
'ரிஸ்க்' எடுக்கும், ஜி.வி.பிரகாஷ்குமார்!
படங்களுக்கு இசையமைப்பதோடு, இன்னொரு பக்கம், 'ஹீரோ'வாகவும் நடித்து வருகிறார், இசையமைப்பாளர், ஜி.வி.பிரகாஷ்குமார். இருப்பினும், இன்னும் அவரால் முன்னணி நடிகராக வர முடியவில்லை. இதன் காரணமாக, தற்போது தன்னை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் கதைகளை தேர்வு செய்ய துவங்கியுள்ளார்.
தன்னை வைத்து, அது போன்ற கதை கொண்ட படங்களை தயாரிக்க, தயாரிப்பாளர்கள் யாரும் முன்வராத பட்சத்தில், தானே தயாரிப்பாளராக உருவெடுக்கவும் முடிவு செய்துள்ளார். அதன் முதல் கட்டமாக, தற்போது இயக்குனர், செல்வராகவன் இயக்கத்தில், மெண்டல் மனதில் என்ற படத்தை தானே தயாரித்து, 'ஹீரோ'வாக நடித்து வருகிறார், ஜி.வி.பிரகாஷ்குமார்.
—சினிமா பொன்னையா
புடவை வியாபாரத்தில் தீவிரமடைந்த, சினேகா!
திருமணமாகி குழந்தை பிறந்த பின், மீண்டும் நடிக்க வந்தார் நடிகை, சினேகா. அப்படி அவர் நடித்த சில படங்களும் சரியாக ஓடவில்லை. அதனால், அவர் எதிர்பார்த்தபடி, பட வாய்ப்புகள் வரவில்லை. இதனால், சொந்தமாக சென்னையில் அவர் நடத்தி வரும் புடவை கடையில், கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். நடிகையர் விரும்பக்கூடிய, புதுப்புது டிசைன் புடவைகளை வாங்கி வந்து கடையில் குவித்துள்ளார்.சினிமா மட்டுமின்றி, சின்னத்திரை நடிகையரும், சினேகாவின் கடையை நோக்கி படையெடுக்கின்றனர்.
இதனால், 'செகன்ட் இன்னிங்ஸில்' சினிமாவில் சம்பாதிக்க முடியாததை, தற்போது தன் புடவை கடை மூலம் பெரிய அளவில் சம்பாதித்து வருகிறார், சினேகா.
— எலீசா
மமீதா பைஜூவின் அடுத்த, 'டார்கெட்' அஜித்குமார்!
நடிகர், பிரதீப் ரங்கநாதனுடன், டியூட் என்ற தமிழ் படத்தில் நடித்து பிரபலமான நடிகை, மமீதா பைஜு, அதையடுத்து, ஜனநாயகன் படத்தில், விஜய்யுடன் நடித்தவர், தற்போது தனுஷுடன், கர என்ற படத்திலும் நடித்து வருகிறார். 'அடுத்தபடியாக, அஜித்துடன் நடிக்க வேண்டும் என்பதே என், 'டார்கெட்'டாக உள்ளது. அவருக்கு ஜோடியாக, 'டூயட்' பாடும், 'ஹீரோயின்' வேடம் இல்லை என்றாலும், அவர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கூட நான் தயாராக இருக்கிறேன்...' என்கிறார்.
—எலீசா
இரண்டாம் பாகங்களில் நடிக்கும், பிரதீப் ரங்கநாதன்!
தன் நடிப்பில், 100 கோடி ரூபாய் வசூலித்த படங்களின், இரண்டாம் பாகங்களில் நடிக்க தயாராகி வருகிறார் நடிகர், பிரதீப் ரங்கநாதன். தற்போது, டிராகன் தமிழ் படத்தின், இரண்டாம் பாகத்தில் நடிக்கப் போவதை உறுதி செய்திருக்கும் அவர் அடுத்தபடியாக, டியூட் தமிழ் படத்தின், இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுதுமாறு அப்பட, இயக்குனரிடம் கூறியுள்ளார்.
