
அஜித் எடுத்த முடிவு!
சி னிமாவில் நடிகர், அஜித்குமாருக்கு நேரடி போட்டியாளராக இருந்த நடிகர், விஜய் அரசியலுக்கு சென்று விட்டதால், தற்போது, அவருக்கு போட்டி இல்லாததால், பெரிதாக சினிமாவில், ஆர்வம் காட்டாமல், கார் ரேஸில் பங்கேற்று வருகிறார், அஜித். இது குறித்து அவர் கூறுகையில், 'போட்டி இல்லாதபோது சுவராஸ்யம் இருக்காது. அதனால், விஜய் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டது, எனக்கான உற்சாகத்தை சற்று குறைத்துள்ளது. என்றாலும், இனிமேல் நான் நடித்த ஒரு படத்தை விட, இன்னொரு படத்தை இன்னும் சிறப்பாக கொடுக்க வேண்டும் என்கிற ஒரு போட்டியை எனக்கு நானே உருவாக்கிக்கொண்டு நடிக்க போகிறேன்...' என்கிறார், அஜித்.
- சினிமா பொன்னையா
முதல் இடத்துக்கு குறி வைக்கும், சாய் பல்லவி!
தமிழில் பல வெற்றி படங்களில் நடித்த போதும், நடிகை, சாய் பல்லவியால் இன்னும், தமிழில், 'நம்பர் ஒன்' நாற்காலியில் உட்கார முடியவில்லை. காரணம், இதுவரை அழுத்தமான வேடங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்தவர், இப்போது முன்வரிசை, 'ஹீரோ'களின் படங்கள் பக்கமும் திரும்பியுள்ளார். அந்த வகையில், தனுஷின், 55வது படத்தை கைப்பற்றியதை அடுத்து, ரஜினியின், 173வது படத்திலும் இணைய குறிவைத்து வருகிறார்.
- எலீசா
கவர்ச்சி பேயாக நடிக்கும், பூஜாஹெக்டே!
நடிகர், விஜயுடன், ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்ததை அடுத்து, தற்போது நடிகர், ராகவா லாரன்ஸ் இயக்கும், காஞ்சனா 4 படத்தில் நடித்து வருகிறார் நடிகை, பூஜாஹெக்டே. இப்படத்தில் மிரட்டலான பேயாக நடிக்கும் அவர், பாடல் காட்சிகளில் வழக்கத்தை விட, அதிகப்படியான கவர்ச்சியான உடை அணிந்து, நடிக்கிறார். இந்த அளவுக்கு, 'கிளாமர்' வேண்டாம் என்று, அப்படத்தை இயக்கும், ராகவா லாரன்ஸ் கூறிய போதும், 'என்னுடைய இளவட்ட ரசிகர்களுக்காக இதை நான் செய்தாக வேண்டும்...' என்று சொல்லி, 'பாலிவுட்' கவர்ச்சி கலாசாரத்தை, 'கோலிவுட்டில்' அமல்படுத்தியுள்ளார், பூஜாஹெக்டே.
- எலீசா
நயன்தாரா புதிய திட்டம்!
நடிகை நயன்தாரா கதையின் நாயகியாக நடித்த சில படங்கள் அடுத்தடுத்து அதிர்ச்சி தோல்வியாக அமைந்தபோதும், தற்போது அவர் நடித்து வரும், மூக்குத்தி அம்மன்- 2 படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கிறார். அப்படி வெற்றி பெறும் பட்சத்தில், மீண்டும் தனக்கென்று ஒரு வியாபார வட்டத்தை உருவாக்கும். அப்போது, தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் முயற்சியாக, தனக்கு சொந்தமான, 'ரவுடி பிக்சர்ஸ்' நிறுவனத்துடன் இன்னும் சில நிறுவனங்களையும் இணைத்து, தொடர்ந்து படங்களை தயாரித்து, கதையின் நாயகியாக நடிப்பதற்கு திட்டமிட்டு வருகிறார். அதற்காக, இப்போதே அதிரடியான கதைகளை கேட்டு, சில இயக்குனர்களை, 'வெயிட்டிங்'கில் வைத்துள்ளார், நயன்தாரா.
