
மீண்டும் வக்கீல் வேடத்தில், வடிவேலு!
காமெடி நடிகரான, வடிவேலு, மாமன்னன் படத்தில், தன் வித்தியாசமான, 'சீரியஸ்' நடிப்பால் அனைவர் பாராட்டையும் பெற்றவர் தற்போது, போர் முழக்கம் என்ற ஒரு புதிய படத்தில், 'சீரியஸ்' வக்கீல் வேடத்தில் நடிக்க போகிறார். ஏற்கனவே, எல்லாம் அவன் செயல் என்ற படத்தில், வண்டு முருகன் கதாபாத்திரத்தில் காமெடி வக்கீலாக நடித்தவர், இந்த புதிய படத்தில் சீரியஸான வக்கீலாக நடித்து, தன் அதிரடியான வாதத் திறமையால், நீதிமன்றத்தையே அதிர வைக்க போகிறாராம்.
- சினிமா பொன்னையா
ஆக்ஷனுக்கு மாறும், ஸ்ரீ லீலா!
பெரும்பாலும் இயக்குனர்கள் தன்னை, 'ரொமான்டிக்' வேடங்களுக்கு மட்டுமே பயன்படுத்தி வரும் நிலையில், தற்போது, 'ஆக்ஷன்' வேடங்களில் கவனத்தை திருப்பி உள்ளார் தெலுங்கு நடிகை, ஸ்ரீ லீலா. அந்த வகையில், ஹிந்தியில் தான் ஒப்பந்தமாகியுள்ள ஒரு புதிய படத்தில் அதிரடி, 'ஆக்ஷன் ஹீரோயின்' ஆக களமிறங்கும், ஸ்ரீலீலா, அதற்காக ஹிந்தி படங்களில் ஸ்டன்ட் மாஸ்டராக வேலை செய்தவரை நியமித்து, தீவிர சண்டை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக, 'மெகா ஆக்ஷன் ஹீரோ'களே மிரண்டு போகும் அளவுக்கு இந்த படத்தில், அதிரடி காட்டப்போவதாக கூறி, 'கிளுகிளு' ஆட்டம் பாட்டத்தை படிப்படியாக குறைக்கவும் திட்டமிட்டுள்ளார்.
— எலீசா
ரஜினி--கமல் படத்தில், பிரியங்கா மோகன்!
இயக்குனர், நெல்சன் இயக்கிய, டாக்டர் என்ற தமிழ் படத்தின் மூலம், நடிக்க வந்த கன்னட நடிகை, பிரியங்கா மோகன், ரஜினி-, கமல் நடிப்பில், நெல்சன் இயக்கயிருக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். 'இந்த படத்தின் கதை என்ன, எனக்கான ரோல் என்ன என்று ஒரு வார்த்தை கூட நான் கேட்கவில்லை. ரஜினி-, கமல் என்ற மிகப்பெரிய ஜாம்பவான்கள் மீண்டும் இணைந்து நடிக்கும் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும், அதுவே பெருமையான விஷயம் என்பதால், இந்த படத்தில் எப்படிப்பட்ட வேடம் கொடுத்தாலும் நடிக்க தயார் என்று ஒப்பந்தமாகி விட்டேன்...' என்கிறார், பிரியங்கா மோகன்.
— எலீசா
பின்வாங்கும், இயக்குனர்கள்!
கார் ரேஸில் தீவிரம் காட்டி வரும் நடிகர், அஜித்குமார், கடைசியாக நடித்த, குட் பேட் அக்லி படம் திரைக்கு வந்து ஓராண்டாகும் நிலையில் தன், 64வது படமான அடுத்த படத்தை இன்னும் தொடங்கவே இல்லை.
இதனால், அந்த படத்திற்கு பின், அவரை வைத்து படம் இயக்க இருந்த இயக்குனர்கள், வெங்கட் பிரபு மற்றும் சிறுத்தை சிவா, 'இவரை நம்பினால் ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டும்...' என்று சொல்லி, தற்போது, அஜித் படத்தை இயக்கும் முயற்சியை கிடப்பில் போட்டுவிட்டு வேறு நடிகர்களிடம் கதை சொல்லி,'கால்ஷீட்' கேட்டு வருகின்றனர்.
— சினிமா பொன்னையா
கறுப்புப் பூனை!
அமரன் நடிகர், உலக நடிகர் தயாரித்த படத்தில் நடித்தபோது, படக்கூலி விவகாரத்தில் ரொம்ப மோசம் செய்து விட்டாராம், உலக நடிகர். பேசியதில் பாதி கூட கொடுக்கவில்லையாம். இதனால், உஷாராகி விட்ட, அமரன் நடிகர், தற்போது மீண்டும் உலக நடிகர் கம்பெனியில் தான் நடிக்கும் படத்திற்காக, தன் மேனேஜரை வைத்து படக்கூலியை கறாராக பேசிவிட்டார்.
குறிப்பாக, கடந்த படத்தில் நடித்தபோது விட்ட தொகையையும் சேர்த்து இந்த படத்தில் எடுத்து விட வேண்டும் என்பதற்காக ஒரு பெரிய தொகையை தன் சம்பளமாக சொல்லி, உலக நடிகருக்கு பேரதிர்ச்சி கொடுத்திருக்கிறார், அமரன் நடிகர். இதனால், ஏற்கனவே அவரிடம் டபாய்த்ததையும் சேர்த்து வட்டியும் முதலுமாக கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார், உலக நடிகர்.
*****
மாநில அரசு மட்டுமின்றி, மத்திய அரசையும், 'அட்டாக்' செய்து, தளபதி நடிகர் நடித்துள்ள கடைசி படத்துக்கு சென்சார் போர்டு, 'செக்' வைத்த நிலையில், அதை எதிர்த்து நீதிமன்றத்திற்கு போன தளபதி நடிகருக்கு சிக்கல் மேல் சிக்கல் ஏற்பட்டது. இதனால், கடைசியில் தணிக்கை குழுவிடம், சரண்டர் ஆன பட குழுவுக்கு மேலும் மிகப்பெரிய அதிர்ச்சி கொடுக்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளதாம்.
அதாவது, அப்படத்தில் அரசியல் கட்சிகளை தோலுரிக்கும் வகையில் , தளபதி நடித்த காட்சிகளை கத்தரித்து விட்டனர். இதனால், கடும் கோபத்துக்கு ஆளான, தளபதி நடிகர், 'என்னை திட்டம் போட்டு பழிவாங்கியவர்களை பழிக்கு பழி வாங்காமல் விடவே மாட்டேன்...' என்று ஆவேசத்தில் கொந்தளித்து வருகிறார்.
சினி துளிகள்!
* விஜய் நடித்துள்ள, ஜனநாயகன் படம் கோடை விடுமுறையில் திரைக்கு வர உள்ளது.
* அமரன் படத்தை அடுத்து, நடிகர், கமலஹாசனின், 'ராஜ்கமல் பிலிம்ஸ்' தயாரிப்பில் நடிகர், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு, சேயோன் என்று, 'டைட்டில்' வைக்கப்பட்டுள்ளது.
* மலையாளத்தில், ஆரம்பம் என்ற படத்தில் அறிமுகமாகியுள்ள நடிகை, குஷ்புவின் இளைய மகள், அவந்திகா, தமிழில், டபுள் ஆக்குபன்சி என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
அவ்ளோதான்!

