PUBLISHED ON : ஜூன் 28, 2026

'கெட்-அப்'பை மாற்றும், தனுஷ்!
இட்லி கடை படத்தை அடுத்து, இயக்குனர், ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார், தனுஷ். இந்த படம், உளவாளி சம்பந்தப்பட்ட, 'திரில்லர்' கதையில் உருவாகிறது. இந்த கதாபாத்திரத்திற்காக, தன் தலைமுடி மட்டுமின்றி மீசை மற்றும் தாடியையும் புதிய கோணத்தில் வடிவமைத்திருப்பவர், தன், 'பாடி லாங்குவேஜை'யும் பக்காவாக மாற்றி, முற்றிலும் புதிய தோற்றத்திற்கு மாறியுள்ளார், தனுஷ்.
— சினிமா பொன்னையா
தீபிகாவை முந்த, ராஷ்மிகா திட்டம்!
திருமணத்திற்கு பின், 'ஹீரோயினி'களாகவே நடித்து வரும், நயன்தாரா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவருமே, சம்பளத்தை படத்துக்கு படம் உயர்த்திக் கொண்டே இருக்கின்றனர்.
குறிப்பாக, நயன்தாரா தற்போது, ஹிந்தி நடிகர், சல்மான் கானுடன் நடிக்கும் ஹிந்தி படத்திற்கு, 10 கோடி ரூபாய் சம்பளம் பேசியுள்ள நிலையில், ராஷ்மிகா மந்தனாவோ அடுத்து நடிக்கப் போகும் ஒரு புதிய படத்துக்கு, 15 கோடி ரூபாய் சம்பளம் பேசி இருக்கிறார்.
இந்த படம், 'ஹிட்' அடித்தால், ஹிந்தி நடிகை, தீபிகா படுகோனேவை, 'டார்கெட்'டாக வைத்து, அடுத்தடுத்து தன் படக்கூலியை பன்மடங்கு உயர்த்தவும் திட்டமிட்டுள்ளார், ராஷ்மிகா.
— எலீசா
ஹிந்தி படவுலகில் காலுான்றும், கீர்த்தி சுரேஷ்!
திருமணத்திற்கு முன், பேபி ஜான் என்ற ஹிந்தி படத்தில் நடித்த, கீர்த்தி சுரேஷுக்கு அந்த படம் வெற்றியை தரவில்லை. தற்போது, திருமணத்திற்கு பின், ரப்தார் என்ற ஹிந்தி படத்தில் நடித்திருக்கும், கீர்த்தி சுரேஷ், 'முந்தைய படத்தில் விட்ட வெற்றியை இந்த படத்தில் கண்டிப்பாக கைப்பற்றி விடுவேன். முதல் ஹிந்தி படத்தில் கிளாமராக நடித்த நான், இந்த படத்தில், 'பர்பாமன்ஸ்' நடிகையாக என் தனித் திறமையை வெளிப் படுத்தியிருக்கிறேன்...' என்கிறார்.
— எலீசா
துப்பறிவாளன் - 2 வை துாசு தட்டும், விஷால்!
தற்போது, மகுடம் என்ற படத்தை, முதல் முறையாக இயக்கி, நடித்துள்ள, விஷால், 'நெகட்டீவ் ரோலில்' தன்னை புதிய கோணத்தில் வெளிப்படுத்தியுள்ளார். மேலும், இந்த படத்தை அடுத்து, 'ஏற்கனவே, நான் இயக்குவதாக திட்டமிட்டு இருந்த, துப்பறிவாளன்- 2 படத்தையும், இயக்கி, நடிக்கப் போகிறேன். அதோடு, அடுத்தடுத்து நான் இயக்கி, நடிக்கும் படங்கள் அனைத்தையுமே இளைஞர்களை கவரக்கூடிய அதிரடி, 'ஆக்ஷன்' கதைகளில் எடுக்கவே திட்டமிட்டுள்ளேன்...' என்கிறார், விஷால்.
— சினிமா பொன்னையா
கருப்புப் பூனை!
சார்பட்டா நடிகைக்கு, புது படங்கள் எதுவும் ஒப்பந்தமாகவில்லை. அதோடு முன்னணி, 'ஹீரோ'கள் யாரும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவும் தயாராக இல்லை. இதனால், 'மார்க்கெட்' முழுவதுமாக காலியாவதற்கு முன், ஏதேனும் புளியம் கொம்பு சினிமா புள்ளிகளை வளைத்து போட்டு, திருமண பந்தத்தில் நுழைந்து விட திட்டமிடுகிறார், அம்மணி. அதற்காக, உச்சத்தில் இருக்கும், 'ஹீரோ' ஒருவரை மேற்படி நடிகை துரத்தி வருவதாகவும், இருவரும் அடிக்கடி ரகசிய சந்திப்புகள் நடத்தி வருவதாகவும் கோலிவுட்டில் ஒரு செய்தி, பரவி வருகிறது.
****
தன் முதல் இரண்டு படங்களும், 'அட்டர் பிளாப்'பான நிலையில், மூன்றாவதாக ஒரு, 'ஹிட்' படத்தை கொடுத்த, சீயான் நடிகரின் வாரிசு, தற்போது புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
ஆரம்பத்தில் இந்த படத்தின் கதையில் எந்த திருத்தமும் செய்யாதவர், படப்பிடிப்பு துவங்கும் நேரத்தில் பல காட்சிகளை மாற்றுமாறு இயக்குனருக்கு உத்தரவு போட்டு இருக்கிறார். குறிப்பாக, தன், 'ஹீரோயிசத்தை' பெரிய அளவில் வெளிப்படுத்தக்கூடிய, 'பில்டப்' காட்சிகள், 'ஓப்பனிங்'கில் இருந்து, 'எண்டு கார்டு' போடும் வரை படம் முழுக்க இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதற்கு இயக்குனர் மறுக்கவே நடிகருக்கும், அவருக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.
இதனால், இந்த படத்திற்கு வேறு நடிகரை, 'புக்' பண்ணி விடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார், இயக்குனர். இதை அறிந்த, சீயான் நடிகர் குறுக்கிட்டு, 'இன்னும் உனக்கென்று எந்த ரசிகர் வட்டமும் உருவாகவில்லை. அதனால், இப்போது உனக்கு, 'பில்டப் சீன்'கள் எதுவும் தேவையில்லை...' என்று மகனுக்கு புரியும் வகையில், 'அட்வைஸ்' கொடுத்து, மகனை சமாதானப்படுத்தியுள்ளார்.
சினி துளிகள்!
* பைசன் தமிழ் படத்தை அடுத்து, துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் தமிழ் மற்றும் தெலுங்கு என, இரண்டு மொழிகளில் உருவாகிறது.
* ரஜினியின், ஜெயிலர் -2 தமிழ் படத்தில் ஒரு, 'கெஸ்ட் ரோலில்' நடிக்க இருந்த, ஹிந்தி நடிகர், ஷாருக்கான், அப்படத்தில் இருந்து விலகிய நிலையில், தற்போது அதேவேடத்தில் இன்னொரு, ஹிந்தி நடிகரான, ஹிருத்திக் ரோஷன் நடிக்கப் போகிறார்.
* விஜயின் கடைசி படமான, ஜனநாயகன் படத்தை இயக்கிய, எச்.வினோத் அடுத்து, சூர்யா நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார்.
* மகுடம் படத்தில் விஷாலுடன் நடித்துள்ள, துஷாரா விஜயன், இப்படத்தில், அஞ்சலியை ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வைத்து தன்னை, 'டம்மி' பண்ணி விட்டதாக கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்.
அவ்ளோதான்!
