
கே.எம்.இளங்கோ, சென்னை: எந்த அரசியல்வாதிக்கு, 'காந்தி கண்ணாடி'யைப் போடலாம்?
காந்தி கண்ணாடி போட்டுக் கொள்ள, எந்த அரசியல்வாதிக்கும் இஷ்டம் இல்லை; காந்தி படம் போட்ட நோட்டுகளின் மீது படுத்து உருள மட்டுமே அவர்கள் விருப்பப்படுகின்றனர்!
எம்.பி. தினேஷ், கோவை: காஞ்சியில் சர்க்கரை ஆலையை, ரூ.450 கோடிக்கு, சசிகலா வாங்கி உள்ளதாக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளதே... இவ்வளவு பணம், சசிகலாவிடம் எப்படி சேர்ந்தது?
சென்னையில் ஒரு, சிறிய வீடியோ கடை நடத்தி வந்த சசிகலாவை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தன் வீட்டோடு வைத்துக் கொண்ட பின், பண அளவில், 'மளமள'வென வளர்ந்தவர், சசிகலா. இன்னும் விளக்கம் வேண்டுமா, தினேஷ்?
பா.சுமதி, புழல், சென்னை: முன்னாள் முதல்வர் - இந்நாள் முதல்வர் ஆகியோரில், யாருடைய வெளிநாட்டுப் பயணத்தால், தமிழகத்துக்கு லாபம்?
'கோட்-சூட்-பூட்ஸ்' அணிந்து, போட்டோவுக்கு, 'போஸ்' கொடுத்து, போஸ்டர் ஒட்டிக் கொள்வோரின் குடும்பத்தினருக்கு மட்டுமே லாபம்; தமிழகத்துக்கோ, தமிழக மக்களுக்கோ, எந்த லாபமும் இல்லை!
டி.என்.ரங்கநாதன், ஸ்ரீரங்கம்: எது இல்லாமல், வேலை நடக்காது?
'கிம்பளம்' என பதில் கூறுவேன் என்று தானே நினைத்தீர்கள்... விடாமுயற்சியும், கடின உழைப்பும் இன்றி, எந்த வேலையும் நடக்காது!
* எஸ்.புஷ்பலதா, அவிநாசி: 'ஊர் கூடினால்தான், தேர் இழுக்க முடியும்...' என்கிறாரே அ.தி.மு.க., செங்கோட்டையன்?
உண்மை தான்; ஆனால், அதை ஒரே திசையில் இழுக்க வேண்டும். ஆளாளுக்கு அவரவர் பக்கம் இழுத்தால், தேர் உடைந்து விடும்; தேரின் தற்போதைய சாரதி சரியில்லை!
க.சோனையா, மதுரை: இளையராஜாவுக்கு, விழா எடுக்கும் அளவுக்கு, முதல்வர் ஸ்டாலினுக்கு அப்படி என்ன திடீர் கரிசனம்?
பா.ஜ., ஆதரவில், ராஜ்யசபா எம்.பி., ஆகி விட்டார், இளையராஜா. 'என் ரசிகர்கள் அனைவரும், பா.ஜ.,வுக்கு ஓட்டு போடுங்கள்...' என, அவர் சொல்லி விட்டால் என்ன செய்வது? இதுதவிர, 'இவங்க மாநில வல்லுநரைப் பாராட்டக் கூட, தி.முக.,வுக்கு மனசில்லை போலிருக்கிறது...' என்ற பொல்லாப்பையும் தவிர்க்கவே இந்த பாராட்டு விழா!
என்.இஷா, ராமநாதபுரம்: தினசரி பத்திரிகைகளை, விளம்பரங்களே இல்லாமல் வெளியிட முடியாதா?
இப்போது, நாளிதழின் விலை 8 ரூபாய். விளம்பரம் இன்றி வெளியிட வேண்டும் என்றால், 20 ரூபாய் விலை வைக்க வேண்டி இருக்குமே!
* கே.ஆர்.பத்மா, வேளச்சேரி, சென்னை: 'விதிமீறல் வாகனங்கள் இனி, அபராதம் செலுத்தினால் மட்டுமே அவற்றின் இன்ஷூரன்ஸ் புதுப்பிக்க முடியும்...' என்ற, சென்னை காவல் துறையின் புதிய நடைமுறையை வரவேற்கலாமா?
நிச்சயமாக! இந்த சட்டத்தால், அபராதம் செலுத்தாமல், 'டிமிக்கி' கொடுப்பவர்களுக்கு கிடுக்கி போட முடியும். அரசின் கஜானாவும் நிரம்பும். காவல்துறையில் உள்ள சிலரின் அடாவடியும் குறையும்!