
பின்னணி பாட விரும்பும், சிவகார்த்திகேயன்!
சமீபகாலமாக படம் தயாரிப்பது மட்டுமின்றி, தான் நடிக்கும் படங்களில் பாடல்கள் எழுதுவது மற்றும் பின்னணி பாடுவதிலும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் நடிகர், சிவகார்த்திகேயன். ஏற்கனவே தான் நடித்த, வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் உள்ளிட்ட சில படங்களில் பின்னணி பாடியவர், தற்போது, அவர் நடித்திருக்கும், பராசக்தி படத்தில், 'தரக்கு தரக்கு...' என்ற பாடலை பாடியிருக்கிறார். இனிமேல், தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும், தியேட்டர்களில் ரசிகர்களை நடனமாட வைக்கக்கூடிய ஒரு அதிரடியான, 'பாஸ்ட் பீட்' பாடலை தேர்வு செய்து, பின்னணி பாடுவதற்கும் திட்டமிட்டுள்ளார்.
- சினிமா பொன்னையா
கோடிகளை சொல்லி அடிக்கும், சாரா அர்ஜுன்!
தெய்வத்திருமகள், சைவம் மற்றும் பொன்னியின் செல்வன் என, பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த, மும்பையை சேர்ந்த நடிகை, சாரா அர்ஜுன், இவர், சமீபத்தில், நடிகர், ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடித்த, துரந்தர் என்ற ஹிந்தி படம் வெற்றி பெற்று, பாலிவுட்டில் பிரபலமாகி விட்டார். இதன் காரணமாக, தமிழ் படங்களில் அவரை, 'ஹீரோயின்' ஆக நடிக்க வைத்தால், அந்த படங்களை ஹிந்தியிலும் பெரிய அளவில் வியாபாரம் செய்யலாம் என்று, அவரை சில தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்ய சென்றனர்.
ஆனால், நடிகையோ, ' துரந்தர் படத்தில் நடிக்க ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கினேன். இப்போது புதிய படங்களில் நடிக்க, மூன்று கோடி ரூபாய் தர வேண்டும்...' என்றதும், அத்தனை பேருமே கதையை கூட சொல்லாமல், ஓட்டம் பிடித்து விட்டனர்.
- எலீசா
முன்னணி இடம் பிடிக்கும், மமிதா பைஜூ!
டியூட் படத்தின் வெற்றி காரணமாக தற்போது, 'கோலிவுட்'டில் கவனம் பெற்றுள்ள நடிகை, மமிதா பைஜூ, நடிகர், சூர்யாவின், 46வது படத்தை கைப்பற்றியதோடு நடிகர், தனுஷின் 54வது படத்தையும் கைப்பற்றி இருக்கிறார். இதன் மூலம் முன்வரிசை நாயகி பட்டியலில் முன்னேறி வரும், மமிதா பைஜு, அடுத்து, நடிகர்கள், சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படங்களை கைப்பற்ற தீவிர பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். 'டாப்' நடிகர்களுடன் நடிப்பதோடு, படத்துக்கு படம் படக்கூலியை உயர்த்தி வருகிறார்.
- எலீசா
ஆன்லைனில் அவதுாறு-... ஸ்ரீலீலா ஆதங்கம்!
தன்னைப் பற்றி, 'சோஷியல் மீடியா'வில் பலதரப்பட்ட வதந்திகள் பரவிக் கொண்டிருப்பதால் கடும் அதிர்ச்சியில் இருக்கும் நடிகை, ஸ்ரீ லீலா, ஒரு நபரை நியமித்து வதந்திகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் உடனுக்குடன் தன், 'சோஷியல் மீடியா'வில் செய்திகளை வெளியிடுமாறு அறிவுறுத்தி உள்ளார். அது மட்டுமின்றி, 'ஏ.ஐ.,' தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, தன்னை மோசமாக சித்தரித்து வெளியாகும் வீடியோ மற்றும் புகைப்படங்களையும் உடனுக்குடன், 'சைபர் கிரைம்'முக்கு தகவல் கொடுத்து, அப்படங்களை நீக்கச் சொல்லியும், அந்த நபருக்கு உத்தரவிட்டுள்ளார், ஸ்ரீ லீலா.
