
கதை விவாதத்திலும் களம் இறங்கிய, கமல்!
நடிகர், கமலஹாசன் தயாரிப்பில், ரஜினி நடிக்கும், 173-வது படத்தை இயக்குனர், சிபி சக்ரவர்த்தி இயக்கப் போவதை அறிவித்துவிட்ட நிலையில், இந்த படத்தின் கதை விவாதம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதோடு, இந்த படத்தை, பலமொழி படமாக வெளியிட திட்டமிட்டுள்ள, கமலஹாசன், பல மொழிகளை சார்ந்த முக்கிய நடிகர்களையும் படத்துக்குள் கொண்டு வருவதோடு, இப்படத்தின் கதை விவாதத்திலும் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே, இயக்குனர், சுந்தர்.சி சொன்ன கதை திருப்தி இல்லாமல் இயக்குனரை மாற்றி இருப்பதால், இந்த படம் திரைக்கு வரும் போது எந்தவித விமர்சனங்களிலும் சிக்கி விடக்கூடாது என்பதற்காகவே கதை விவாதத்திலும் கலந்து கொள்வதாக கூறுகிறார், கமல்.
— சினிமா பொன்னையா
உயரமான, 'ஹீரோ'களை தேடும், கிருத்தி சனோன்!
நடிகர், தனுஷ் நடித்த, தேரே இஸ்க் மெயின் என்ற ஹிந்தி படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை, கிருத்தி சனோன், '5.8' அடி உயரம் கொண்டவர். ஆனால், சில, 'ஹீரோ'கள் தன்னை விட குறைவான உயரம் இருப்பதால், அவர்களுடன் நடிப்பதற்கு மறுத்து விடுகிறார். காரணம் கேட்டால், 'அதுபோன்ற நடிகர்களுடன் நடிக்கும்போது, 'கெமிஸ்ட்ரி ஒர்க்-அவுட்' ஆகாது. மாறாக ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாக நேரிடும். அதனால், என்னிடம் இயக்குனர்கள் கதை சொல்ல வரும்போதே படத்தின், 'ஹீரோ' யார் என்பதை கேட்ட பிறகே கதை கேட்கிறேன்...' என்கிறார், கிருத்தி சனோன்.
— எலீசா
குத்தாட்டம் போட்டு கோடிகளை அள்ளும், தமன்னா!
சினிமாவில், 'ஹீரோயின்' வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து, குத்தாட்டம் ஆடி தன்னை, 'மார்க்கெட்'டில் தக்க வைத்து கொண்டு வருகிறார் நடிகை, தமன்னா. இந்நிலையில், பிரமாண்ட சினிமா நிகழ்ச்சிகள் மட்டுமின்றி தனியார் மேடைகளிலும் தோன்றி நடனமாட துவங்கியிருக்கும், தமன்னா, ஐந்து நிமிட பாடலுக்கு நடனமாட, ஆறு கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருகிறார். அந்த வகையில் சினிமாவில் வருமானம் குறைந்தாலும் இப்படி மேடைகளில் ஆட்டம் போட்டு, தன் வருமானத்தை பெருக்கிக் கொண்டு வரும் தமன்னா, புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, கோவா கடற்கரையில் நடைபெற்ற ஒரு பிரமாண்ட நிகழ்ச்சியில் அதிரடி ஆட்டம் போட்டு, கல்லா கட்டியுள்ளார்.
— எலீசா
சாமானியராக, விஜய் சேதுபதி!
நடிகர், விஜய் சேதுபதியை பொறுத்தவரை, பந்தாவான பகட்டான கதாபாத்திரங்களை விட, எளிமையான சாமானியரின் கதாபாத்திரங்களில் நடிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டுகிறார். 'அதுவே, நான் கடந்து வந்த பாதை என்பதால், அதுபோன்ற வேடங்களில் என்னால், அதிகப்படியான உயிர்ப்புடன் நடிக்க முடிகிறது. நிறைய மாறுபட்ட உணர்வுகளையும் இயல்பாக வெளிப்படுத்த முடிகிறது...' என்கிறார், விஜய்சேதுபதி.
— சினிமா பொன்னையா
கருப்புபூனை!
துப்பாக்கி நடிகை மும்பையில் தன் தோழிகளுடன் சரக்கு, 'பார்ட்டி'க்கு சென்றபோது, இரண்டொரு முறை ஆத்துக்காரரையும் கூட்டிச் சென்றுள்ளார். அதையடுத்து அம்மணி தெலுங்கு படங்களில் நடிக்க சென்று விடும்போது, அம்மணியின் தோழிகளுடன் சரக்கு, 'பார்ட்டி'களில் கம்பெனி கொடுக்க துவங்கி விடுகிறார், நடிகையின் ஆத்துக்காரர். இதனால், தற்போது ஒரு தோழியின் வீடே கதி என்று கிடக்கிறாராம்.
இந்த செய்தி நடிகையின் கவனத்திற்கு வந்ததை அடுத்து கடும் அதிர்ச்சி அடைந்தவர், தோழியின் பிடியிலிருந்து ஆத்துக்காரரை மீட்பதற்கு படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
சினி துளிகள்!
* ஹிந்தியில் நடித்துள்ள, ராமாயணா படத்தில், மண்டோதரி வேடத்தில் நடித்துள்ளார் நடிகை, காஜல் அகர்வால்.
* மற்ற மொழிகளில் வெளியாகும், 'ஹிட்' படங்களை யாரேனும் இயக்குனர்கள், 'ரீ-மேக்' செய்தால், இதுபோன்று செய்வது அடுத்தவர்களின் சட்டையை, 'ஆல்ட்ரேஷன்' பண்ணி போடுவது போல்தான் இருக்கும். ஒரு போதும் புதிய சட்டையாக தெரியாது என்று, 'அட்வைஸ்' கொடுக்கிறார் இயக்குனர், கே.பாக்யராஜ்.
* நடிகர், ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும், இம்மார்ட்டல் என்ற தமிழ் படம், 'திரில்லர்' கதையில் உருவாகி வருகிறது. இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நடிகை, கயாடு லோகர் நடிக்கிறார்.
* இயக்குனர், ராஜேஷ்.எம் இயக்கத்தில், சிவா மனசுல சக்தி படத்தில் நடித்த நடிகர், ஜீவா மீண்டும் அவர் இயக்கத்தில், ஜாலியா இருந்த ஒருத்தன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அவ்ளோதான்!

