தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : நவ 22, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 22, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆர்.ஹரிகோபி, புதுடில்லி: ஏழ்மையில் உழலும் சாதாரணர்கள், தங்கள் பார்வையில் படும் பணத்தையோ, பொருளையோ அபகரிக்க எண்ணாமல், அதை உரியவர்களிடம் சேர்க்க விழையும் போது, அதிகாரத்தில் உள்ளவர்கள், அரசு கருவூலத்தையே காலி செய்து, 'ஆட்டை' போடும் மனப்பான்மையோடு இருப்பது ஏன்?

ஏழைகள், இரவு படுத்தால், நிம்மதியாகத் துாங்குவர்; ஊழலில் திளைக்கும் எந்த நபரையாவது, 'நிம்மதியாகத் துாங்குகிறீர்களா?' என்று கேட்டுப் பாருங்கள்... பதிலே வராது! நிம்மதி முக்கியமா, பணம் முக்கியமா?

எஸ்.அஸ்வினி, சென்னை: ' குடிப்பழக்கம் தொடர்ந்தால், அடுத்த, 30 ஆண்டுகளில், தமிழ் சமூகமே அழிந்து விடும்...' என்று, தமிழக பொது சுகாதாரத் துறை ஓய்வு பெற்ற இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி கூறியுள்ளாரே...

அவர் கூறியுள்ளதை நினைத்தால், குலை நடுங்குகிறது என்றாலும், அதிக வருமானம் ஈட்டித் தரும், 'டாஸ்மாக்' வியாபாரத்தை, அரசு கைவிடுமா என்ற சந்தேகமும் எழுகிறது, அஸ்வினி! அந்த வியாபாரத்தை கைவிட்டு, கள்ளச்சாராய புழக்கமும் இல்லாமல் பார்த்துக் கொண்டு, வேறு நல்ல வழிகளில் வருமானத்தைப் பெருக்கினால், விஜய் அரசை பாராட்டலாம்!

* எம்.மகாலிங்கம், திருப்பூர்: புற்றுநோய் மருந்துகளின் விலையை பெருமளவு குறைத்திருக்கும் மத்திய அரசின் செயல்பாடு பாராட்டுக்குரியது தானே...

நிச்சயமாக... அதேபோல், மற்ற நோய்களுக்கான மருந்துகளின் விலையையும் குறைக்க ஆவன செய்தால், மக்கள் பயனடைவர்!

* எம்.சுப்பையா, கோவை: த.வெ.க., - எம்.எல்.ஏ., முஸ்தபாவிடம், 30 கோடி ரூபாய் குதிரை பேரம் நடத்திய புகாரில், மதுரை முன்னாள் துணைமேயர், மன்னன், கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ளாரே...

முன்பு, தி.மு.க.,வில் அழகிரியின் வலது கையாக செயல்பட்டவர் தான் இந்த, மன்னன். மதுரையில் இவரது செயல்பாடுகளால், மிகவும் 'பெயர்' பெற்றவராக விளங்கினார். சில பல மனக் கசப்புகளால், அழகிரியிடமிருந்து பிரிந்து, சமீபத்தில், அ.தி.மு.க.,வில் இணைந்ததாக கேள்விப்பட்டேன். 'முப்பது கோடி ரூபாய் பேரம், வழக்கு, கைது' போன்ற சமாசாரமெல்லாம் இவருக்கு துாசி என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள். முதல்வர் விஜய், இவரை எப்படி கையாளப் போகிறார் என்று பார்ப்போம்!

என்.ஹேமலதா, ராமநாதபுரம்: அரசியல் செய்திகள் இல்லாவிட்டால், பத்திரிகைகளை நடத்தவே முடியாதா?

நம்மை ஆளும், ஆள நினைக்கும் அரசியல்வாதிகள் குறித்து அறிந்து வைத்திருப்பது நல்லது! நீங்கள் ஓட்டுப் போடும் உரிமையைப் பெற்றவர் அல்லவா... முன்பின் அறியாத ஒருவருக்கு, ஓட்டு போடு வீர்களா? உங்கள் தொகுதியில் போட்டியிடும் அனைவரை பற்றியும், ஒரே நாளில் அறிந்து கொள்ள முடியுமா உங்களால்? 'தினமலர்' பத்திரிகையின் நோக்கமே, மக்களுக்குத் தேவையான தகவல்களைத் தருவது தான்! தினமும் தொடர்ந்து, 'தினமலர்' நாளிதழ் படியுங்கள்; அடுத்த தேர்தலில், உங்கள் தொகுதியில், மிகச் சரியான நபருக்கு ஓட்டு போட வசதியாக இருக்கும்!



த.நேரு, கடலுார்: அரசு ஊழியர்களில், தவறு செய்பவர்களை, 'சஸ்பெண்ட்' செய்யாமல், நிரந்தர பணிநீக்கம் செய்தால், மற்றவர்கள் தவறு செய்ய பயப்படுவர் அல்லவா?

சரியாக சொல்கிறீர்கள். அரசு நிர்வாகத்தில் உள்ள, 'சிவப்பு நாடா' சட்டங்கள் பலவும், தற்காலத்திற்கு ஏற்றார்போல் மாற்றியமைக்கப்பட வேண்டியவை; அவற்றில் இதுவும் ஒன்று!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us