PUBLISHED ON : செப் 13, 2026

பா.ஜெயலட்சுமி, விருதுநகர்: முதல்வர் விஜய்க்கு எதிர் இருக்கையில், ரஜினிகாந்த் எதிர்க்கட்சி தலைவராகவும், கமல் சபாநாயகராகவும் இருந்தால் நல்லது என, சிலர் கனவு காண்கின்றனர். எனக்கும் அப்படி பார்க்க ஆசை தான். நடக்குமா அந்துமணியாரே...
அவர்கள் இருவரும் ஒன்றாக நடிக்கப்போகும் அடுத்த, திரைப்படத்தில் நடைபெறும் என நம்புவோம்!
* பி.மரகதவள்ளி, சென்னை: 'பரந்துாரில் விமான நிலையம் வேண்டாம்; வேறு இடத்தில் கொண்டு வரப்படும்...' என்கிறார், முதல்வர் விஜய். இதற்கு, தி.மு.க.வினர் ஏன் அலறுகின்றனர்?
பரந்துாரில் விமான நிலையம் அமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில், தி.மு.க.வில் பலர், அப்பகுதியில் செய்துள்ள முதலீடுகளுக்கும், சென்னையிலிருந்து துவங்கி பரந்துார் வரை கட்ட திட்டமிருந்த பல அடுக்குமாடி குடியிருப்பு நிறுவனங்களில், பெரிய அளவில் முதலீடு செய்திருப்பதாலும் ஏற்பட்டுள்ள கிலி தான் காரணம்!
மு.நாகூர், ராமநாதபுரம்: மத்திய அரசு, 10 மற்றும் 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகள், தலா, 100 கோடிக்கு அச்சடிக்க ஒப்புதல் கொடுத்துள்ளதே...
மிக நல்ல விஷயம். அதிகமாக புழக்கத்தில் உள்ள நோட்டுகள் இவை. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், விலைவாசியை கட்டுக்குள் வைக்கவும், காகித தயாரிப்புக்கான செலவை கட்டுப்படுத்தவும், இந்த நடவடிக்கை அவசியம்!
பா.முருகு, ராமநாதபுரம்: அமெரிக்காவுக்கு படிக்க செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதே...
அமெரிக்காவுக்கு படிக்கச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை, உலகம் முழுவதும் குறைந்துள்ளது. அமெரிக்க அரசு விதிக்கும் கட்டணங்கள் மிக அதிகமாக இருப்பதும், அவர்களின் சட்டங்களுமே அதற்கு காரணம்!
எம்.கலைச்செல்வி, மதுரை: 'நம்பர் பிளேட்' இல்லாத, இருசக்கர வாகனத்தில், 'ஹெல்மெட்' அணியாமல், சட்டசபைக்கு வந்த புதுச்சேரி ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., வையாபுரி மணிகண்டனுக்கு, 1,500 ரூபாய் அபராதம் விதித்தது சரிதானா?
எம்.எல்.ஏ., என்ன, வானிலிருந்து குதித்த கந்தர்வனா... அபராதம் விதிக்காமல் இருக்க? அபராதம் விதித்தது சரிதான்!
அ.ரவீந்திரன், கன்னியாகுமரி: 'கொளத்துார் தொகுதியில், என் வெற்றி மறைக்கப்பட்டது, தடுக்கப்பட்டது' என, மு.க.ஸ்டாலின் குமுறுவது பற்றி...
தோல்வியை தைரியமாக எதிர்கொள்ளவும், வெற்றி பெற்றவரை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொள்ளவும் தேவையான, முதிர்ச்சியான பக்குவத்தை அனைத்து அரசியல்வாதிகளும் கற்க வேண்டும்!
* பி.மணியட்டிமூர்த்தி, கோவை: தி.மு.க., ஆட்சியில், மகளிர் திட்ட நிதியில், 600 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக தணிக்கைக் குழு விசாரணையில் தெரியவந்துள்ளதே...
எந்தெந்த திட்டங்களில் முறைகேடுகள் நடக்கவில்லை என்பதை, விரல் விட்டு எண்ணி விடலாம் போலிருக்கிறதே!
எம்.வெண்ணிலா, திண்டுக்கல்: 'பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளை, வீட்டை விட்டு வெளியேற்றலாம்...' என்ற, உ.பி., அரசின் திட்டத்தை, தமிழக அரசும் பின்பற்றினால் என்ன?
நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டிய நல்ல திட்டம் இது!
