
மு.நாகூர், ராமநாதபுரம்: முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப் பட்டுள்ள, 'துருவ்' லகு ரக ஹெலிகாப்டர் சேவையை, மத்திய அரசு துவக்கி வைத்துள்ளதே...
நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய சாதனை இது! இதோடு, ராணுவ தளவாடங்களையும் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோமே! இந்த ஹெலிகாப்டர் சேவை, காங்கிரஸ் ஆளும் கர்நாடக மாநிலத்தில் இயக்கப்படுகிறது என்பது, கூடுதல் தகவல்!
* எஸ்.வைத்தியநாதன், மதுரை: 'பெற்றோரைக் கைவிடும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில், 15 சதவீதம் வரை பிடிக்கப்பட்டு, அந்தப் பணம் பெற்றோருக்கு வழங்கப்படும்...' என, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி எச்சரித்துள்ளாரே...
மிகச் சரியான முடிவு! இதை சட்டமாக இயற்றி, எல்லா அரசு ஊழியர்களிடமுமே பிடித்தம் செய்து, அவரவர் பெற்றோருக்கு மறுவாழ்வு ஏற்படுத்தலாம்; பெற்றோர் நிம்மதியாக வாழ்வர்; முதியோர் இல்லங்கள் குறையும். தனியார் நிறுவனங்களையும் உட்படுத்தி, நாடு முழுவதுமே, 'பிராவிடென்ட் பண்ட்' எப்படி பிடித்தம் செய்யப்படுகிறதோ, அதேபோல், 'பேரன்ட்ஸ் பண்ட்' என, சட்டம் இயற்றி விடலாம்! ரேவந்த் ரெட்டிக்கு சபாஷ்!
எஸ்.கதிரேசன், வேலுார்: 'தினமும் ஒரு மணி நேரமாவது, புத்தகங்களை வாசிக்க வேண்டும்...' என்று, தமிழக முதல்வர் ஸ்டாலின், வேண்டுகோள் விடுத்திருப்பது பற்றி?
ஆழ்ந்து சிந்தித்து மிகச் சரியாக சொல்லி இருக்கிறார். தினமும் வெகுநேரம் பயன்படுத்தி, கணினி, மொபைல் போனை, கண்ணுக்கு தீங்கை ஏற்படுத்திக் கொள்வதை நிறுத்தி, நாளிதழ்கள், புத்தகங்கள் மீது கவனத்தை திருப்பினால், மிகவும் நல்லது; பொது அறிவு வளரும்! இரவு நேரங்களில் நல்ல புத்தகங்கள் படித்தால், மன நிம்மதியுடன் நன்கு துாங்கலாம்!
எம்.பி.தினேஷ், கோவை: அமைச்சர் மூர்த்தி தொகுதியில், ஒரே வீட்டில், 211 ஓட்டுகள் என்பது, ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவது போல் உள்ளதே?
சிறப்பு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியில், தி.மு.க., ஆதரவு நபர்கள் நிறைய பேர் ஈடுபட்டிருந்தனர் என்பது எல்லாருக்குமே தெரிந்து விட்டதே... அத்துமீறல்களுக்கு பஞ்சம் இருக்குமா என்ன! தேர்தல் நேரத்தில், இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ, தெரியவில்லை!
நோபல் ஜோ ஹாரிஸ், புதுடில்லி: 'தெரு நாய்களை தத்தெடுப்பதற்கு பதிலாக, தெருக்களில் உள்ள அனாதை குழந்தைகளை ஏன் தத்தெடுக்கக் கூடாது...' என, உச்ச நீதிமன்றம், நாய் பிரியர்களை கேள்வி கேட்டுள்ளது பற்றி?
நல்லது தானே! நாய்களை எல்லாம், அவற்றுக்காக ஏற்படுத்தப்படும் காப்பகங்கள் பார்த்துக் கொள்ளட்டும் என விட்டுவிட்டு, காப்பகங்களில் உள்ள குழந்தைகளை தத்தெடுத்து நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுக்கலாம்; அனாதை இல்லங்களும் குறையும்!
கே.கே.வெங்கடேசன், செங்கல்பட்டு: சென்னையில், துாய்மைப் பணியாளர் பத்மா என்பவர், தெருவில் கிடந்த, 45 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகையை உரிமையாளரிடம் ஒப்படைத்த செயல் பற்றி...
பாராட்ட வேண்டும், பத்மாவை! துாய்மைப் பணியாளர்கள் ஒரே ஒரு வேளை வேலை செய்யாவிட்டால், நாமெல்லாம் நிம்மதியாக வாழ முடியுமா? முதல்வர், தனியார் நிறுவனம், போலீசார் பத்மாவை, அழைத்துப் பாராட்டி பரிசு வழங்கியது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது!
* வண்ணை கணேசன், கொளத்துார், சென்னை: 'ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது...' என, பா.ம.க., ராமதாஸ் கூறி உள்ளாரே?
வாரிசு படுத்தும் பாடு இது! மகனுடன் சண்டை ஏற்பட்ட பிறகு, மகள் ஸ்ரீகாந்தியை களமிறக்கி, அரசியலில் கரை காண, தி.மு.க., என்ற கொழு கொம்பைத் தேடி, அச்சாரம் போட்டிருக்கிறார்... கொழு கொம்பு, தாங்கிப் பிடிக்கிறதா, தள்ளி விடுகிறதா என்று பார்ப்போம்!

