PUBLISHED ON : ஜூன் 14, 2026

ஷங்கரை கைவிட்ட முன்னணி, 'ஹீரோ'கள்!
இந்தியன்-2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய தமிழ் படங்களின் தோல்விக்கு பிறகு, 'வேள்பாரி' என்ற சரித்திர நாவலை படமாக்க திட்டமிட்டார் இயக்குனர், ஷங்கர். இதற்காக கோலிவுட் மட்டுமின்றி, பாலிவுட் வரை சில முன்னணி நடிகர்களிடம், 'கால்ஷீட்' கேட்டார்.
ஆனால், அவரது இயக்கத்தில் நடிக்க யாருமே முன்வரவில்லை. இதனால், 'வேள்பாரி' கதையை கிடப்பில் போட்டுவிட்டு, ஒரு, 'திரில்லர்' கதையை, இரண்டு இளவட்ட, 'ஹீரோ'களை நடிக்க வைத்து, இயக்க திட்டமிட்டுள்ளார், ஷங்கர்.
— சினிமா பொன்னையா
ரசிகர்களை கடவுளாக பார்க்கும், பூஜாஹெக்டே!
பீஸ்ட் என்ற தமிழ் படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடித்த, பூஜாஹெக்டே, மீண்டும் விஜயுடன், ஜனநாயகன் படத்திலும் நடித்திருந்தார். 'சோஷியல் மீடியா'வில், ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வரும், பூஜாஹெக்டே, 'எப்போதுமே ரசிகர்கள் எனக்கு, கடவுள் போன்றவர்கள். அவர்கள் என்னையும், என் நடிப்பையும் ரசிப்பதால் தான், நான் சினிமாவில் நீடித்து இருக்கிறேன். மேலும், 'சோஷியல் மீடியா'வில் ரசிகர்களுடன் கலந்துரையாடுவதை நான் பெருமையாக நினைக்கிறேன்; அவர்களுடன் அதிக நேரத்தை செலவிடுகிறேன்...' என்கிறார், பூஜா ஹெக்டே.
— எலீசா
'இமேஜ்' பார்க்காத, மமிதா பைஜு!
தற்போது, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகி இருக்கும், மலையாள நடிகை, மமிதா பைஜூ, கர என்ற தமிழ் படத்தில், ராமநாதபுரம் கிராமத்து பெண்ணாக நடித்திருந்தவர், அடுத்தபடியாக மதுரை, திருநெல்வேலி என்று வட்டார வழக்கு கதைகளில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறுகிறார். அதுமட்டுமின்றி, 'எந்த மாதிரியான கதாபாத்திரமாக இருந்தாலும், நான், 'இமேஜ்' பார்ப்பதில்லை. எப்படிப்பட்ட அடிமட்ட பெண்ணாகவும், பாதிக்கப்பட்ட பெண்ணாகவும் கூட நடிக்க தயாராக இருக்கிறேன்...' என்கிறார், மமிதா பைஜூ.
— எலீசா
விஜய் சேதுபதி கொடுத்த, 'ஷாக்!'
மீண்டும், விஜய் சேதுபதியின், 'மார்க்கெட்' சூடு பிடித்திருக்கும் நிலையில், பல முன்னணி தயாரிப்பாளர்கள் அவரை அணுகி, 'கால்ஷீட்' கேட்டனர். அதற்கு அவரோ, 'முதலில் உங்கள் படத்தை இயக்குவது யார்? எந்த மாதிரி கதை? என்பதை சொல்லுங்கள். கதையும், இயக்குனரும் எனக்கு பிடித்தால் மட்டுமே, அந்த படத்தில் நடிப்பேன். பெரிய நிறுவனம் என்பதற்காக, பிடிக்காத கதைகளில் ஒருபோதும் நடிக்க மாட்டேன்...' என்று, தன் நிலைப்பாட்டை தெரிவித்து விட்டார், விஜய் சேதுபதி.
