
'அட்வைஸ்' கொடுக்கும், கமலஹாசன்!
சமீபகாலமாக சிறந்த படைப்புகளை கொடுக்கும், இளவட்ட இயக்குனர்களை அழைத்து பாராட்டும் நடிகர், கமலஹாசன், எதிர்காலத்தில் எந்த மாதிரியான கதைகளின் பாதையில் பயணித்தால் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் பாராட்டு மற்றும் விருதுகளை குவிக்க முடியும் என்று, 'அட்வைஸ்' கொடுக்கிறார். மேலும், அவர்களுக்கு உலக அளவில் உள்ள சில முக்கியத்துவம் வாய்ந்த இயக்குனர்களின் சிறந்த படங்களை சுட்டிக்கட்டி, இதுபோன்ற படைப்பாளிகளை, 'பாலோ' பண்ணி, உங்களின் திறனை இன்னும் வளர்த்து, உலகத்தரத்தில் தமிழ் படங்களை இயக்குங்கள், என்றும் வாழ்த்தி அனுப்புகிறார்.
- சினிமா பொன்னையா
மலேஷியாவில் குடியேற திட்டமிடும், த்ரிஷா!
தமிழ் சினிமா நடிகர்களான, அஜித்குமார், மாதவன் மற்றும் நடிகை நயன்தாரா உள்ளிட்ட பலரும் மலேஷியா நாட்டில் வீடு வாங்கி உள்ளனர். படப்பிடிப்பு இல்லை என்றால், அடிக்கடி அங்கு சென்று ஓய்வெடுக்கின்றனர். தற்போது நடிகை, த்ரிஷாவும் மலேஷியாவில் வீடு வாங்கி, அங்கேயே நிரந்தரமாக தங்க முடிவெடுத்துள்ளார். படப்பிடிப்பு இருக்கும் நாட்களில் மட்டுமே இந்தியா வருவதற்கும் திட்டமிட்டுள்ளார்.
- எலீசா
கதை தேடும், ரவி மோகன்!
பராசக்தி படத்தில் வில்லனாக நடித்து கைதட்டல் பெற்றுள்ள நடிகர், ரவி மோகன், அடுத்தபடியாக, 'ஹீரோ'வும் நானே, வில்லனும் நானே என்ற பாணியில் ஒரே படத்தில், 'டபுள் ஆக்ஷன்' கொடுப்பதற்கு திட்டமிட்டு வருகிறார். அதற்காக, வாலி படத்தில், 'பாசிட்டிவ்' மற்றும் 'நெகட்டிவ்' என, இரண்டு விதமான கதாபாத்திரங்களில், நடிகர், அஜித்குமார் நடித்தது போன்று, அடுத்து தானும் அதுபோன்று நடிக்க விரும்புவதாக சொல்லி, சில இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். அதோடு, அந்த வில்லன் கேரக்டர், 'ஸ்டைலிஷ்' ஆக இல்லாமல், முரட்டு வில்லனாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறார், ரவி மோகன்.
- சினிமா பொன்னையா
'சைடு' வருமானத்தில் கொழிக்கும், ராஷ்மிகா மந்தனா!
தற்போது தெலுங்கு, ஹிந்தி படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை, ராஷ்மிகா மந்தனா, ஒரு படத்தில் நடிப்பதற்கு, 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். தான் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தில் சொந்த மாநிலமான கர்நாடகாவில் வீடு, பங்களா என, வாங்கி வாடகைக்கு விடுகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டில் அவர் வருமான வரி மட்டும், 5 கோடி ரூபாய் செலுத்தி உள்ளார். அந்த அளவுக்கு சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி, அவருக்கு சைடு வருமானமும் பெரிய அளவில் வந்து கொண்டிருக்கிறது.
- எலீசா
கருப்புப் பூனை!
தளபதி நடிகரின் இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக, அவர் நடிப்பது போன்று தனக்கும் கதை தயார் செய்யுமாறு இயக்குனர்களை கேட்டுக்கொண்டு வந்த அமரன் நடிகர், சமீபத்தில் ஒரு இயக்குனரிடம், பாட்ஷா படத்தை போன்ற ஒரு கதை சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறார். அதிலும், உச்ச நடிகருக்கே சவால் விடும் வகையில் அதிரடியான காட்சிகள் அந்த படத்தில் இருக்க வேண்டுமென்று பெரிய, 'பில்டப்' கொடுத்துள்ளார். அதைக்கேட்ட அந்த இயக்குனரோ, 'நீங்கள் சொன்ன அந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க, உச்ச நடிகரே தயங்கி வருகிறார். இந்நிலையில், உங்களுக்கு ஏன் இந்த விபரீத ஆசை. ஆசைப்படலாம் ஆனால், தகுதிக்கு மீறி பேராசை எல்லாம் படக்கூடாது...' என்று கூறி, நடிகருக்கு ஒரு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சினி துளிகள்!
* ஆஸ்கார் விருது விழா படங்கள் பட்டியலில், சிறந்த திரைப்பட பிரிவில், சசிகுமார்-, சிம்ரன் இணைந்து நடித்த, டூரிஸ்ட் பேமிலி படம் தேர்வாகி உள்ளது.
* தெலுங்கில் தான் நடித்த முதல் படமே படுதோல்வி அடைந்து விட்டதால், இப்போது தெலுங்கு இயக்குனர்கள் கதை சொல்ல வந்தாலே தெறித்து ஓட்டம் பிடித்து விடுகிறார் நடிகர், சிவகார்த்திகேயன்.
* 'டாப் ரேஞ்ச் ஹீரோ'களின் படங்களுக்கு மட்டுமே இசையமைப்பேன்...' என்று கூறும் இசையமைப்பாளர், அனிருத், தன்னைத் தேடி வரும் வளர்ந்து வரும் நடிகர்களின் படங்களை திருப்பி அனுப்பி விடுகிறார்.
* இயக்குனர், அட்லி இயக்கும் படத்தில் நடிக்கும், தெலுங்கு நடிகர், அல்லு அர்ஜுன் அடுத்து, இயக்குனர், லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார்.
அவ்ளோதான்!

