தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ அந்துமணி பதில்கள்!

 அந்துமணி பதில்கள்!

 அந்துமணி பதில்கள்!

2


PUBLISHED ON : ஆக 09, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 09, 2026

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* வி.தேவசகாயம், சென்னை: '21ம் நுாற்றாண்டை, இந்தியா வடிவமைக்கும்...' என, நியூசிலாந்து பிரதமர் சொல்வது பற்றி...

நம் நாட்டை, நல்ல முறையில் வழிநடத்துவதுடன், உலக நாடுகளையும் அதனதன் தேவை அறிந்து அரவணைக்கிறார், பிரதமர் மோடி. நம் நாலு கால் பாய்ச்சல் வளர்ச்சியைப் பார்த்து, மற்ற நாடுகள் வியக்கின்றன. தற்போது, காங்., ராகுலுக்கு, இந்த விஷயம் தான், வயிற்றிலும், காதிலும் புகையை வரவழைக்கிறது. புரிந்ததா, தேவசகாயம்!

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி: 'கைது செய்த மாணவர்களை விடுவிக்காவிட்டால், மீண்டும் போராட்டம் நடத்துவோம்...' என, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி எச்சரிக்கை விடுத்து இருப்பது பற்றி...

இந்தியா, மோடியின் தலைமையில் அமோகமாக வளர்வதை, அமெரிக்கா என்ன... நம் நாட்டின் காங்கிரஸ் கட்சியாலேயே பொறுக்க முடியவில்லை. இன்னும் சில வெளிநாடுகளின் ஆதரவோடு அரங்கேற்றப்படும் நாடகம் இது. போராட்டத்தில் பங்கேற்ற காங்.,கின், 'பப்பு' உட்பட யாருக்கும், 'நீட் என்ற சொல்லின் விரிவாக்கம் என்ன?' என்று கேட்டால் சொல்லக்கூட தெரியாது! மத்திய அமைச்சர் நட்டா, 'இவர்களுக்கும், நீட்டுக்கும் என்ன சம்பந்தம்? இவர்கள் குடும்பத்தில் யாராவது நீட் தேர்வு எழுதியுள்ளனரா என்று கேளுங்கள்...' என்று கேட்டிருக்கிறார்! பதிலே வராது!

* ஜி.விஜயகுமார், கோவை: தமிழகத்தில் முதன்முறையாக, நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த மாணவி மற்றும் பெரம்பலுார் மாவட்டம், ஆலத்துார் பகுதியைச் சேர்ந்த, கோகிலா போன்றவர்கள், 'நீட்' தேர்வில் தேர்வாகும் போது, அதை ஏன் எதிர்க்க வேண்டும்?

படித்து முன்னேற வேண்டும், பொதுமக்களுக்கு உன்னத சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் கொண்டுள்ள இளைய சமுதாயம், இத்தகைய நுழைவுத் தேர்வுகளுக்கு எதிர்ப்பே சொல்வதில்லை; ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். நாட்டைக் கெடுப்பதற்கே பிறந்திருக்கும் சில அரசியல்வாதிகள் செய்யும் அட்டகாசம் தான், 'நீட்' எதிர்ப்பு போராட்டம்!

எஸ்.கவுரிலஷ்மி, ஸ்ரீரங்கம்: வங்கி மேலாளரை அறைந்த, மு.க.அழகிரி மகள், கயல்விழியின் செய்கை பற்றி...

உச்சகட்ட அதிகார மமதையில் இருப்பதைக் காட்டும் செயல் இது. கயல்விழி, அரசியலில் சேர, இன்னும் பல ஆண்டுகளுக்கு, 'காஸ்ட்லி' அனுபவங்களை பெற்றால் தான் பண்படுவார் போலிருக்கிறது!

* த.பாலசுப்ரமணியன், கோவை: மாணவர்களின் புத்தக சுமையைக் குறைப்பதும், ஒவ்வொரு பள்ளியிலும் செய்தித்தாள் வாசிக்க நேரம் ஒதுக்குவதும், பள்ளிக் கல்வித் துறையில் நல்ல மாற்றம் தானே...

மிக நல்ல மாற்றம்! புத்தகத்தில் இருப்பதை மனப்பாடம் செய்து எழுதுவதை விட, சுயமாக சிந்தித்து, 'ஏன், எதற்கு, எப்படி?' என்று ஒரு சிறுவனோ, சிறுமியோ சிந்தித்து, அதற்கு விடை கொடுக்கும் விதமாய், பாடத் திட்டங்களை மாற்றியமைக்கும் முயற்சி மிக நல்லது. அதோடு கூட, மாணவர்களின் பொது அறிவு வளர, மொழித்திறன் வளர, செய்தித்தாள் வாசிப்பது, மிக மிக அவசியம்! மாற்றத்தை வரவேற்போம்!

* மூ.வள்ளி, வீரபாண்டி: 'முதல்வர் விஜயின் எலும்பை உடைப்பேன்...' என, பகிரங்கமாக மிரட்டல் விடுத்த, தி.மு.க., விளாத்திகுளம் எம்.எல்.ஏ., மார்க்கண்டேயனை, 'கம்பி' எண்ண வைத்து விட்டதே, த.வெ.க., அரசு...

ரவுடியிசத்தை ஒடுக்கினால் தானே, நாம் நிம்மதியாக வாழ முடியும்!

