தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : நவ 22, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 22, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா-கே

அலுவலகம்...

நான் பிறந்த நாட்டுக்கு எந்த நாடு பெரியது இங்கு பெண்ணும், ஆணும் வாழும் வாழ்க்கை இனியது தென்னாட்டிலே தண்ணீரும், பொன்மீனும் விளையாடும்மூன்று தமிழ் தோன்றும் இடம் எங்கள் நாடு... யானைக்கட்டி போரடிக்கும் பாண்டி நாட்டிலே பொன்னி வீடுதோறும் தீபம் ஏற்றும் சோழ நாட்டிலே தென்னை இளநீர் சொரியும் சேர நாட்டிலே...

- மெல்லிய குரலில், ரசித்து பாடியபடி வேலையில் ஈடுபட்டிருந்தார், லென்ஸ் மாமா.

'என்ன மாமா, ரொம்ப குஷியாக இருக்கிறீர் போலிருக்கே...' என்று பேச்சுக் கொடுத்தார், உதவி ஆசிரியர் ஒருவர்.

'ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது...' என்று பதில் பாட்டு பாடினார், மாமா.

'இன்று ஒரு மார்க்கமாதான் இருக்கிறார்...' என்று முணுமுணுத்தார், உ.ஆ., மாமா பாடிய பாடலை கேட்டபோதும், இன்று வந்த ஒரு செய்தியும், நம் பாரம்பரிய பெருமையை நிலைநாட்டுவதாக உள்ளது...' என்றார், மூத்த செய்தியாளர்.

'அது என்ன செய்தி. நான் படிக்கவில்லையே...' என்றார், உ.ஆ., யானை கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று 'யானை கட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை... என்ற வரிகள், 'அல்லி அரசாணி மாலை' என்ற நாட்டுப்புற பாடலில் இடம் பெற்றதைச் சொல்கிறீர்களா?' என்றேன், நான்.

'சரியா சொன்னீர், மணி. இந்த பாடலும், வெளியான செய்திக்கும் உள்ள தொடர்பை தான் சொல்ல விரும்புகிறேன்...' என்றவர், கூற ஆரம்பித்தார்: அறுவடை செய்த நெற்கதிர்களில் இருந்து, நெல் மணிகளைப் பிரித்தெடுக்க, இரு மாடுகளை பிணைத்து நெற்கதிர்கள் மீது நடக்க வைப்பதை, 'போரடித்தல்' என்பர். ஆனால், அன்றைய மதுரையில், நெல் விளைச்சல் அதிகமாக இருந்ததால், மாடுகளைக் கொண்டு போரடித்தால் மாளாது என்பதற்காக, யானைகளைக் கட்டி போரடித்தனர் என்று, தமிழர்களின் வரலாற்றுப் பெருமையைத்தான் இந்த நாட்டுப்புற பாடல் வரிகள் உணர்த்துகின்றன.

இக்கருத்தை வைத்து தான், கவியரசர் கண்ணதாசனும், தங்கச்சுரங்கம் என்ற படத்தில் மேற்படி பாடலை எழுதினார். அந்தப் பாடலைதான் லென்ஸ் மாமா, ரசித்துப் பாடினார்.

இன்று வந்த செய்தி என்னவென்றால், இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாம் மாநிலத்தில், விவசாயி ஒருவர், யானையை கொண்டு நிலத்தை உழுதுள்ளார், என்பது தான்.

அடர்ந்த காடுகளும், கரடுமுரடான களிமண் நிலமும் கொண்ட பூமி, அசாம். அப்படிப்பட்ட நிலத்தை உழுது பக்குவப்படுத்தி, விவசாயம் செய்ய வேண்டிய நிலை. மாடுகளைக் கொண்டு நிலத்தை உழுவதற்கு நிறைய நாட்களும், அதிகப்படியான உழைப்பையும் தர வேண்டும். அதற்கான புதுவழியைத்தான் கடைப்பிடித்துள்ளார், அந்த விவசாயி.

அசாம் மாநிலம், கோலகாட் மாவட்டத்திலுள்ள முர்புலானி என்ற கிராமத்தைச் சேர்ந்த, அதுல் கர்மாகர் என்ற விவசாயி, யானை ஒன்றை வளர்த்து வருகிறார். (அசாம் மாநிலத்தில், தனியாரும் யானை வளர்க்க அனுமதி உண்டு.) தனக்கு சொந்தமான நிலத்தில், கடுகு சாகுபடி செய்ய விரும்பினார், அதுல். டிராக்டர் போன்ற நவீன கருவிகளைப் பயன்படுத்தும் அளவுக்கு அந்த விவசாயிடம் வசதியில்லை. 'யானை இருக்க பயமேன்...' என்று களத்தில் இறங்கி விட்டார்.

(அங்குள்ளவர்கள், இன்னும் பாரம்பரிய முறையிலேயே விவசாயம் செய்து வருகின்றனர்.)

