவருடன் பணிபுரிந்த இரண்டு ஆணையர்கள், மாறுபட்ட கருத்தை தெரிவித்ததால் தான் இப்பிரச்னை எழுந்தது உண்மை.

ஆனால், அவராக ராஜினாமா செய்யாதவரை, அவரது பதவிக்கு எந்த பாதிப்பும் இல்லை.

ஞானேஷ்குமாரை பதவி நீக்குவதற்காக, எதிர்க்கட்சிகள், மீண்டும் புதிய, பதவி நீக்க தீர்மானத்தை கொண்டு வந்தால் பரிசீலிக்கப்படும் என்று மக்களவை சபாநாயகர், ஓம் பிர்லா கூறிவிட்டார்.

ஆக, இப்போதைக்கு பதவி நீக்கம் விஷயம் பிசுபிசுத்து போனது தான் நிஜம்.

- என்று கூறி முடித்தார், வழக்கறிஞர். அம்மாடியோவ்... நீதிபதி மற்றும் தலைமை தேர்தல் ஆணையருக்கு இவ்வளவு, 'பவரா?' என்று ஆச்சரியமடைந்தேன், நான்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us