த.நேரு, கடலுார்: 'இந்தியாவில், 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்...' என, மத்திய அரசுக்கு, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளாரே...

அதைவிட, சமூக ஊடகங்களில் வெளியாகும், 'காமாசோமா' விஷயங்களின் வேரைப் பிடுங்குவது நல்லது!

எஸ்.யோகா, கோபி, ஈரோடு: 'ஆட்சி அமைத்து மூன்று மாதங்களில், 20,881 கோடி ரூபாய் கடன் வாங்கியது தான், த.வெ.க., அரசின் மாற்றமா?' என, தி.மு.க., முன்னாள் அமைச்சர், கீதா ஜீவன் விமர்சித்துள்ளாரே...

தமிழகத்தின் தற்போதைய நிதிநிலைமையை, வேறு எப்படி சமாளிப்பது? 'டாஸ்மாக்'கில் நடந்த, 'கோல்மால்'களை ஒடுக்கியதால், வருமானம் சொற்பமாக அதிகரித்துள்ளது. போக்குவரத்து உட்பட மற்ற அனைத்து துறை ஓட்டைகளையும் அடைக்கும் முயற்சிக்கு இடையே, தினசரி நிர்வாகத்திற்கு பணம் வேண்டாமா? போற்றுவார் போற்றலையும், துாற்றுவார் துாற்றலையும் புறந்தள்ளி, ஆட்சி நடத்துவார், விஜய் என்று நம்புவோம்!

* எஸ்.கதிரேசன், வேலுார்: தேர்தல் அரசியலில் இருந்து, கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா விலகியது ஏற்புடையதா?

அரசியலுக்கு, துடிப்பான, நேர்மையுடன் செயலாற்றக் கூடிய இளைஞர்கள் தேவை. குறிப்பாக, கர்நாடகாவுக்கு மிக மிக அவசியம். மிகவும் செழிப்பாக, வளமாக இருந்த கர்நாடகா, 30 ஆண்டுகளாக சீரழிந்து போனதற்கு காரணம் என்னவென்று, அம்மாநில அரசியல்வாதிகளுக்கு மிக நன்றாக தெரியும்!

ஏ.எஸ்.யோகானந்தம், ஈரோடு: 'மாணவர்களை ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தயார்படுத்த வேண்டியுள்ளதால், தினமும் விளையாட்டு வகுப்பு இருக்கும்படி, முதல்வர் விஜயிடம் சொல்லி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் ஏற்பாடு செய்ய வேண்டும்...' என, விளையாட்டுத் துறை அமைச்சர், ஆதவ் அர்ஜுனா வேண்டுகோள் விடுத்துள்ளாரே... அவரே, நேரடியாக விஜயிடம் கேட்கலாமே...

சக மனித தொடர்பு மற்றும் நிர்வாக நடைமுறையின், சரியான அணுகுமுறையை, ஆதவ் அர்ஜுனா பின்பற்றுகிறார். நண்பரின் நண்பரிடம் உதவி கேட்பதற்கு, நண்பன் வாயிலாகவே கேட்டால், தனக்கு மரியாதை தருவதாக நண்பர் மகிழ்ச்சி அடைவார் அல்லவா! அதே, 'சைக்காலஜி' தான் இதுவும்; பலன் பெரிதாக இருக்கும்!

அ.செல்வகுமார், சென்னை: ராஜஸ்தான் மாநிலத்தில், 242 கோடி ரூபாய் செலவில், செயற்கை ஏரி உருவாக்கப்பட்டு, பாலைவனத்தில் வசிக்கும், 50 லட்சம் மக்களுக்கு குடிநீர் பஞ்சம் தீர்க்கப்பட்டுள்ளது பற்றி...

பிரமிக்க வைக்கும் திட்டம். நம்மூரில் இருக்கும் ஏரி, குளம், கால்வாய்களே துார்வாரப்படாமல், ஆண்டுதோறும் மழைநீரை வீணடிக்கிறோம்!

பா.ஜெயபிரகாஷ், தேனி: உலகில், மக்கள் வாழ சிறந்த நகரங்கள் பட்டியலில், டென்மார்க் தலைநகர், 'கோபன்ஹேகன்' முதலிடம் பெற்றுள்ளதே... சென்னை எப்போது?

'சிங்காரச் சென்னை, கூவம் மணக்கிறது, சென்னையை சிங்கப்பூராக மாற்றுவோம்...' என, பல சூளுரைகளைப் பார்த்து விட்டது சென்னை; எதுவுமே செயல்பாட்டுக்கு வரவில்லை... அப்புறம் எப்படி சென்னை, வாழ சிறந்த நகரமாகும்!

கே.ஜே.செல்வராஜ், கோத்தகிரி: மட்காத குப்பையில் இருந்து, தார் தயாரிக்க, நகராட்சி நிர்வாகத்திற்கு முதல்வர், விஜய் உத்தரவிட்டுள்ளாரே...

குப்பை பிரச்னையால், தமிழகமே தவிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. மட்காத குப்பையால், கால்நடை உயிரினங்கள் முதல் அனைத்தும் பாதிப்படைகின்றன. முதல்வர் விஜய் சொல்வது போல், தார் தயாரித்து பயன்படுத்தினால், பல சாலைகள் சீராகும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us