PUBLISHED ON : அக் 25, 2026

வி.விநாயகம், சென்னை: அமெரிக்காவில், இன்ஜினியர்களை விட, எலக்ட்ரீஷியன்களுக்கு, மாதச் சம்பளம், 22 லட்சம் ரூபாயாமே...
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், தொழிலில் கெட்டிக்காரர்களா என்பது மட்டுமே சோதிக்கப்படுகிறதே தவிர, காகிதங்களில் அச்சடிக்கப்படும் பட்டங்கள் அல்ல. அதனால், கையில் வேலை இருந்தால், பையில் பணம்!
* பி.ஜி.பி.இசக்கி, தென்காசி: ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு, அரசியல் ஆசை வருவதன் காரணம் என்ன?
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக இருப்பது, அரசியல்வாதிகளின் கட்டளைக்கேற்ப ஆட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளி விடுகிறது! 'இப்படி இருப்பதை விட, நம் கையில் அதிகாரம் இருந்தால்...' என்ற ஆசையில், அரசியல் களத்தில் இறங்குகின்றனர்!
க.அருச்சுனன், செங்கல்பட்டு: ஐரோப்பிய நாடுகளில், பொது மருத்துவரிடம், 'அப்பாயின்மென்ட்' வாங்க, 5 நாட்கள்; சிறப்பு மருத்துவரிடம் வாங்க, 11 நாட்கள் ஆகிறது. ஆனால், இந்தியாவிலோ, வீடு தேடி மருத்துவம்! என்ன காரணம்?
டாக்டர்கள் பற்றாக்குறை, அதிக நோயாளிகள், 'இன்சூரன்ஸ்' நடைமுறைகளுக்காக டாக்டர்கள் செலவிட வேண்டிய நேரம் அதிகம் என, பல காரணங்களை சொல்கின்றனர், வளர்ந்த நாடுகளைச் சேர்ந்த, டாக்டர்கள். நம்மூர் நிலைமை தான், உங்களுக்குத் தெரியுமே! நடிகர் ராமராஜன், 'சொர்க்கமே என்றாலும், அது நம்மூரைப் போல வருமா!' என்று பாடி இருக்கிறாரே!
எஸ்.ராமானுஜன், பெங்களூரு: கர்நாடகாவில், ஹுப்பள்ளி தாலுகா அலுவலகத்தில், சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த, தாசில்தார் உட்பட 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள், அவர்களின் அன்றாட பணிகள் தேங்கிப் போனதால், செப்., 27ம் தேதி, ஞாயிறு அன்றும் பணி செய்திருக்கின்றனரே...
காங்., ஆட்சி செய்யும் கர்நாடகாவில், இப்படி அரசு ஊழியர்கள் பணி செய்திருப்பது, மிகவும் ஆச்சரியமான விஷயம். சபாஷ் போடுவோம் அந்த ஊழியர்களுக்கு!
வீரகுமார், சென்னை: 'லஞ்சம் இல்லாத தமிழகம் உருவாக, 'ரியல் எஸ்டேட்' துறையினரின் பங்களிப்பு மிகவும் அவசியம்...' என, த.வெ.க.,வைச் சேர்ந்த தமிழக அமைச்சர், ஷாஜகான் கூறியிருக்கிறாரே...
'ரியல் எஸ்டேட்' துறையினர் இதற்கு என்ன பதில் கூறப்போகின்றனர் என்று அறிய, நானும் ஆவலாக இருக்கிறேன், வீரகுமார்!
ஏ.ருக்குமணி, கோவை: கடந்த, 2014ல், ஐந்து நகரங்களில் மட்டுமே இருந்த மெட்ரோ ரயில் சேவை, இன்று, 25 நகரங்களுக்கு விரிவடைந்திருப்பது, பா.ஜ., மற்றும் பிரதமர் மோடியின் சாதனை தானே...
ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டிய சாதனை, ருக்குமணி!
* பி.மரகதவள்ளி, செங்கல்பட்டு: 'எல்லா மருத்துவமனைகளிலும், சிகிச்சைக்கான கட்டண விவரங்களை, ஆங்கிலத்திலும், தாய் மொழியிலும் எழுதி வைக்க வேண்டும்...' என்று, மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளதே... இது நல்லது தானே...
மிகவும் நல்லது. அத்துடன், மருந்துகளின் விலையையும் பட்டியலிடச் சொல்லலாம்!