யானையை ஏரில் பூட்டி, நிலத்தை உழ ஆரம்பித்தார். யானையும், எஜமானனின் உத்தரவுபடி, அடிமேல் அடி வைத்து, நடக்கும் காட்சியை அக்கிராமத்தினர் அனைவரும் பார்த்து ஆச்சரியமடைந்தனர். சமூக வலைதளங்களில் இக்காட்சி, 'வைரல்' ஆனது. பலர் பாராட்டி, பதிவுகள் போட்டனர்.

ஒரு சிலரோ, 'என்னதான் வீட்டில் வளர்த்தாலும், யானை போன்ற வனவிலங்குகளை இதுபோன்று உழவு வேலைகளுக்கு பயன்படுத்துவது அதை கொடுமைப்படுத்துவது போலாகும்...' என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

-என்று கூறி முடித்தார், மூத்த செய்தியாளர். அதுவரை, அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த, லென்ஸ் மாமா, 'ஏம்பா, நம்மூரில் யானைக்கட்டி போரடித்த போது, இதுபோன்ற, 'கருத்து கந்தசாமிகள்' எங்கே போயினர்? நம்மூரில் நடந்தால், பெருமை. அயல் மாநிலத்தில் நடந்தால், கொடுமையா? 'அந்த விவசாயியிடம் யானை இருந்தது... உழவு செய்ய பயன்படுத்தினார். இதில், கொடுமைப்படுத்த என்ன இருக்கிறது? 'எல்லாவற்றுக்கும் ஒரு எதிர் கருத்து தெரிவிப்பது தான் புத்திசாலித்தனம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர் போலும். 'அசாம் போன்ற பின் தங்கிய மாநிலங்களில் பிழைப்பதே பெரும்பாடு என்பது, 'எல்லாவற்றையும் இலவசமாக' பெற்று, வசதியுடன் வாழும் இவர்களுக்கு எங்கே தெரிய போகிறது? அந்த விவசாயியை நிச்சயம் பாராட்ட வேண்டும்...' என்றார், லென்ஸ் மாமா. ப 'நடிகவேள் எம்.ஆர்.ராதா - 100 தகவல்கள்!' என்ற நுாலில் படித்தது. எம் .ஆர்.ராதா பற்றி, விழா ஒன்றில், தமிழக முன்னாள் முதல்வர், காமராஜர் பேசியது...

'மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும், எம்.ஆர்.ராதா யாருக்கும் பயப்படாதவர். அஞ்சா நெஞ்சம் படைத்தவர். தனக்கென தனி கொள்கையை வகுத்துக் கொண்டவர். உயர்ந்த லட்சியமும், கொள்கையும் கொண்ட அவருக்கு தொல்லைகள் கொடுத்தனர், பலர். அவரது நாடகங்களை தடைசெய்து, கோர்ட் அளித்த தீர்ப்பை ஏற்று, எல்லா தொல்லைகளையும் தாங்கி, தன் கொள்கைகளை காப்பாற்றியவர், ராதா.

'தமிழகத்தில் சிறந்த நடிகர் யார் இருக்கின்றனர், ராதாவை தவிர, வேண்டுமென்றால் மற்ற நடிகர்களிடம் பணம் சேர்ந்திருக்கலாம். ஆனால், இங்கு சிறந்த நடிகர், ராதாவை தவிர, வேறு யார் இருக்கின்றனர். மோசடி செய்யாதவர், திறமையாக நடிக்கக் கூடியவர். தமிழகத்தில் சிறந்த நடிகர், ராதா தான் என்று சொல்வேன்.

'ராதா என்னை எத்தனையோ முறை திட்டி இருக்கிறார். அவர் திட்டியதற்காக, நான் ஒன்றும் வருத்தப்படவில்லை. அவர் திட்டுவதில் நியாயம் இருக்கிறதா என்று பார்ப்பேன். நியாயம் இருந்தால் எடுத்துக் கொள்வேன். ராதாவுக்கு என் மேல் கோபமில்லை. எனக்கும், அவர் மீது கோபமில்லை. எங்களுக்குள் நட்புண்டு; அடிக்கடி சந்தித்துக் கொள்வதில்லை. எப்போதாவது சந்திப்போம். அவருடைய தொழில் வேறு; எனக்கோ வேறு வேலை.

'நேர்மையுடன் நடக்கக்கூடிய, எம்.ஆர்.ராதாவுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று, நாடக கம்பெனி நடத்தி புகழ்பெற்ற, யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையிடம் கூறினேன்.

'இந்த விழாவை கூட நானே ஏற்பாடு பண்ணியது.

'எத்தனையோ பேருக்கு நான் பொன்னாடை போர்த்தியிருக்கிறேன். அப்போதெல்லாம் எனக்கு இப்படி ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டதில்லை. மனப்பூர்வமாக நான் யாருக்கும் பொன்னாடை போர்த்தியதுமில்லை. ராதாவுக்கு பொன்னாடை போர்த்துவதன் மூலம் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்...' என்று பேசி, ராதாவுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டினார், காமராஜர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us