PUBLISHED ON : செப் 06, 2026

வீ.குமாரி, சென்னை: 'முதல்வர் ஆகும் தகுதியுள்ளவர் சரத்குமார்...' என்று, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் புகழ்ந்துள்ளாரே... அது சாத்தியமா?
எந்த படத்தில் எனக் கூறாமல் விட்டு விட்டாரே!
கே.ஜெயலட்சுமி, சென்னை: 'ஓட்டு போட்டாச்சு என, மக்கள் ஒதுங்கி விடக்கூடாது. சேர்ந்து கடமை செய்வோம்...' என, கூறியுள்ளாரே, முதல்வர் விஜய்...
லஞ்சம் கொடுக்காமல் இருப்பதே, லஞ்ச ஒழிப்புக்கான முதல்படி. அதை மக்களும் பொறுப்புடன் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே இதன் பொருள். முதல்வருக்கு, மக்கள் ஒத்துழைப்பு தந்தால், லஞ்சத்தை அறவே ஒழிப்பது சாத்தியமே!
கே.குமரேசன், விழுப்புரம்: த.வெ.க.,வுக்கு, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார், கொலை மிரட்டல் விடுத்ததாக செய்தி வெளியாகி உள்ளதே...
தன்னை, அதிதீவிர பயங்கரவாதி போல நினைத்து, இப்படிப் பேசியிருக்கிறார், உதயகுமார். 'நானும் ரவுடி தான்' என்ற, நடிகர் வடிவேலுவின் காமெடி தான், நினைவுக்கு வருகிறது!
* பா.அனுமந்த்ரா, சென்னை: எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த போதே, சட்டசபையை தங்களது பேச்சால், கிடுகிடுக்க வைத்த, ரகுமான்கான், சுப்பு போன்றவர்களைப் பெற்றிருந்த தி.மு.க.,வால், இன்று, சட்டசபை குறித்து முன்பின் அறியாத, த.வெ.க., எம்.எல்.ஏ.,களை சமாளிக்க முடியவில்லையே...
அனல் தெறிக்கப் பேசும் தலைவர்களைப் பெற்றிருந்த தி.மு.க.,வில் தற்போது, துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுப்பதைக் கூட சரியாகப் படிக்க தெரியாதவர்களே நிரம்பியுள்ளனர். பிரச்னை என்னவென்று இப்போது புரிகிறதா, அனுமந்த்ரா?
* ப.சோமசுந்தரம், சென்னை: 'தமிழக அரசியலில், ஒழுக்கம் நிறைந்த இளைஞர்களைக் கொண்ட ஒரே கட்சி, வி.சி.க., தான்...' என்கிறாரே, திருமாவளவன்?
ஆமாமாம்... அதனால் தான் அவர் நடத்தும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், ஆயிரக்கணக்கானோர் மேடையேறி, அவரைப் பேச விடாமல் இடைஞ்சல் கொடுக்கின்றனர்!
ஆர்.வித்யா, சென்னை: ஓணம் பண்டிகையை தமிழ்நாட்டிலும் சிறப்பாக கொண்டாட என்ன காரணம்?
மலையாளிகள், கடும் உழைப்பாளிகள்; உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் அவர்களும், அவர்களது சாயா கடையும் இருக்கும் என்பதை குறிப்பிடுவதற்காகவே, நிலவில் மனிதன் கால் பதித்த போது, அங்கு, விண்வெளி வீரரைப் பார்த்து, 'சாயா வேணுமா சாரே...' என்று ஒரு மலையாளி கேட்டதாக பரவலாக பேசப்படுவதுண்டு. அதன்படி, தமிழ்நாட்டிலும் அவர்கள் பரந்து விரிந்து இருப்பதால், இங்கும் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுகிறோம்.
வி.பிரபாகரன், கோவை: 'இனிமேல், 70 வயதிற்கு மேல் பதவியில்லை...' என, தி.மு.க.,வில் அறிவிப்பு வந்திருக்கிறதே...
அது சரி... ஆனால், அக்கட்சியின் தலைவர் உட்பட பலரும், 70 வயதை கடந்தவர்கள். அத்தகையோருக்கு மட்டும், கவனமாக, 'பாதுகாப்பு வளையம்' கொடுக்கப்பட்டுள்ளதைக் கவனித்தீர்களா, பிரபாகரன்!
கி.பாலமுருகன், ராமநாதபுரம்: வெளி மாநிலங்களுக்கு விளையாடச் செல்லும் வீரர்களுக்கு, விமான பயணம் ஏற்பாடு செய்யப் போவதாக, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர், ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளாரே...
விளையாட்டு வீரர்களுக்கு, 'பம்பர் பரிசு' கொடுத்துள்ளார், ஆதவ் அர்ஜுனா. விளையாட்டு வீரர்கள் இதை நல்ல முறையில் பயன்படுத்தி, பல வெற்றிகள் பெற வாழ்த்துவோம்!
