தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப

அந்துமணி பா.கே.ப

அந்துமணி பா.கே.ப


PUBLISHED ON : நவ 29, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 29, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா.கே.

பீச் மீட்டிங்...

'ஓய் குப்ஸ், சென்னை மெரினா கடற்கரையில், கண்ணகி சிலையிலிருந்து பட்டினப்பாக்கம் வரை, மெட்ரோ ரயில் பாதைக்கான வேலைகள் ஆரம்பித்ததிலிருந்து, ஒரு வித்தியாசத்தை கவனித்தீரா?' என்றார், லென்ஸ் மாமா.

'மெயின் ரோடிலிருந்து, பீச் உள்வட்ட சாலைக்கு வருவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கிறது, 'பார்க்கிங்' நெரிசலும் அதிகமாகியுள்ளது...' என்றார், குப்பண்ணா. 'நான், அதை சொல்லவில்லை, ஓய்... நாணா நீர் சொல்லும்வே...' என்றார், மாமா.

'எனக்கு தெரியலைப்பா... என்று ஒதுங்கிக் கொண்டார், 'திண்ணை' நாராயணன்.

'மணி, உனக்கு தெரியுமா?' என்றார், மாமா. 'முன்பு போல், இப்போது, மணற்பரப்பிலோ, படகு மறைவிலோ காதல் ஜோடிகள் அதிகம் காணப்படுவதில்லை, அதானே...' என்றேன், நான்.

'சபாஷ், மணி. சரியா சொல்லிட்டே...' என்று பாராட்டினார், மாமா.

'அட, ஆமாம். இதை நான் கவனிக்கவில்லையே...' என்றார், குப்பண்ணா.

'காதல் ஜோடிகள் இப்போதெல்லாம், சினிமா தியேட்டர்கள் இருக்கும், ஷாப்பிங் மால்ஸ், 'ஹோட்டல்' மற்றும் 'தீம் பார்க்' போன்ற இடங்களுக்கு சென்று விடுகின்றனர். பீச்சுக்கு செல்வது, 'ஓல்டு பேஷனாகி' விட்டதோ...' என்று மெதுவாக முணுமுணுத்தார், நாராயணன்.

'உண்மை தான். இளம் தலைமுறையினர், ஐ.டி., வேலையிலோ, சுய தொழிலிலோ ஈடுபட்டு, நிறைய சம்பாதிக்க ஆரம்பித்து விட்டனர். மேலும், உள்ளங்கையிலேயே உலகை வலம் வர, மொபைல் போன் இருக்கவே இருக்கிறது. 'வார இறுதி விடுமுறை நாளில், 'டேட்டிங்' என்ற பெயரில், தங்களுக்கு பிடித்த ஆண் நண்பர் மற்றும் பெண் தோழியுடன் நகரத்திற்கு அருகில் இருக்கும் சுற்றுலா தலங்களுக்கு சென்று, பொழுதை கழித்துவிட்டு வரும் கலாசாரம் பெருகி விட்டது.

'இதற்காக, நவீன தொழில்நுட்பம் கொண்ட, மொபைல் போனில், 'டேட்டிங்' செயலிகள் நிறைய உள்ளன. அதை பதிவிறக்கம் செய்து, தங்களுக்கு ஏற்ற ஜோடியை தேர்ந்தெடுத்து, பேசியும், ஊர் சுற்றியும் மகிழ்கின்றனர். 'இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, பின்லாந்து நாட்டில், உண்மையான உணர்வுகளுடன் கூடிய காதலைத் தேடுபவர்களுக்காக விசித்திரமான ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்...' என்று, லென்ஸ் மாமா கூறியதும், 'அதென்னப்பா, புதுமையான திட்டம்?' என்று கோரசாக கேட்டனர், நாராயணனும், குப்பண்ணாவும்.

'கிழடுகளுக்கு எவ்வளவு ஆர்வம் பார்...' என்பது போல் ஒரு, 'லுக்' விட, மாமாவின், 'மைண்டு வாய்ஸ்' அறிந்து மனதுக்குள் சிரித்துக் கொண்டேன். கூற ஆரம்பித்தார், மாமா: உலகெங்கும் உள்ள, 'சிங்கிள்ஸ்' எனப்படும் திருமணமாகாத, தனியாக இருப்போருக்கு, 'பின்னிஷ் டின்னர் டேட்' என்ற பெயரில் ஒரு அசத்தலான திட்டத்தை, பின்லாந்து நாட்டின் சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.

இத்திட்டத்தில் கலந்துகொள்ள, பின்லாந்து நாட்டு சுற்றுலாத்துறை இணைய தளத்தில், உலகின் பல்வேறு பகுதியில் வசிக்கும், 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் பதிவு செய்து கொள்ளலாம்.

அப்படி வரும் விண்ணப்பதாரர்களிடம், 'டின்னர் டேட்' ஒன்றுக்கு நீங்கள் என்ன உணவு வகையை பரிந்துரைப்பீர்? ஏன்? என்று ஒரு கேள்வி கேட்கப்படும். அதற்கு, ஆங்கிலத்தில் பதிலளிக்க வேண்டும்.

சுருக்கமாக, சுவாரஸ்யமாக எழுதியவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இவர்கள், பின்லாந்து நாட்டுக்கு, சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவர். விமானப் பயணக் கட்டணம், ஹோட்டலில் சொகுசு அறை, சுவையான உணவு மற்றும் உள்ளூரை சுற்றிப்பார்க்கும் செலவு அனைத்தும் இலவசம் தான்.

