PUBLISHED ON : செப் 28, 2025

'காசை திருப்பிக் கொடு இல்லேன்னா... 'செகண்ட் ஹீரோ'வா நடிச்சிக் கழிச்சிடுறாயா...' என, கேட்டனர், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தினர்.
'கொஞ்ச நாள் தயவு செய்து பொறுத்துக்குங்க. உங்க காசை எப்படியாவது கொடுத்துடறேன்...' என, பணிவாக வேண்டிக் கொண்டேன். ஆனால், கொடுக்க முடியலை.
என்னை நம்பி, 10 பேர் இருந்தாங்க. வெளியில நாலு கம்பெனில வாய்ப்பு கேட்டு ஏறி இறங்கலாம்ன்னா, பைக் வீல் டயர் கிழிஞ்சு கிடந்தது. புது டயர் போடக் காசில்ல. இது, என்னடா சோதனைன்னு நொந்து போனேன். அதனால், சத்யஜோதி பிலிம்ஸ் ஆட்டோ வந்தாலே ஓடி மறைய வேண்டியதாகி விட்டது.
அப்போது, விசு சாரின், டவுரி கல்யாணம் என்ற படம், 'ரீ-என்ட்ரி' மாதிரி எனக்கு வந்தது. அந்த படத்துக்கு எனக்கு பேசின சம்பளம், 10 ஆயிரம் ரூபாய் தான்.
படத் தயாரிப்பாளர் ஒருநாள் சம்பளம் விஷயமாக கூப்பிட்டு பேசும் போது, 'தம்பி, நான் இந்த படத்துக்கு பைனான்ஸ் வாங்கியது, சத்யஜோதி பிலிம்ஸ்ல தான். நீங்க அவங்களுக்கு தர வேண்டிய, 10 ஆயிரத்தை, உங்க சம்பளத்துல இருந்து பிடிச்சு அவங்க கிட்ட கொடுக்க சொல்றாங்க. இதுக்கு நீங்க என்ன சொல்றீங்க...' என, கேட்டார்.
'சரி சார், பாதியை கொடுத்துருங்க. மீதி, 5,000 ரூபாயை பிறகு தர்றேன்னு சொல்லிடுங்க. எனக்கும் கொஞ்சம் செலவுகள் இருக்கு...' என்றேன்.
டவுரி கல்யாணம் படப்பிடிப்பு, திருவள்ளூர் பக்கத்துல ஒரு கிராமத்துல நடந்தது. அங்கே என்னை அழைத்து போய், 'மேக்-அப்' போட்டு உட்கார வெச்சிட்டாங்க. சாயங்காலம், 5:00 மணிக்கு தான், நாலு வரி வசனம் பேச விட்டாங்க. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது.
அப்ப சாப்பாடு விஷயத்துல ஒரு பிரச்னை ஏற்பட்டது. 'ஷூட்டிங் ஸ்பாட்'டில், மாடியில் ஏறும் போது, புரோடக்ஷன் மேனேஜரிடம், 'சாப்பாடு மேல கொண்டு வாப்பா'ன்னு நான் சொல்ல, அதை தப்பா எடுத்து கொண்டார், அவர்.
'ஆமா, இவரு பெரிய, 'ஹீரோ' இவருக்கு மாடிக்கு சாப்பாடு எடுத்துட்டு வர வேண்டுமா?'ன்னு கிண்டலாகப் பேசினார்.
'ரொம்ப அவமானமாக போனது, அடக்கி கொண்டேன்...' என, தன் பழைய கதையை நினைவு கூர்ந்தார், விஜயகாந்த்.
ட வுரி கல்யாணம் மாநகரங்களில் மட்டுமல்லாமல், பட்டி தொட்டிகளிலும் வரவேற்பு பெற்று, நன்றாகவே வசூலித்தது. அதன் வெற்றிக்கு, விஜயகாந்தின் பங்களிப்பும் மிக முக்கிய காரணம். டவுரி கல்யாணம் படம், விஜயகாந்தை மீண்டும் விநியோகஸ்தர்களுக்கு ஞாபகப்படுத்தியது.
விஜயகாந்த் படம் மீண்டும் வெற்றியடைந்ததை அறிந்து, எஸ்.ஏ.சி., ஒருநாள், வீரப்பாவிடம் துணிந்து தன் முடிவை வலியுறுத்தி பேசினார்.
'நீங்க எனக்கும், விஜிக்கும் ஆளுக்கு, பத்தாயிரம் ரூபாய், 'அட்வான்ஸ்' மட்டும் கொடுங்க. சம்பளம் எதையும் இப்ப, 'பிக்ஸ்' பண்ணிக்க வேணாம். படத்தை எடுத்து, 'சக்ஸஸ்' பண்ணி காட்டினதும், நாங்க எங்க காசை வாங்கிக்கிறோம்...' என்றார், எஸ்.ஏ.சி.,
சம்மதித்தார், பி.எஸ்.வீரப்பா.