அதேபோல், ஏற்கனவே தான் இயக்கி நடித்த, லவ் டுடே தமிழ் படத்தின், இரண்டாம் பாகத்தையும் தானே இயக்கி, நடிக்க, 'ஸ்கிரிப்ட்' எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளார், பிரதீப் ரங்கநாதன்.
—சினிமா பொன்னையா
கருப்பு பூனை...
* தளபதி நடிகருடன் இணைத்து கிசுகிசுவில் சிக்கியுள்ள, மூனுஷா நடிகை, தற்போது நடிகரின் வூட்டுக்கார அம்மணியும், கோர்ட்டு கேஸ் என்று போய் விட, கடும், 'அப்செட்'டில் உள்ளார். இதனால், தற்போது அனைத்து பாய் பிரண்டுகளையும் சந்திப்பதை அடியோடு நிறுத்தி விட்ட, அம்மணி, மன உளைச்சல் காரணமாக வெளிநாடு பறந்து விட்டார். தளபதியுடன் தான் காட்டும் நெருக்கத்தை, தளபதியின் மனைவி நீதிமன்றம் வரை கொண்டு சென்று, அசிங்கப்படுத்தி விடுவாரோ என்கிற பீதியில், திரைமறைவில் சிலர் மூலம் அவருடன் சமாதானம் பேசும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறுகின்றனர்.
* அடுத்த படத்திற்காக, தன்னிடம் கதை சொல்லி, ஓ.கே., செய்து வைத்திருந்த, மணியான இயக்குனரை மலை போல் நம்பி இருந்தார், சீயான் நடிகரின் வாரிசு. ஆனால் அவரோ, கடைசியாக இயக்கிய படம் தன்னை அதளபாதாளத்தில் தள்ளி விட்டதால், மீண்டும் புதியவர்களை நம்பி, 'ரிஸ்க்' எடுக்க வேண்டாம் என்று திடீரென்று, 'மார்க்கெட்' உள்ள ஒரு, 'ஹீரோ' பக்கம் சாய்ந்து விட்டார். இதனால், மணியான இயக்குனர் தனக்கு அழைப்பு விடுப்பார் என்று மாதக்கணக்கில் காத்திருந்த, சீயான் நடிகரின் வாரிசு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். அதோடு, 'இப்போதுதான் என் மகன், முன்னேறி வருகிறான். இந்த நேரத்தில், அவனை வேறு இயக்குனர் படத்திலும் ஒப்பந்தமாகாதபடி காத்திருக்க வைத்து, இப்படி கீழே தள்ளி விடுகிறாரே. இதுதான் பெரிய மனுஷனுக்கு அழகா?' என்று மணியானவரை கடுமையாக விமர்சித்து வருகிறார், சீயான் நடிகர்.
சினி துளிகள்!
* பைசன் படத்திற்கு பின் இயக்குனர், மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிப்பதற்கு காத்திருந்த நடிகர், துருவ் விக்ரம், தற்போது அந்த படம், நடிகர், விஜய்சேதுபதிக்கு சென்று விட்டதால், வேறு சில இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார்.
* தெலுங்கு நடிகர், சிரஞ்சீவியுடன் தற்போது தான் நடித்துள்ள, விஸ்வாம்பரா என்ற தெலுங்கு படம், தெலுங்கு பட உலகில் மீண்டும் தனக்கு, 'மார்க்கெட்'டை உருவாக்கும் என்று எதிர்பார்க்கிறார், த்ரிஷா
* சமூக வலைதளங்களில், நடிகையர் குறித்து போலி ஆபாச படங்களை, வெளியிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, 'சைபர் கிரைம்' துறையினரிடம் கேட்டுள்ளார் மலையாள நடிகை, அனுபமா பரமேஸ்வரன்.
* 'ரஜினி நடிக்கும், 'ஆக்ஷன்' படங்களை விரும்பி பார்ப்பேன்...' என்று தெரிவித்துள்ளார், கேரள முதலமைச்சர், பினராயி விஜயன்.
அவ்ளோதான்!

