
ஜி.அர்ஜுனன், திருப்பூர்: திருவண்ணாமலையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு வெள்ளி சிம்மாசனம் வழங்கப்பட்டுள்ளதே...
திருவண்ணாமலையில் நடந்த, தி.மு.க., இளைஞரணி வடக்கு மண்டல மாநாட்டில், ஸ்டாலினுக்கு வெள்ளி சிம்மாசனம் வழங்கி, 'நீங்கள் இனி இதில் உட்காருங்கள்; உங்கள் மகன் உதயநிதியின் தலைமையில், நாங்கள் இனி, தமிழ்நாட்டை ஆள்கிறோம்...' என, அமைச்சர் எ.வ.வேலு, சொல்லாமல் சொல்லி விட்டார் போலும்!
* டி.சுதாகர், ராமநாதபுரம்: கிறிஸ்துமஸ் விழாக்களில், முதல் ஆளாக கலந்து கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், ஹிந்து மத விழாக்களில் ஏன் கலந்து கொள்ள மறுக்கிறார்?
நெல்லையில், சமீபத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில், தங்களின் ஆட்சி, சிறுபான்மையினரின் பொற்கால ஆட்சி என்றும், அவர்களின் பாதுகாப்பு அரணாக, தங்களின் ஆட்சி இருக்கும் என்றும் முதல்வர் கூறிவிட்டார். அப்படி எனில், ஹிந்துக்களை பாதுகாக்கும் எண்ணம் இல்லையோ என்று தானே கருத வேண்டியுள்ளது! 'ஆடி மாத கூழ் விழா!' என்று ஒன்றை ஏற்பாடு செய்து, அவரை அழைத்தால், என்ன செய்வார் என்று பார்க்கலாமே!
* பி.ஜெயமோகன், பெங்களூரு: பெண்கள் ஓட்டுக்களைப் பெற மகளிர் உரிமைத் தொகையை, அதுவும் தேர்தல் நேரத்தில் கொடுத்து விட்டு, ஏதோ தி.மு.க., அறக்கட்டளை பணத்தை கொடுத்தது போல, தி.மு.க., பெருமை பேசுகிறதே...
தேர்தல் அறிக்கையில், என்ன வேண்டுமானாலும், 'அடித்து' விடலாம் என்று செயல்பட்டவருக்கு, அரசு கஜானாவைப் பார்த்ததும், 'ஷாக்!' ஆனாலும், வரும் தேர்தலிலும் வென்றாக வேண்டுமே... அதனால், 'மக்கள் வரிப்பணம் போகிறதே; கஜானாவை இன்னும் துடைக்கிறோமே...' என்ற கவலை ஏதும் இன்றி செயல்படுகிறார். ஆனால், இவர் மட்டுமல்ல; எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இனி இதே நிலை தான்!
வி.லோகாம்பாள், தாராபுரம், ஈரோடு: இலவச பேருந்து ஆய்வு, பள்ளிகளில் ஆய்வு, நடைபயிற்சியின் போது ஆய்வு என, செயல்படும் முதல்வர் ஸ்டாலின், மதுக்கடைகள் ஆய்வுக்கு செல்வதே இல்லையே...
இலவச பேருந்துகளிலும், பள்ளிகளிலும் நின்று, பேட்டி கொடுத்து, போட்டோவுக்கும், 'போஸ்' கொடுக்கலாம்... ' டாஸ்மாக்' வாசலில் நின்று, 'போஸ்' கொடுத்தால், சமூக வலைதளங்களிலும், மற்ற ஊடகங்களிலும் கிண்டல் செய்து, 'கலாய்த்து' விடுவரே... அதனால், முதல்வர், 'டாஸ்மாக்' பக்கம் தலை வைத்தே படுப்பதில்லை!
வி.டால்யா, அதிராம்பட்டினம்: 'என் வெற்றிக்கு பின்னால், என் மனைவி இருக்கிறார்...' என்று, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளாரே...
'வீட்டுல எலி, வெளியில புலி' என்ற சொலவடை தான் நினைவுக்கு வருகிறது! 'வீட்டில் பிரமாண்ட சாமி அறையில், மனைவியுடன் சாமி கும்பிட்டுவிட்டு, வெளியில் நாத்திகம் பேசுகிறாரோ...' என, பலர் சந்தேகம் கிளப்புகின்றனர்; அதற்கும், முதல்வர் ஸ்டாலின் பதில் சொன்னால் நல்லது!
ஆ.பட்டாணி துரை, கடலுார்: 'என் சொத்து விபரம் நினைவில் இல்லை...' என, தேர்தல் வழக்கு விசாரணை யில், முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க.,விலிருந்து வெளியேற்றப்பட்டவருமான, ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளாரே...
பன்னீர்செல்வத்தின் தோழி சசிகலா, அமலாக்கத் துறையின் எல்லா கேள்விகளுக்கும், 'தெரியாது, நினைவில்லை' என்று தானே பதில் அளித்தார். அதையே, பன்னீர்செல்வம் பின்பற்றுகிறாரோ எனத் தோன்றுகிறது. விசாரணைக்கு உட்படும் எந்த அரசியல்வாதிக்கும், 'தெரியாது' என்பது தான், தாரக மந்திரம்!
கஸ்துாரி, தென்காசி: வெள்ளியும், தங்கம் மாதிரி விலை ஏறுகிறதே...
ஆபரணங்களுக்காக மட்டும் வெள்ளி பயன்படுகிறது என்று நினைப்பது தவறு; தொலைபேசி, கணினி, சூரிய மின்சக்தி உபகரணங்களிலும், மருத்துவம், கண்ணாடி தயாரிப்பு, விமானங்கள் மற்றும் புகைப்படத் துறை என, பல துறைகளிலும் வெள்ளி பயன்பாடு உண்டு. எனவே தான், அதன் விலை உயர்கிறது!

