
கே.காசி, வந்தவாசி: 'தமிழ்நாட்டிலுள்ள, 207 அரசு பள்ளிகளை மூடிவிட்டு, 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' விழாவா?' என, பா.ம.க., அன்புமணி கேட்டுள்ளாரே...
காலை, மதிய இலவச உணவு திட்டத்தைத் தவிர, தமிழக அரசின் கல்வி திட்டத்தில் விசேஷமோ, மாணவர் முன்னேற்றத்துக்கான திட்டங்களோ ஏதும் இல்லை; என்ன, எப்படி செய்வது என்பதும் தெரியவில்லை. அதனால், 'சைலன்ட்'டாக, 207 பள்ளிகளை மூடிவிட்டனர். அன்புமணி கேள்வி சரி தான்!
எம்.பி.தினேஷ், கோவை: கோவை, அவினாசி சாலை மேம்பாலத்திற்கு, கட்சித் தலைவர்கள் பெயர் இல்லாமல், மறைந்த ஜி.டி.நாயுடுவின் பெயர் வைக்கப் பட்டுள்ளதே...
நல்லது தானே! கோவையைச் சேர்ந்தவர் அறிவியல் மேதை, ஜி.டி.நாயுடு. அவினாசி சாலையில் தான், அவரது பூர்வீக இல்லமான, 'கோபால் பாக்' இன்றும் உள்ளது. மேம்பாலத்திற்கு அவர் பெயர் வைத்தது, சாலப் பொருந்தும்! 'ஜாதிப்பெயர் எங்கும், எதிலும் இருக்கக் கூடாது...' என்று முழங்கிய அரசு, வசமாக சிக்கி, தானாக வம்பில் மாட்டுகிறது!
* ரா.ராஜ்மோகன், திண்டிவனம்: 'என்னிடம், ஆறு மாத காலம் ஆட்சியை தந்தால், தமிழகத்தை தலைகீழாக மாற்றுவேன்...' என்கிறாரே பா.ம.க., அன்புமணி?
தமிழகத்தை தலைகீழாக மாற்றுவேன் என்று தான் சொல்கிறார்; மேம்படுத்துவேன் என்று சொல்லவில்லை. சொந்த கட்சியினரையே அரவணைத்துச் செல்லும் பக்குவம் இல்லாதவரை நம்பி, தமிழகத்தை எப்படி கொடுப்பது? மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இவர் இருந்தபோது, 'எய்ம்ஸ்' மருத்துவமனை பட்ட பாடு ஒன்று போதுமே!
டி.லிங்கேஷ்குமார், விழுப்புரம்: 'ஓய்வுபெறும் நாளில், அரசு ஊழியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட மாட்டார்கள்...' என்ற தமிழக அரசின் முடிவு பற்றி...
ஊழலில் திளைக்கும் ஊழியர்களுக்கு ஜாலி; நேர்மையான ஊழியர்களாக இருந்தும், காழ்ப்புணர்ச்சி காரணமாக, 'சார்ஜ் மெமோ' வாங்கும் ஊழியர்களுக்கு நிம்மதி!
* வி.சி.கிருஷ்ணரத்னம், சென்னை: 'அடுத்தாண்டு வரப் போவது அரசியல் தேர்தல் கிடையாது. தமிழினம் தன்னைக் காத்துக் கொள்ளக்கூடிய, சமுதாய தேர்தல்...' என்கிறாரே, தமிழக முதல்வரும், தி.மு.க., தலைவருமான மு.க.ஸ்டாலின்?
யாரிடமிருந்து தமிழகம் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லாமல் விட்டு விட்டாரே... தி.மு.க.,விடமிருந்து என்றும் புரிந்து கொள்ளலாம் அல்லவா!
ஏ.எஸ்.யோகானந்தம், ஈரோடு: 'ஆசிய கோப்பை கிரிக்கெட் -2025' தொடர் முழுவதும், தனக்கு கிடைத்த பரிசுத் தொகை மற்றும் சம்பளத்தை, இந்திய ராணுவத்துக்கு வழங்குவதாக, டி-20 அணி கேப்டன் சூரியகுமார் யாதவ் கூறியுள்ளாரே...
சூரியகுமார் யாதவின் பரந்த மனதை இது எடுத்துக் காட்டுகிறது. மற்ற விளையாட்டு வீரர்களும், சினிமாக்காரர்களும் இதுபோன்ற தேசப்பற்றுடன் செயல்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்!
ஒய்.எல்.ஸ்ரீரவிராகுல், ஈரோடு: எனக்கு சனிக்கிழமை இரவு மட்டும் சரியாக துாக்கம் வர மறுக்கிறது. ஏன் என்று சொல்ல முடியுமா உங்களால்?
வாரமலர் இதழில், என்னுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வாசகர்கள் மற்றும் 'தினமலர்' ஊழியர்களைக் காணும் ஆவல்; என் கேள்வி-பதில் பகுதி, பா.கே.ப., பகுதியைப் படிக்கும் ஆவல் ஆகியவற்றால், நீங்கள், சனிக்கிழமை இரவு துாக்கத்தை தொலைக்கிறீர்களோ!