- எலீசா
கருப்புப் பூனை!
ஏற்கனவே டோலிவுட்டில் உள்ள ஒரு இளவட்ட, 'ஹீரோ'வுடன் நெருக்கமாக பழகி வந்த, மூனுஷா, பின்னர் அந்த உறவை முறித்துக் கொண்டார். இருப்பினும், தற்போது மீண்டும் தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கி இருக்கும், அவரை இன்னும் சில இளவட்ட, 'ஹீரோ'களும் தற்போது துரத்த துவங்கி இருக்கின்றனர். அதில் ஒரு, 'ஹீரோ' தொடர்ந்து தான் தெலுங்கில் நடிக்க சிபாரிசு செய்வதாக சொன்னதோடு, தன்னுடன், 'லிவிங் டு கெதர்' உறவில் இருக்குமாறும், மூனுஷாவை வலியுறுத்தி உள்ளார்.
ஆனால், அம்மணியோ, 'ஏற்கனவே டோலிவுட்டில் என்னுடைய பெயர் கெட்டுப்போய் கிடக்கிறது. இந்நேரத்தில் மீண்டும் இன்னொரு, 'ஹீரோ'வுடன் நெருங்கி பழகினால், ஒட்டுமொத்த, 'இமேஜும்' காலியாகி விடும். திருமணம் செய்யாமல் இருப்பதால், ஆளாளுக்கு என்னை, 'டேட்டிங்'கிற்கு அழைத்து முழுநேர, 'டேட்டிங்' நடிகையாக்கி விடுவர்...' என்று கூறி அவரது கையில் சிக்காமல் ஓட்டம் பிடித்து விட்டார், மூனுஷா.
*********
தற்போது தான் நடித்துள்ள, 'பீரியட்' படத்தில் தன்னுடன் மேலும் இரண்டு, 'ஹீரோ'கள் நடித்திருப்பதால் ஒருவேளை அவர்களால் தன்னுடைய கதாபாத்திரம் ஓரங்கட்டப்பட்டு விடுமோ என்று, அமரன் நடிகருக்கு திடீர் அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால், அந்த படத்தின் எடிட்டிங்கிலும் களமிறங்கிய நடிகர், இப்படத்தில் வில்லனாக நடிக்கும் அந்த, ஜெயமான நடிகருக்கு தன்னைவிட முக்கியத்துவம் வாய்ந்த சில முக்கியமான காட்சிகள் இருப்பதை பார்த்தவர், கண்டிப்பாக இந்த காட்சிகளை கத்தரித்தே ஆக வேண்டும் என்று இயக்குனரிடம் மல்லுக்கட்டி உள்ளார்.
ஆனால், இந்த விவகாரம் ஜெயமானவரின் காதுக்கு சென்றதை அடுத்து, 'நான் கஷ்டப்பட்டு நடித்த ஒரு சீனை கூட கத்தரிக்க விட மாட்டேன்...' என்று கொடி பிடித்து வருகிறார். இதனால், இந்த இரண்டு நடிகர்களுக்கும் நடுவே சிக்கி சிதைந்து கொண்டிருக்கிறார் அப்பட இயக்குனர்.
சினி துளிகள்!
* இயக்குனர், சுதா இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள, பராசக்தி படம் வருகிற பொங்கல் தினத்தன்று திரைக்கு வருகிறது.
* தக்லைப் படத்தின் தோல்வி காரணமாக, சம்பள விவகாரங்களில் அடக்கி வாசித்து வருகிறார், நடிகை த்ரிஷா.
* தன் நடிப்பு குறித்தும், எந்த மாதிரியான வேடங்களில் என்னை திரையில் பார்க்க விரும்புகிறீர்கள் என்பது குறித்தும் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது ரசிகர்களுடன் உரையாடுகிறார், நடிகை ருக்மணி வசந்த்.
* ஜனநாயகன் படத்தில் நடித்துள்ள, நடிகர், விஜய்க்கு சம்பள பாக்கி இருந்ததால் அவர், 'டப்பிங்' பேச வரவில்லை என்று வெளியான செய்தி உண்மையில்லை என்று, அப்படக்குழு மறுத்துள்ளது.
அவ்ளோதான்!

