
ரஜினி பாணிக்கு மாறிய, கமலஹாசன்!
ரஜினி தான் பெரும்பாலும் வெற்றி படங்களை இயக்கிய, இயக்குனர்களிடம் கதை கேட்பார். இந்நிலையில் இயக்குனர், மணிரத்னம் இயக்கத்தில் தான் நடித்த, தக்லைப் படம் தோல்வி அடைந்த நிலையில், 'ஸ்டன்ட் மாஸ்டர்'களாக இருந்து இயக்குனர்களான, அன்பறிவ் என்ற இரட்டை இயக்குனர்கள் இயக்கும் படத்தில் நடிக்க தயாரான, கமலஹாசனும் தற்போது வெற்றிப் படங்களை கொடுக்கும் இயக்குனர்கள் பக்கம், 'யு - டர்ன்' போட்டுள்ளார்.
சமீபத்தில், இயக்குனர், வெற்றிமாறனை அழைத்து கதை கேட்டு இருக்கும் அவர், அடுத்தடுத்து, 'லேட்டஸ்ட்'டாக, 'ஹிட்' படங்களை கொடுத்த, மேலும் மூன்று இயக்குனர்களிடம் கதை கேட்டுள்ளார். இக்கதைகளை தன், 'ராஜ்கமல் பிலிம்ஸ்' சார்பில் திரைப்படமாக தயாரித்து, நடிக்கவும் திட்டமிட்டு உள்ளார், கமல்.
— சினிமா பொன்னையா
'ரொமான்ஸ்' கேட்கும், நித்யா மேனன்!
சமீபகாலமாக, குடும்ப கதைகளில் நடித்து வரும் நடிகை, நித்யா மேனன், அது போன்ற படங்களில், 'லவ் சீன்'களையும் வைக்குமாறு இயக்குனர்களை கேட்டுக் கொள்கிறார். 'அப்படி இருந்தால் தான் என்னை ரசிகர்கள், 'ஹீரோயின்' ஆக பார்க்கின்றனர். 'ரொமான்ஸ்' இல்லை என்றால், கேரக்டர் நடிகை என்ற கோணத்தில் பார்க்க துவங்கி விடுவர்...' என்று கோரிக்கை வைக்கிறார். அதனால், நித்யாமேனன், மனைவி வேடத்தில் நடிக்கும் படங்களில் கூட, கணவருடன் அவர், 'ரொமான்ஸ்' செய்யும் கிளுகிளுப்பான காட்சிகளை இணைத்து வருகின்றனர்.
— எலீசா
மறுப்பு தெரிவிக்கிறார், சிவகார்த்திகேயன்!
தான் நடிக்கும் படங்களுக்கான, 'ஹீரோயினி'களை நடிகர், சிவகார்த்திகேயனே தேர்வு செய்கிறார் என்ற ஒரு பேச்சு இருந்த போதும், அவர் அதை முழுமையாக மறுக்கிறார். 'நடிப்பதோடு மட்டுமே என்னுடைய எல்லையை வைத்துக் கொள்கிறேன். ஒருபோதும் நான் எல்லை மீறி அடுத்தவர்களின் வேலைகளில் மூக்கை நுழைப்பதில்லை. அதோடு, என் நிறுவனம் தயாரிக்கும் படங்களில்கூட, இயக்குனர்களே அந்த கதைக்கு, 'செட்'டாக கூடிய நடிகையரை தேர்வு செய்கின்றனர். அதில் கூட நான் தலையிடுவதே இல்லை...' என்கிறார், சிவகார்த்திகேயன்.
— சினிமா பொன்னையா
கருப்புப் பூனை!
டிராகன் நடிகர், 'ஹீரோ'வாக நடித்த முதல் படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்த அந்த மூன்றெழுத்து மலையாள நடிகை, சில காட்சிகளில் நடிகர் திரும்பத்திரும்ப, 'ரீ-டேக்' வாங்கிக் கொண்டே இருந்ததை பார்த்து முகம் சுளித்துள்ளார்... 'என்னுடைய திறமைக்கு இதுபோன்ற தத்தி நடிகர்களுடனெல்லாம் நடிக்க வேண்டியதுள்ளதே...' என்றெல்லாம் படப்பிடிப்பு தளத்தில் அவரை மட்டம் தட்டியும் பேசி இருக்கிறார். ஆனால், அப்போது, நடிக்க தெரியாமல் இருந்த, டிராகன் நடிகர், 'ஹிட்' பட நடிகராகி விட்டார். இந்த நேரத்தில் பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் மேற்படி நடிகை, சமீபத்தில், டிராகன் நடிகரை சந்தித்து, 'மீண்டும் உங்களுடன் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்...' என்று கல் ஏறிந்துள்ளார். அதற்கு நடிகரோ, 'இன்னும் உன்னுடன் நடிக்கும் அளவுக்கு நான் நடிப்பில் தேர்ச்சி பெறவில்லை...' என்று சிரித்துக்கொண்டே, அம்மணிக்கு, 'ஷாக்' கொடுத்து விட்டார்.
********
சார்பட்டா நடிகரின், 'மார்க்கெட்' குடை சாய்ந்து கிடப்பதால், அவரது நட்பு வட்டார இயக்குனர்களும் கைவிட்டு விட்டனர். இதனால், அடுத்தபடியாக கைக்காசை போட்டாவது, 'ஹீரோ'வாக நடிக்க வேண்டும் என்பதற்காக ஒரு புதிய பட நிறுவனத்தை துவங்கி உள்ள நடிகர், தன் மனைவி நடித்து வாங்கிய ஒரு வீட்டை விற்று, அந்த பணத்தில், அப்படத்தை தயாரித்து நடிக்க களமிறங்கியுள்ளார். ஆனால், நடிகரின் இந்த செயலால், 'அப்-செட்'டான அவரது வூட்டுக்கார அம்மணியோ, சினிமாவில் சொந்த காசில் சூனியம் வைக்கக்கூடாது என்பது தெரிந்தும் நடிகர் இந்த விஷப்பரீட்சையில் இறங்கி இருப்பதால், துக்கம் தாளாமல் சரக்கடித்துவிட்டு அவருடன் மல்லுக்கு நிக்கிறார்.
சினி துளிகள்!
*லவ் டுடே படத்தை அடுத்து, மீண்டும் ஒரு படத்தை இயக்கி நடிக்கப் போகிறார் நடிகர், பிரதீப் ரங்கநாதன்.
* சார்பட்டா பரம்பரை படத்தை அடுத்து, மீண்டும், பா.ரஞ்சித் இயக்கும், வேட்டுவம் படத்தில் நடிக்கிறார், ஆர்யா.
* விஜய்யின் மகன், ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள, சிக்மா படத்தில் நடிகர், சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை, பரியா அப்துல்லா நடித்திருக்கிறார்.
* பத்து ஆண்டுகளுக்கு பிறகு, லெனின் பாண்டியன் என்ற படத்தில், 'ரீ-என்ட்ரி' கொடுத்துள்ள நடிகை, ரோஜா மேலும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
அவ்ளோதான்!