அதன்பிறகு தான் இருக்கிறது, அவர்களுக்கு, ஜாக்பாட் பரிசு. அதாவது, பின்லாந்து நாட்டில் தனியாக வசிக்கும் இளம் ஆண் மற்றும் பெண்களுடன் இவர்கள் பழகலாம். அவர்களது கலாசாரத்தை புரிந்து கொள்வதோடு உண்மையான காதல் அல்லது நட்பை கண்டறியும் வாய்ப்பும் கிடைக்கும், என்று அறிவித்துள்ளது, பின்லாந்து நாட்டின் சுற்றுலாத்துறை.

- என்று கூறி முடித்து, 'மணி, ஆசிரியரிடம் அனுமதி பெற்று, பின்லாந்து நாட்டுக்கு சென்று வரலாமா?' என்று கேட்டு கண்ணடித்தார், மாமா. 'உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடாக, தொடர்ச்சியாக முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது, பின்லாந்து. கல்வி முறையிலும் சிறப்பான இடம் பிடித்துள்ளது. அந்நாட்டுக்கு இப்படி ஒரு கிறுக்கு யோசனை எப்படி வந்ததோ?' என்று யோசித்தேன், நான்.

ப

'கடந்து போகும் மேகங்கள்!' என்ற தன்னம்பிக்கை நுாலில் படித்தது: மு க்கிய விஷயமாக, ஒரு இடத்துக்கு அவசியம் போக வேண்டிய சூழ்நிலை வரும்போது, பேருந்து தாமதமாகும் அல்லது மழை கொட்டும். எல்லாம் சரியாக போகும் என்று நம்பி கிளம்பினால், எல்லாம் தலைகீழாக மாறும்.

அந்த நேரத்தில் பெரும்பாலும் என்ன செய்வோம்?

எரிந்து விழுவோம், உள்ளுக்குள் கொதித்து போவோம். ஏன் இப்படி ஆயிற்று என்று கோபப்படுவோம். ஆனால், அந்த கோபம் மழையை நிறுத்துமா? பேருந்தை வரவழைக்குமா? எதுவும் மாறாது.

இத்தகைய நெருக்கடியான நேரத்தை சமாளிக்க, ஜப்பானியர் ஒரு வார்த்தையை கண்டுபிடித்துள்ளனர்.

அது, 'ஷிகட்டா கா நாய்!' அதாவது, 'இதை மாற்ற முடியாது. ஆகவே, அமைதியாக முன்னே போ!' என்பது, இதன் அர்த்தம்.

ரயில் வருவது தாமதமாகிறது என்றால், அதை மாற்ற முடியாது. வந்து சேர வேண்டிய இடத்துக்கு நிச்சயம் வரும். பொறுத்திரு. மழை நிற்கவில்லை என்றால், குடை எடுத்துச் செல்.

இதையெல்லாம் இயல்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். நம் கட்டுப்பாட்டில் இல்லாததை விட்டுவிட்டு, நம்மால் கட்டுப்படுத்த முடிவதில் மட்டும் கவனம் வைப்பது புத்திசாலிதனம்.

திருவள்ளுவரும் இதை தான் சொன்னார்...

இன்னாது இனையது என்று இரங்காமல் இன்னதா நோக்கி செயல்படுவதே அறிவு! நடந்ததை நினைத்து வருந்தி உட்காருவதை விட, இனி, என்ன செய்யலாம் என்று யோசிப்பவனே, ஞானி.

தாமரை பூ சேற்றில் வளர்கிறது, சேற்றை திட்டுவதில்லை. தண்ணீரில் மிதக்கிறது, தண்ணீரை எதிர்ப்பதில்லை. சூரியனை நோக்கி மலர்கிறது, இருளை வெறுப்பதில்லை.

அது, தன்னை சுற்றியிருக்கும் இயல்பான விஷயங்களை அப்படியே ஏற்றுக்கொள்கிறது. நாமும், அப்படியே இருக்க வேண்டும்.

'ஷிகட்டா கா நாய்' என்ற சொல், இரண்டு வகையான மனிதர்களை பிரிக்கிறது.

முதல்வகை, நடந்ததை மாற்ற முடியாது என்று தெரிந்தும், அதையே மனதில் சுமந்து கஷ்டப்படுபவர்கள்.

இரண்டாம் வகை, நடந்ததை ஏற்றுக்கொண்டு, அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிப்பவர்கள்.

இந்த இரண்டு வகையினர் வாழ்க்கையிலும் கஷ்டங்கள் வரத்தான் செய்யும். ஆனால், இரண்டாம் வகையினர் மட்டுமே அமைதியாக வாழ்வர்.

நாம் ஏதாவது திட்டமிட்டபடி நடக்காமல் போகும்போது, உடனே, எரிந்து விழுவதற்கு முன், ஒரு கேள்வியை நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.

'இதை நான் மாற்ற முடியுமா?'

முடியும் என்றால், உடனே செய்ய வேண்டும். முடியாது என்றால், ஆழமாக மூச்சை இழுத்து விட்டு, அடுத்ததுக்கு சென்றுவிட வேண்டும்.

கடந்த காலத்தை திரும்பப் பெற முடியாது. ஆனால், நிகழ்காலத்தில் சிறப்பாக வாழலாம்.

கட்டுப்பாட்டில் இல்லாததை விடு, கட்டுப்பாட்டில் இருப்பதை கவனி. அதுவே, வாழ்க்கையின் ஞானம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us