
மீண்டும், 'சென்டிமென்ட்' ஏரியாவுக்குள் வரும், ரஜினி!
அண்ணாத்த படத்திற்கு பிறகு, 'ஆக்ஷன்' கதைகளாகவே நடித்து வந்த, ரஜினி தன், 173-வது படத்தில் மீண்டும், 'ஆக்ஷன்' கலந்த, 'பேமிலி சென்டிமென்டு'க்கு திரும்புகிறார். ஏற்கனவே, அவர் நடித்த, பாட்ஷா பட பாணியில் இந்த படம் உருவாகிறது. முக்கியமாக, கூலி படத்தை பார்க்க, 'பேமிலி ஆடியன்ஸ்' தியேட்டருக்கு வராததால் இளைஞர்கள் மட்டுமின்றி, பெண்களையும் ஈர்க்கவே இந்த கதைக்களத்தை தேர்வு செய்துள்ளார், ரஜினி.
— சினிமா பொன்னையா
அதிரடி மனைவியாக மாறிய, தமன்னா!
காதல், 'பிரேக்-அப்'பிற்கு பின் நடிகர், விஷாலுடன், புருஷன் என்ற தமிழ் படத்தில், 'ரீ-என்ட்ரி' கொடுக்கிறார் நடிகை, தமன்னா. 'இந்த படத்தில் கணவரை அடக்கி ஆளும் அதிரடி மனைவியாக நடிக்கிறேன். இது போன்று அழுத்தமான குடும்ப வேடங்களில் நடித்து, ரசிகர்களை 'இம்ப்ரஸ்' பண்ண போகிறேன். அடாவடியான மனைவியாகவோ அல்லது அன்பான மனைவியாகவோ... எதுவாயிருந்தாலும் 'பெஸ்ட் பர்பாமென்ஸை' கொடுக்கப் போகிறேன். அதற்கு இந்த, புருஷன் படமே பிள்ளையார் சுழி போட்டுக் கொடுக்கும் என்று நம்புகிறேன்...' என்கிறார், தமன்னா.
— எலீசா
சாய் பல்லவிக்கு அதிர்ச்சி கொடுத்த, 'லிப்லாக்' புகைப்படம்!
தற்போது வரை தான் நடிக்கும் படங்களில் எல்லை மீறாமல் நடித்து வருகிறார் நடிகை, சாய் பல்லவி. இந்நிலையில், அவர் நடித்துள்ள, ஏக் தின் என்ற, 'ரொமான்டிக்' ஹிந்தி படத்திலும் கூட அவர், 'லிமிட்' தாண்டவில்லை. இருப்பினும், அப்பட நாயகன், ஜூனைத்கானுக்கு, சாய் பல்லவி, 'லிப்லாக்' முத்தம் கொடுப்பது போன்றும், பிகினி உடையில் தோன்றுவது போன்றும், 'ஏ.ஐ.,' புகைப்படங்கள், 'சோஷியல் மீடியா'வில் வைரலாகியது. அதைப்பார்த்து, 'ஷாக்'கான, சாய்பல்லவி, 'இதெல்லாம் விஷமத்தனத்தின் உச்சம்...' என்று நெட்டிசன்கள் மீது சீறியுள்ளார்.
— எலீசா
ரேஸ் காரில் பயணிக்க, 86 ஆயிரம் ரூபாய்!
தான் நடிக்கும் படங்களின், விளம்பர நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்ளாத நடிகர், அஜித்குமார் தற்போது, கார் ரேஸில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அவருடைய 'பெராரி' கார் மற்றும் 'டீ-சர்ட்'டில் 'கோலா' நிறுவனத்தின் 'லோகோ'வை போட்டு, விளம்பரப்படுத்துகிறார். அதோடு, தான் பயன்படுத்தும், 'பெராரி 488 சேலஞ்ச்' என்ற ரேஸ் காரில், துபாய் நாட்டில் அவருடன் அந்த காரில் பயணிக்க ஒரு நபருக்கு, 3500 திர்காம் என்று டிக்கெட் கட்டணம் அறிவித்துள்ளார். இது, இந்திய ரூபாய் மதிப்பில், 86 ஆயிரம் ரூபாய்.