- எலீசா
'மல்டி ஹீரோ' கதைகள் தேடும், அதர்வா!
பராசக்தி படத்தில் நடிகர்கள், சிவகார்த்திகேயன் மற்றும் ரவி மோகனுடன் இணைந்து நடித்திருக்கும் நடிகர், அதர்வா தொடர்ந்து இதுபோன்று முன்னணி நடிகர்களுடன் நடித்து, 'மார்க்கெட்'டை பிடித்து விட வேண்டும் என்பதற்காக, தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும், 'மல்டி ஹீரோ' கதைகளை தேடி வருகிறார். அதோடு, இதுவரை வில்லனுக்கான முக அமைப்பு என்னிடத்தில் இல்லை என்று, 'நெகட்டிவ் ரோல்'களை தவிர்த்தவர், இப்போது, முன்னணி கதாநாயகர்களின் படங்களில் வில்லன் வேடத்தில் நடிக்க, தான் தயாராக இருப்பதாகவும் கூறுகிறார், அதர்வா .
- சினிமா பொன்னையா
கறுப்புப் பூனை!
ஆரம்ப காலத்தில் தன் தம்பி, சுள்ளானை வைத்து, 'ஹிட்' படங்களை கொடுத்த செல்வமான இயக்குனர், பின்னர் அவரை வைத்து இயக்கிய சில படங்கள் தோல்வி அடைந்தன. இந்நிலையில் மீண்டும், சுள்ளானை வைத்து படம் இயக்கி, சரிந்த, தன் 'மார்க்கெட்'டை துாக்கி நிறுத்தி விட வேண்டும் என்று அவரிடம் கடந்த இரண்டு ஆண்டுகளாக, 'கால்ஷீட்' கேட்டு வருகிறார்.
ஆனால் சுள்ளானோ, 'செலவுக்கு வேண்டுமானால் எத்தனை லட்சம் வேண்டுமானாலும் தருகிறேன். ஆனால், 'கால்ஷீட்' மட்டும் கேட்காதே. மீண்டும், 'பிளாப்' படத்தை கொடுத்து, என் தலையில் மண் அள்ளிப் போட்டுக்கொள்ள நான் தயாராக இல்லை...' என்று அடித்து சொல்லி விட்டார். இப்படி சொந்த தம்பியே தன்னை கழட்டி விட்டதால், 'சோஷியல் மீடியா'வில் புலம்பல் செய்திகளை வெளியிட்டு, சுள்ளானை மறைமுகமாக விமர்சித்து வருகிறார், செல்வமான இயக்குனர்.
சினி துளிகள்!
வெந்து தணிந்தது காடு மற்றும் ரெட்ட தல என, சில தமிழ் படங்களில் நடித்துள்ள, தெலுங்கு நடிகை, சித்தி இத்னானி, காதல், காமெடி மற்றும் சமூக பிரச்னைகளை பேசும் படங்களில் நடிப்பதில் தான் அதிக ஆர்வமாக இருப்பதாக கூறுகிறார்.
* நானே வருவேன் என்ற படத்தை அடுத்து, ஏற்கனவே தான் இயக்கிய, 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை நடிகர், ரவிகிருஷ்ணாவை நடிக்க வைத்து, இயக்கி வருகிறார் இயக்குனர், செல்வராகவன்.
* நடிகர், அஜித்தின், குட் பேட் அக்லி படத்தில், 'நெகட்டிவ் ரோலில்' நடித்த நடிகை, ரெஜினா, அடுத்து அவர் நடிக்கும், 64வது படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்க போகிறார்.
அவ்ளோதான்

