
வாழ்க்கை வரலாறு படங்களில் நடிக்கும், தனுஷ்!
இசையமைப்பாளர், இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகர், தனுஷ். அதைத்தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு கதையிலும் நடிக்க இருக்கிறார். இந்த, இரண்டு படங்களுக்காக, அவர்களைப் போன்ற தோற்றத்துக்கு, தனுஷை மாற்றி, 'போட்டோ ஷூட்' நடத்தியுள்ளனர்.
தற்போது கைவசம் உள்ள, மூன்று படங்களையும், இந்த ஆண்டுக்குள் நடித்து முடித்து, இளையராஜா மற்றும் அப்துல் கலாம் பற்றிய வாழ்க்கை வரலாறு படங்களில், 2027ம் ஆண்டு தொடக்கத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார், தனுஷ்.
— சினிமா பொன்னையா
'கால்ஷீட்' சர்ச்சைக்கு முடிவு கட்டும், நயன்தாரா!
நடிகை, நயன்தாரா ஒரே நேரத்தில் பல மொழிப் படங்களில் நடித்து வருவதால், 'மீடியம் பட்ஜெட்' படங்களுக்கு, 'கால்ஷீட்' ஒதுக்க முடியாததால், கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார். அதனால், 'கால்ஷீட் சொதப்பல் நடிகை...' என்று அவரை பலரும் விமர்சித்தனர். இது, நயன்தாராவின் காதுக்கு சென்றதை அடுத்து, தற்போது தான், நடிக்க முடியாமல் விட்டிருந்த, இரண்டு படங்களுக்கு மீண்டும், 'கால்ஷீட்' கொடுத்து, நடிக்க துவங்கி இருக்கிறார். 'இனிமேல் எந்த சந்தர்ப்பத்திலும், 'கால்ஷீட்'டை மாற்றி மாற்றி கொடுத்து, 'இமேஜை' கெடுத்துக் கொள்ள மாட்டேன்...' என்ற முடிவுக்கு வந்திருக்கிறார், நயன்தாரா.
— எலீசா
'பட்ஜெட்' படத் தயாரிப்பில், தீவிரம் காட்டும், சவுந்தர்யா ரஜினி!
ரஜினியின் இளையமகள், சவுந்தர்யா, கோச்சடையான் மற்றும் வேலையில்லா பட்டதாரி- 2 ஆகிய படங்களை இயக்கினார். மேலும், கோவா என்ற தமிழ் படத்தையும் தயாரித்தார். இந்த படங்கள் எதுவும் இவருக்கு பெரிய அளவில் வெற்றியை தரவில்லை.
சமீபத்தில் வெளியான, வித் லவ் என்ற தமிழ் படத்தை, டூரிஸ்ட் பேமிலி தமிழ் படத்தை இயக்கிய இயக்குனர், அபிஷன் ஜீவிந்த்தை, 'ஹீரோ'வாக நடிக்க வைத்து, 4 கோடி ரூபாய் பட்ஜெட்டில், இவர் தயாரித்தார். இந்த படம், இதுவரை, 15 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, வெற்றிப் படமாகி உள்ளது.
இதனால், அடுத்தடுத்து சின்ன பட்ஜெட்டில், 'ஹிட்' படங்களைத் தயாரிப்பதற்காக, சில இளவட்ட இயக்குனர்களை அழைத்து, தீவிரமாக கதை கேட்கத் துவங்கியுள்ளார், சவுந்தர்யா.
— எலீசா
மகனுக்காக, 'ரிஸ்க்' எடுக்க விரும்பாத, விஜய் சேதுபதி!
நடிகர், விஜய் சேதுபதியின் மகன், சூர்யா சேதுபதி நடித்து வெளியான, பீனிக்ஸ் வீழா ன் என்ற தமிழ் படம், சென்ற ஆண்டு வெளிவந்து படுதோல்வி அடைந்தது. அடுத்தபடியாக அவருக்கு புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு எதுவும் வரவில்லை. இந்நிலையில், சூர்யா சேதுபதியிடம், கதை சொன்ன இயக்குனர் ஒருவர், அவரை நடிக்க வைத்து படம் எடுக்க, சரியான தயாரிப்பாளர் கிடைக்காததால், விஜய் சேதுபதியிடமே வந்து, 'உங்கள் மகன் படத்தை நீங்களே தயாரியுங்கள்...' என்று வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் அவரோ, 'என் மகன் இப்போதே, 'ஹீரோ'வாக வெற்றி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர் நன்றாக நடிப்பை கற்று அதன்பின், 'ஹீரோ' ஆகட்டும். அவசரப்பட்டு அவரை வைத்து படம் தயாரித்து, அந்த படம் தோல்வி அடைந்தால், 'தோல்வி பட நடிகர்' என்று முத்திரை குத்தி விடுவர்...' என்று மகனை வைத்து, படம் தயாரிக்க மறுத்து விட்டார், விஜய் சேதுபதி.
— சினிமா பொன்னையா
கருப்புப் பூனை!
தன், மூத்த மகள் காதலித்த அந்த காமெடி நடிகரின் மகனுக்கே திருமணம் செய்து வைத்தார், ஆக்ஷன் கிங் நடிகர்.
திருமணத்திற்கு பிறகும் மற்ற, 'ஹீரோ'களுடன் தன் மனைவி, 'டூயட்' பாடுவது காமெடி நடிகர் மகனுக்கு பிடிக்கவில்லை. அதனால், 'திருமணத்திற்கு பிறகும் எதற்காக நடிக்க வேண்டும்...' என்று, வூட்டுக்கார அம்மணியுடன் மல்லுக்கட்டி வருகிறார்.
ஆனால் நடிகையோ, 'சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பது என் பெருங்கனவு. அதனால், எக்காரணம் கொண்டும் நடிப்பை விட மாட்டேன். 'அட்ஜஸ்ட்' பண்ணி, என்னுடன் குடும்பம் நடத்துவதாக இருந்தால் இருக்கலாம். இல்லை என்றால், என் வீட்டை விட்டு வெளியேறி விடலாம்...' என்று கணவருக்கு, 'வார்னிங்' கொடுத்து விட்டார்.
இதனால், 'இந்த காதல் ஜோடி எப்போது வேண்டுமானாலும் கத்தரித்துக் கொண்டு ஓட்டம் பிடித்து விடுவர்...' என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கின்றனர்.
சினி துளிகள்!
* நடிகர், தம்பி ராமையாவின் மகன், உமாபதியை திருமணம் செய்த நடிகர், அர்ஜுனின் மகள், ஐஸ்வர்யா, சீதா பயணம் என்ற படத்தில் நடித்ததை அடுத்து, மேலும் ஒரு படத்தில், 'ஹீரோயின்' ஆக நடிக்கப் ஒப்பந்தமாகியுள்ளார்.
* கராத்தே பாபு படத்தில் நடிகர், ரவி மோகனுக்கு ஜோடியாக, தவ்தி ஜிவால் என்ற புதுமுக நடிகை நடித்துள்ளார். இவர், தமிழகத்தில் முன்பு, டி.ஜி.பி.,யாக இருந்த, சங்கர் ஜிவாலின் மகள்.
* 'ரோலக்ஸ் டேட் ஜஸ்ட் 41' என்ற ஒரு வாட்சை கையில் அணிந்தபடி, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் நடிகை, பூஜா ஹெக்டே. இதன் விலை, 21 லட்சம் ரூபாய்.
அவ்ளோதான்!