— சினிமா பொன்னையா
கருப்புப் பூனை!
'நான் ரொம்ப நேர்மையானவன். மற்ற பெண்களை ஏறெடுத்து கூட பார்க்க மாட்டேன்...' என்று, அமரன் நடிகர் பேட்டிகளில் சொன்னாலும், அவரது வளர்ச்சியை பார்த்து அவரை நோக்கி கோலிவுட் அம்மணிகள் படையெடுக்க துவங்கியுள்ளனர். விஷயம் நடிகரின் வூட்டுக்கார அம்மணிக்கு கசிந்ததை அடுத்து, அச்சம் அதிகரித்து விட்டது. அதனால், இதுவரை சினிமா வட்டாரங்களுக்கு, 'என்ட்ரி' கொடுக்காமல் இருந்த அவர், தற்போது திடீர் திடீரென்று படப்பிடிப்பு தளங்களுக்கு, 'விசிட்' அடிக்கிறார். அப்போது, படப்பிடிப்பு தளங்களில் நடிகருடன் கடலை போடும் அம்மணிகளை பார்த்து பார்வையாலே மிரட்டுகிறார். நடிகரை இதுபோன்ற காத்து கருப்பு நடிகையர் அண்டாமல் இருக்க தன் சார்பில் ஒரு நபரை, 'செக்யூரிட்டி' போட்டுள்ளார், அமரன் நடிகரின் வூட்டுக்கார அம்மணி.
புரோட்டா காமெடியன், 'ஹீரோ'வாக நடிக்கும் புதிய படம், 75 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாவதை பார்த்த வாசனை காமெடியன், 'அப்செட்' ஆகிவிட்டார். தனக்கு பிறகு, 'ஹீரோ'வான காமெடியன் தன்னைவிட கூடுதல் பட்ஜெட் படங்களில் நடிப்பதா? அது தனக்கு அவமானம் ஆயிற்றே என்று தன்னை வைத்து, 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் எடுங்கள் என்று, இரண்டு தயாரிப்பாளர்களை துரத்தி வந்தார். ஆனால், அவர்களோ, 'உங்களை வைத்து, 20 கோடி ரூபாயில் படம் எடுத்து போட்ட காசை எடுப்பதற்குள் நாக்கு தள்ளி விடுகிறது. இதுல, 100 கோடி ரூபாய் படமா? வேண்டுமானால் உங்கள் கைக்காசை போடுங்கள். நாங்கள், 'பர்ஸ்ட் காபி' அடிப்படையில் படத்தை தயாரித்து தருகிறோம்...' என்று ஒரு போடு போட்டதை அடுத்து, விட்டால் போதும் என்று தெறித்து ஓட்டம் பிடித்து விட்டார், வாசனை காமெடியன்.
சினி துளிகள்!
* முன்பு காமெடியனாக நடித்த, 'ஹீரோ'களுடன் இப்போதும் நல்ல நட்பு வைத்திருக்கும் நடிகர்கள், சந்தானம் மற்றும் புரோட்டா சூரி ஆகியோர், மீண்டும், தங்களை காமெடியனாக நடிக்க அழைத்தால் தடாலடியாக மறுத்து விடுகின்றனர்.
* கனா படத்தின் தயாரிப்பாளரான நடிகர், சிவகார்த்திகேயன், தற்போது தன்,'எஸ்.கே.புரொடக்ஷன்ஸ்' நிறுவனத்தின், ஒன்பதாவது படமாக, தாய்க்கிழவி என்ற படத்தை தயாரித்துள்ளார்.
* மலையாளத்தில் நடிகை, கல்யாணி பிரியதர்ஷன் நடித்த, லோகா படத்தை போன்று தன்னையும் கதையின் நாயகியாக வைத்து படம் இயக்குமாறு தயாரிப்பாளர்களை துரத்தி வருகிறார் நடிகை, மாளவிகா மோகனன்.
அவ்ளோதான்!

