sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்!

/

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : பிப் 22, 2026

Google News

PUBLISHED ON : பிப் 22, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரா.ராஜ்மோகன், திண்டிவனம்: மலேஷியாவில் தான் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., நடிப்பில் வெளிவந்த, 'நாளை நமதே...' என்ற பாடலை, கைதட்டி ரசித்திருக்கிறாரே, நம் பிரதமர் நரேந்திர மோடி...

எம்.ஜி.ஆரை வைத்து அரசியல் செய்தால் தான், தமிழ்நாட்டில் எடுபடும் என்பதை, பிரதமர் மோடி நன்கு புரிந்து வைத்திருக்கிறார்!

* எம்.பி.தினேஷ், கோவை: 'ஆட்சியில் பங்கு இல்லை; அது தமிழகத்தில் ஒத்து வராது...' என்று, உறுதியாக இருக்கிறாரே தி.மு.க., ஸ்டாலின்...

இவர் மட்டுமல்ல; காங்கிரஸ் கட்சியும், அது ஆளும் மாநிலங்களில் அதைத்தான் செய்கிறது. 'கூட்டணி தர்மம்' என்பதெல்லாம், சும்மா பேச்சுக்கே!

செ.காமட்சி, காங்கயம்: 'மறைந்தும் நம்மை, அண்ணாதுரை ஆண்டு கொண்டிருக்கிறார்...' என, பெருமிதத்துடன் கூறியுள்ளாரே முதல்வர் ஸ்டாலின்?

மறைந்த தலைவர்களான, அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பெயரைப் பயன்படுத்தவில்லை எனில், இக்கால அரசியல்வாதிகளுக்கு வரும் சட்டசபை தேர்தலில் ஓட்டு விழாதே!

தேன்ராஜா, நெய்வேலி: தேர்தல் கமிஷனால், த.வெ.க.,வுக்கு, 'விசில்' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து...

பொறுத்திருந்து பார்ப்போம், தேன்ராஜா... தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பே, கண்டக்டர்கள், காவலாளிகள் ஆகியோர், விசில் அடிக்க தடை விதித்து விட்டது அரசு! ஒரே தமாஷ் தான்!

கல்லிடை சிவா, நெல்லை: 'தமிழர்கள் குடும்பத்தோடு வெளிநாடுகளில் வசித்து வருவதே பெரிய சாதனை...' என, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருப்பதன் அர்த்தம் என்ன?

தமிழகத்தில் இனி எதிர்காலம் இல்லை எனச் சொல்ல வருகிறாரோ என்ற சந்தேகம் தானே உங்களுக்கு எழுகிறது, சிவா? எனக்கும் அதே சந்தேகம் தான்!

* ம.வேல்முருகன், புதுச்சேரி: 'அரசு ஊழியர்கள், முழுப் பணிக்காலத்தின் பாதியில், வேலையை ராஜினாமா செய்தால், ஓய்வூதியம் கிடையாது...' என, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது குறித்து...

நல்ல தீர்ப்பு. அரசு பணி கிடைப்பதே குதிரைக் கொம்பு. இவர்களுக்கான ஓய்வூதியமும் மக்களின் வரிப்பணம் தான். பணியிலிருந்து பாதியில் நிற்பவர்களுக்கு ஓய்வூதியம் வேண்டாம் என்ற தீர்ப்பு சரியே!

அ.சுகுமார், திருவண்ணாமலை: ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் காடு போல் வளரும் முள் மரங்கள், கள்ளிச் செடிகளை, தம் தொண்டர்களை களமிறக்கி அகற்றி, அரசியல் கட்சிகள், மக்களிடம் நல்ல பெயர் எடுக்கலாம் அல்லவா?

தாராளமாக செய்யலாம்! நாடு முழுதும் உள்ள இந்த பிரச்னைக்கு, அறிவியல் பூர்வமான அணுகுமுறையுடன் களமிறங்கினால், தொண்டர் படையென்ன... மக்களும் தாமாக உதவ முன்வந்து, அரசியல்வாதிகளை ஆராதிப்பர். 'இதோ செய்து விட்டேன் பாருங்கள்...' என, போட்டோவுக்கு, 'போஸ்' கொடுத்து, அதன்பின் வேலையே செய்யாமல் விடுவது நல்லதல்ல.

ஏ.மஜ்பா ஷாகுல், அதிராம்பட்டினம்: ஸ்கூல், கல்லுாரிகளுக்கு இப்போதெல்லாம் விளம்பரம் செய்யப்படுவது ஏன்?

பள்ளி மற்றும் கல்லுாரிகள் நடத்துவது, இப்போது வியாபாரமாகி விட்டது; அதில் நிறைய லாபமும் கிடைக்கிறது. கல்வி நிறுவனங்கள், வியாபார ரீதியாக மட்டும் சிந்திப்பதால், மாணவர்கள் பள்ளிகளுக்கு கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கொண்டு வருவதைக் கூட, அவர்கள் கவனிப்பதில்லை!






      Dinamalar
      Follow us