PUBLISHED ON : ஆக 16, 2026

* லலிதா தங்கவேலு, ஈரோடு: தமிழக அரசின் முதல் பட்ஜெட்டின் நிறைகுறைகள் என்னென்ன?
முந்தைய ஆட்சி விட்டுச் சென்ற ஓட்டைகளை சரி செய்யவே, நேரம் எடுக்குமே! 'இரண்டு ஆண்டுகள் ஆகும், நிமிர்ந்து நிற்க...' என்று, நிதியமைச்சரும் கூறி இருக்கிறார். அவகாசம் கொடுத்து பார்ப்போமே!
* ப.சோமசுந்தரம், சென்னை: அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம், பதவி உயர்வுக்கு இனி, முதல்வர் அனுமதி தேவை என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது தானே...
அனைத்து அடிப்படை கடமைகளே, காசு வைத்தால் தான் நடக்கும் என்ற நிலைக்கு, அரசு இயந்திரம் பழுதாகிப் போனதால், முதல்வர் விஜய், அதிரடியில் இறங்கி இருக்கிறார். நல்லது மட்டுமே நடக்கும் என, எதிர்பார்ப்போம்!
ரா.மங்கையர்க்கரசி, மதுரை: 'சாலைகளில், கட்டுமானப் பொருட்கள் கொட்டினால் அபராதம்; சாலைகளில், கண்ட இடத்தில் வாகனங்கள் நிறுத்தினால் அபராதம்...' என, மே.வங்க நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர், அக்னி மித்ரா பால் அறிவித்திருக்கிறார். இதுபோன்று தமிழ்நாட்டிலும் முதல்வர் விஜய் செய்தால், மக்களுக்கு நன்மை உண்டு. செய்வாரா?
இப்பகுதியில் வெளியாகும் கேள்வி-பதில்களை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் படிப்பர்; அதை, முதல்வரிடமும் கொண்டு செல்வர். முதல்வர் விஜயும், என் வாசகர் தான். விடிவு வரும் என, எதிர்பார்க்கலாம், மங்கையர்க்கரசி!
ஆர்.எம்.சுந்தரம், செங்கல்பட்டு: தி.மு.க., உதயநிதியின் சச்சரவு பேச்சை, குஷ்பு, தமிழிசை, வானதி சீனிவாசன் போன்ற பெண் அரசியல்வாதிகள் எதிர்க்கின்றனர்; பிரேமலதா மட்டும் நழுவுகிறாரே... கூட்டணி தடுக்கிறதா?
எல்லாம், 'பெட்டி'யின் மகிமை!
கே.ஆர்.அசோகன், ஈரோடு: 'போராட்டம் வேண்டாம் ப்ளீஸ்... தமிழக மக்களுக்கு தண்ணீர் திறப்போம்...' என, கர்நாடக மக்களிடம் அம்மாநில முதல்வர் சிவகுமார் கெஞ்சியது எதைக் காட்டுகிறது?
கர்நாடகாவில், பருவ மழை பெய்து, அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ள நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்காமல் போனால், பெங்களூரு நகரமே மூழ்கி விடுமே என்ற, 'நல்லெண்ணம்' தான்!
பா.முருகன், கரிசல்புலி: 'நான் ஏற்கனவே சிறையில் இருந்தவன்...' என்று, தி.மு.க.,வின் செந்தில் பாலாஜி, 'அசால்ட்'டாக பேசுகிறாரே...
ஆமாமாம்! நாட்டு நலனுக்காக உழைத்த எவ்வளவு பெரிய, 'தியாகச் செம்மல்' பாருங்கள்... 'சிறையில் செக்கிழுத்து, கல்லுடைத்து, மண் அள்ளி மிகவும் சிரமப்பட்டிருக்கிறார், என, நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்று, 'அடித்து' விடுகிறார்!
கி.பாலமுருகன், ராமநாதபுரம்: 'அரசின் சத்துணவு திட்டத்தில், கோவில்பட்டி கடலை மிட்டாயை சேர்க்க வேண்டும்...' என, உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனரே...
சத்துணவில் மட்டுமல்ல... 'வந்தே பாரத்' போன்ற ரயில்களில் வழங்கப்படும் உணவிலும், கோவில்பட்டி கடலை மிட்டாய் வைக்க வேண்டும் என, உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பள்ளிகளில், மதிய உணவில், சிக்கன் கொடுத்து, வம்பை விலைக்கு வாங்குவதை தவிர்த்து, இந்த கடலை மிட்டாயை மாணவர்களுக்கு கொடுக்க செய்யலாம், முதல்வர்!
