
எஸ்.அசோக், சென்னை: கம்யூ., கட்சியின் முதுபெரும் தலைவரான நல்லக்கண்ணு, தனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதை பார்த்தாவது மற்ற அரசியல்வாதிகள் திருந்துவரா?
நல்லக்கண்ணு போல வேறு எந்த அரசியல்வாதியையும் பார்க்க முடியாது. தனது, 80வது வயதுக்கு, கட்சி திரட்டிக் கொடுத்த, 1 கோடி ரூபாயைக் கூட, கட்சிக்கே திருப்பிக் கொடுத்தவர் அவர். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அந்த அரசியல்வாதிகள் அரசு செலவில், 5 ஸ்டார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவர். மருத்துவமனைகளும், தங்களுக்குச் சாதகமாக சில கோப்புகளில் அவர்களிடம் கையெழுத்து வாங்கிக் கொள்வர். இது தான் நடக்கிறது!
து.சேரன், ஆலங்குளம், தென்காசி: அமெரிக்க அதிபர் டிரம்ப், வெனிசுலா நாட்டு அதிபரை கைது செய்து, கை விலங்கிட்டு இழுத்து வந்தது, அதிகார மமதை தானே...
தென் அமெரிக்க நாடான வெனிசுலா, தங்கம் போன்ற கனிமங்கள், எண்ணெய் கிணறுகள் நிறைந்த, வளமான நாடு. அவற்றையெல்லாம் அபகரிக்கவே, டிரம்ப் செய்யும், 'அட்ராசிட்டி' இது. போதைப் பொருள் விற்றதாக காரணம் கூறி, வெனிசுலா அதிபரை கைது செய்துள்ளார். டிரம்ப் மட்டும் தமிழகத்தில் பிறந்திருந்தால், 'நான் தான் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன்' என, கதையளந்து, தனக்குத் தானே போஸ்டரும் ஒட்டிக் கொண்டிருப்பார்!
எம்.பி.தினேஷ், கோவை: திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற, உயர் நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகும், தமிழக அரசு மேல்முறையீடு செய்வது சரியா?
சரியே அல்ல. தி.மு.க., அரசு, சட்டங்களையும், தீர்ப்புகளையும், நீதிமன்றங்களையும் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். 'எல்லா துறைகளிலும், இந்தியாவிலேயே தமிழகம் தான் முன்னோடி; தனிக்காட்டு ராஜா...' என, கூறும் முதல்வர், 'சட்டத்தை, நீதிமன்றத்தை மதிக்காத தனிக்காட்டு ராஜா' என, பெயர் எடுத்து விடக்கூடாது!
எஸ்.டேனியல் ஜூலியட், கோவை: தி.மு.க., - எம்.பி., கனிமொழிக்கு, த.வெ.க., தலைவர் விஜய், பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறாரே...
இப்படி கட்சி பேதம் பார்க்காமல், ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக் கொள்வதைத் தான், அரசியல் நாகரிகம் என்பர். த.வெ.க., தலைவர் விஜய், அதை கடைபிடிக்கிறார். தி.மு.க., - எம்.பி., கனிமொழிக்கு, அந்த வாழ்த்து, சந்தோஷத்தை அளித்திருக்கும்!
உ.பார்த்திபன் ஜெயக்குமார், துாத்துக்குடி: 'அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், பொங்கல் பரிசாக, 5,000 ரூபாய் கொடுப்போம்...' என, கட்சியின் பொதுச் செயலர் பழனிசாமி கூறுகிறாரே...
தேர்தல் வாக்குறுதியாக, எதை வேண்டுமானாலும், 'அடித்து' விடலாமே! பதவி ஏற்ற பிறகு, 'கஜானா காலி' என, புலம்புவர். இப்படியே, நான்கு ஆண்டுகள் ஓடி விடும். தேர்தலுக்கு முந்தைய ஆண்டு, பொங்கல் பரிசு என கொடுத்துவிட்டு, மீண்டும் கஜானாவை காலி செய்து விடுவர். பல ஆண்டுகளாக தமிழகத்தில் இது தானே நடக்கிறது!
எஸ்.கவுரிலட்சுமி, ஸ்ரீரங்கம்: என்ன முடிவு என்றே தெரியாமல், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு ஊழியர் - ஆசிரியர் குழுவினர், ஸ்வீட் பாக்ஸுடன் முதல்வரை சந்திக்க சென்றது எப்படி?
அவர்கள் சாப்பிட்டது, 'ஸ்வீட் பாக்ஸ்'சில் இருந்தது, இனிப்பு மட்டும் தானா என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில், தமிழக அரசு அறிவித்த, 'டாப்ஸ்' என்ற ஆங்கில வார்த்தைக்கு, 'திருநெல்வேலி அல்வா பென்ஷன் ஸ்கீம்' என்று சமூக வலைதளங்களில் பலரும் கிண்டல் அடிக்கின்றனரே... கவனித்தீர்களா, கவுரி லட்சுமி!
* வீ.குமாரி, சென்னை: 'இந்தியாவிலேயே, பா.ஜ., காலுான்ற முடியாத மாநிலமாக தமிழகம் இருப்பதை சகித்துக் கொள்ள முடியாமல், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சுற்றுப்பயணம் செய்ய வைத்து, தி.மு.க., தலைமையிலான, 'இண்டி' கூட்டணி கட்சிகளை அச்சுறுத்தி வருகின்றனர்...' என்கிறாரே, காங்., மாநில தலைவர் செல்வப்பெருந்தகை...
செல்வப்பெருந்தகைக்கு ஏன் இவ்வளவு பயம்? அமித்ஷா, சென்னையில் தங்க வீடு பார்க்கிறாரே! அப்படியெனில், செல்வப்பெருந்தகை லண்டனில், 'செட்டில்' ஆகி விடுவாரோ!

