PUBLISHED ON : செப் 27, 2026

ஏ.வசந்தகுமாரி, மதுரை: 'முதல்வர் விஜய் இலவசமாக கொடுக்கப் போகும், 'காஸ்' சிலிண்டரிலும், 'இது விற்பனைக்கு அல்ல' என்ற, 'சீல்' இருந்தால் நல்லது; இல்லையெனில், அதையும் விற்று விடுவர்' என்ற என் யோசனை சரியா?
மிகச் சரியான யோசனை! கை கொடுங்கள், வசந்தகுமாரி... 'ஹாட்ஸ் - ஆப்' உங்களுக்கு!
க.புலியன், ராமநாதபுரம்: ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும், துணை முதல்வர் பவன் கல்யாணுக்கும் அதிகாரப் போட்டி துவங்கி விட்டதே...
வாரிசு அரசியல் படுத்தும்பாடுதான் இது. சந்திரபாபு நாயுடுவும் அதற்கு ஆளாகி விட்டார்!
மு.நாகூர், ராமநாதபுரம்: 'அரசு மருத்துவமனைகளில், 'பிளாஸ்டிக்' பைகளில் உணவு கொண்டு வர தடை விதிக்கப்படும்...' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், அருண்ராஜ் கூறியுள்ளாரே...
நோயாளிகளுக்கு, மருத்துவமனையே உணவு வழங்கி விடுகிறது. நோயாளிகளின் உடன் இருப்பவர்கள், 'பிளாஸ்டிக்' பை மற்றும் டப்பாக்களில் உணவு வாங்கி வந்து சாப்பிட்டு, ஆங்காங்கே போட்டு விடுவதால், சுகாதார கேடு, எலி மற்றும் பெருச்சாளி தொல்லையும் அதிகமாகிறது. 'பிளாஸ்டிக்'கை கட்டாயம் தவிர்க்க வேண்டும் .
ர.ரேவதி, புதுச்சேரி: 'தேசிய அளவில் வளர்ந்த, வி.சி., கட்சியைப் பார்த்து, சிலருக்கு பொறாமை...' என்கிறாரே, அதன் தலைவர் திருமாவளவன்...
தேசிய அளவில் வளர்ந்த கட்சியா! முதலில் தமிழக சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டு, ஒரு எம்.எல்.ஏ., சீட்டோ, உள்ளாட்சி தேர்தல்களில் வெற்றி பெற்று, ஏதாவது ஒரு தலைவர் பதவியோ வாங்கிக் காட்டட்டும்... அதன்பிறகே, இப்படி ஒரு கட்சி தமிழகத்தில் இருக்கிறது என்பது, மற்ற மாநிலங்களுக்கு புரிபடும்! யதார்த்தமே புரியாமல், மாய உலகில் இருந்தால், இப்படியெல்லாம் தான் பேசத் தோன்றும்!
* என். இளங்கோவன், மயிலாடுதுறை: 'கர்நாடக கழிவு நீர், காவிரி ஆற்றில் கலந்து, தமிழகத்திற்கு செல்கிறது...' என, கர்நாடக அமைச்சர் கூறியிருக்கிறாரே...
கர்நாடக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தான் இப்படி கூறியுள்ளார். நம் அரசு, எந்த பிரச்னையையும், கோட்டை விடாமல் சரி செய்வது, மிகவும் அவசியம். முதல்வர் விஜய் இன்னும் சுறுசுறுப்பாக, சாதுரியமாக செயல்பட வேண்டும்; தி.மு.க.,வை எதிர்ப்பது மட்டும் போதாது!
* எம்.சுப்பையா, கோவை: எம்.டெக்., படித்து, போலந்து நாட்டில், மாதம் 3 லட்சம் ரூபாய் சம்பளத்தில் பணியாற்றி வந்த, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், விஜயன், வேலையை விட்டுவிட்டு, தற்போது, இயற்கை விவசாயத்தில் அசத்தி வருகிறாரே...
இயற்கை விவசாயம், இளைய சமுதாயத்தினருக்கு, மிகவும் இன்றியமையாதது. சத்து குறைபாடு, புற்றுநோய் ஆகியவை வராமல் இருக்க, இயற்கை விவசாயம் அவசியம் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறார், விஜயன். நம் மாநிலத்திற்கு பல, விஜயன்கள் தேவை, சுப்பையா!
கி.பாலமுருகன், கரிசல்புலி: பணம் இரட்டிப்பாகும் என்பதை நம்பி, சிறுகச் சிறுக தாங்கள் சேர்க்கும் பணத்தை, மக்கள் இழந்து ஏமாறுகின்றனரே...
குறுக்கு வழியில் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி செய்கின்றனர். குறு வீடியோக்களான, 'ரீல்ஸ்' பார்த்து நேரத்தை செலவிடுவதை விட, நாளிதழ்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் இதுபோன்ற ஏமாற்றம் இருக்காது!