அதனால், பெரிய கம்பெனி என்பதால், தங்களுக்கு உடனடியாக, 'கால்ஷீட்' கொடுத்து விடுவார், விஜய் சேதுபதி என்று எதிர்பார்த்த, தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்திருப்பதோடு, முதற்கட்டமாக அவருக்காக வித்தியாசமான கதை தேடலில் ஈடுபட்டு வருகின்றனர்.
— சினிமா பொன்னையா
கருப்புப் பூனை!
தளபதி நடிகரின் வாரிசு இயக்கியுள்ள மூன்றெழுத்து படம் திரைக்கு வர உள்ள நிலையில், படம் திரைக்கு வரும்போது, 'உங்கள் தந்தைகுலத்துக்கு போட்டு காண்பித்து, அவர் சொல்லும் கருத்துக்களை வெளியிட்டு, 'பப்ளிசிட்டி' செய்யுங்கள். படம் மிகப்பெரிய அளவில், 'ஹிட்' அடிக்கும்...' என்று, சிலர் அவரை அறிவுறுத்தினர். அதற்கு தளபதியின் வாரிசு, 'நான் இயக்கும் படத்தை துவங்கியபோது யார் யாரெல்லாமோ வாழ்த்தினர். ஆனால், அவர் என்னை வாழ்த்தவில்லை. அப்படிப்பட்டவர் படம் திரைக்கு வரும்போது மட்டும் எப்படி வாழ்த்துவார். அதோடு, என்னுடைய தனி திறமையை வைத்து தான் சினிமாவில் வெற்றி பெற விரும்புகிறேன். தந்தையின் நிழலில் நிற்க நான் விரும்பவில்லை. அவர் இல்லாமல் இதே சினிமாவில் நான் வெற்றி பெற்று காட்டுவேன்...' என்று கூறிவிட்டார், தளபதியின் வாரிசு.
*****
தன் கணவர் இயக்கும் படங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் அந்த படங்களை தயாரிப்பதை தவிர்த்து வந்த, தாரா நடிகை, சமீபத்தில் அவரது இயக்கத்தில் வெளியான ஒரு படத்தை தயாரித்து நஷ்டத்தை சந்தித்திருக்கிறார். குறிப்பாக, ஒரு நிறுவனத்துடன் சேர்ந்து அந்த படத்தை தயாரித்த நிலையில், நஷ்ட கணக்கில் பெரும் பங்கை, தாராவின் தலையில் கட்டி விட்டனர். இதனால், கணவர் மீது கொலவெறியில் இருந்து வரும், அம்மணி, 'இனிமேல் நீங்கள் இயக்கும் எந்த படத்தையும் நான் தயாரிக்க மாட்டேன்...' என்று கணவரிடம் திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனால், தன் அடுத்த படத்திற்கு தயாரிப்பாளர் கிடைக்காமல் தடுமாறி வருகிறார், தாராவின் ஆத்துக்காரர்.
சினி துளிகள்!
* சில படங்களில் வில்லனாக நடித்த அர்ஜுன், இனிமேல், கதாநாயகனாக மட்டுமே நடிக்க முடிவெடுத்துள்ளார்.
* ஜி.வி.பிரகாஷ் நடித்த, இம் மார்ட்டல் என்ற தமிழ் படத்தை, இயக்குனர், மாரியப்பன் சின்னா இயக்கியுள்ளார். டிராகன் தமிழ் படத்தில் நடித்த, கயாடு லோஹர் நாயகியாக நடித்துள்ளார்.
* விஜயின் மகனான, ஜேசன் சஞ்சய் இயக்கி உள்ள, சிக்மா என்ற தமிழ் படம் ஜூலை மாதம் திரைக்கு வர உள்ளது.
* சமீபத்தில், தன் இயக்கத்தில் வெளியான, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம், 200 கோடி ரூபாய் வசூலிக்கும் என்று எதிர்பார்த்தார், விக்னேஷ் சிவன். ஆனால், அந்த படம், 70 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருப்பதால் கடும், 'அப்செட்'டில் இருக்கிறார்.
அவ்ளோதான்!