******
பி. எஸ்.வீரப்பாவின் தயாரிப்பில் நடிக்க போவதில், கிறுகிறுத்து போனார், விஜயகாந்த்.
'ரெடி ஸ்டார்ட்... ஆக்ஷன்... கட்... லைட்ஸ் ஆன்...' இதையெல்லாம் கேட்டு, ஏறக்குறைய ஒன்றரை ஆண்டு கடந்து விட்டது. போலீஸ் உடுப்பை மாட்டிக் கொண்டு, முன்னைக் காட்டிலும் கம்பீரமாக வாகினியில் கோர்ட் கூண்டில் வந்து நின்றார், விஜயகாந்த். எஸ்.ஏ.சி.,யின் யூனிட் மொத்தமும், களிப்பாகி முதல் காட்சிக்கு தயாரானது.
விஜயகாந்த் நீதிமன்றத்தில் ஆவேசமாக பேச வேண்டிய வசனத்தை வாசித்தார், செந்தில்நாதன். உடனடியாக உள் வாங்கி, அதை பிரமாதமாகப் பேசி நடித்து காட்டினார், விஜி. ஒத்திகை அற்புதமாக அரங்கேறியது. அடுத்தது, டேக்.
'டயலாக்கை பேசுங்க, விஜி. கேமரா ஓடிட்டு இருக்கு...' என்றெல்லாம் உற்சாகமூட்டி, உதவி இயக்குனர், செந்தில்நாதன் சொல்ல வேண்டிய வசனங்களை எடுத்து கொடுத்தார்.
ஒன்று, இரண்டு, மூன்று, நான்கைந்து டேக்குகள் ஓடி விட்டன. விஜயகாந்த் சிலையாகி போனாரே தவிர, வழக்கம் போல் சொற்சிலம்பம் ஆடிக் காண்போரை கவரவில்லை. மேலும், மேலும் எல்லாரும் அவரை வேடிக்கை பார்ப்பதை காண சகிக்காமல், 'பேக்-அப்' சொல்லி விட்டார், எஸ்.ஏ.சி.,
எஸ்.ஏ.சி.,க்கு ஒன்றும் புரியவில்லை. விஜிக்கு என்ன ஆச்சு என்ற பச்சாதாபமும், கவலையும் நெஞ்சில் ஓட, 'ஹீரோ'வைப் பார்த்தார். நடிப்பு மறந்து போனது, குற்ற உணர்வு, அவமானம். நாயகன் தலையை நிமிர்த்த இயலாமல் தவித்து கொண்டிருந்தார். யூனிட் மொத்தமும் செய்வதறியாது திகைத்து போனது.
வீரப்பாவிடமிருந்து ஆவேச வார்த்தைகள் வந்து விழுந்தன.
'நான் அப்பவே சொன்னேன். நீங்க கேக்கல. பிரபு, 'கால்ஷீட்' கிடைக்க, ஆறு மாசமானாலும் சரி, அவரையே, 'ஹீரோ'வா போட்டு எடுங்க. விஜிக்கு நடிக்க வரலன்னு அவரே காட்டிட்டாரு. நாம என்ன செய்ய முடியும்?
'பணத்தை கையில வெச்சுக்கிட்டா படம் எடுக்கறோம். பைனான்ஸ் வாங்கிச் செய்றோம். அந்த மார்வாடிக்கு மொதல்ல பதில் சொல்லியாகணுமே. இங்க நடந்தது கண்ணு, காது, மூக்கு வெச்சு இந்நேரம் வெளியில பரவி இருக்குமே...' என, அவர் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
விஜியிடம் தன் வருத்தத்தை வெளிப்படுத்தி, தோளில் ஆறுதலாக தட்டிக் கொடுத்தார், எஸ்.ஏ.சி.,
கிளிசரின் இல்லாமலேயே கண்களில் நீர் பெருக, 'சார்... ஒருநாள் மட்டும் எனக்கு கொஞ்சம், 'டைம்' கொடுங்க. நாளைக்கு வந்து நான் கண்டிப்பா சிறப்பா வசனம் பேசி நடிச்சிக் காட்டறேன்...' என்றார், விஜயகாந்த்.
ஓர் ஆசிரியர் முன், பள்ளி மாணவனாக பணிந்து நின்றார், விஜயகாந்த். தொழில் பிச்சை கேட்கும் தரமான கலைஞனை புறம் தள்ள முடியவில்லை; எஸ்.ஏ.சந்திரசேகரும், வீரப்பாவும் ஒப்புக் கொண்டனர்.
அன்று மாலை பொழுது, விஜியை தேற்றுவதற்காக, அவர் தங்கியிருந்த ரோஹிணி ஹோட்டலுக்குள் நுழைந்தார், செந்தில்நாதன்.
- தொடரும்
- பா.தீனதயாளன்
நன்றி : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் தொலைபேசி எண்: 7200050073