PUBLISHED ON : ஜூலை 05, 2026

ரஜினி பாணிக்கு மாறிய, தனுஷ்!
தனுஷ் நடிக்கும், 55வது தமிழ் படத்திற்கு, ஓம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் அதிரடியான, 'ஆக்ஷன்' கதையில் உருவாகிறது. கடந்த காலங்களில், ரஜினி நடித்த படங்களில், ஆக்ஷனுக்குள் ஆன்மிகம் கலந்த காட்சிகளும் இடம் பெற்றதைப் போன்று, இப்படத்திலும், இடம் பெற இருக்கிறதாம். அதோடு, இந்த படத்தின் கிளைமேக்சில் முதிர்ச்சியான, 'கெட்-அப்'பில் தோன்றும் தனுஷ், 'இந்த கதை என்னை ரொம்பவே, 'இம்ப்ரஸ்' பண்ணி விட்டது. முக்கியமாக மனித உணர்வுகளையும், ஆன்மிக உணர்வுகளையும் கலந்த கலவையாக உருவாக இருப்பதால், இப்படம் ரசிகர்களுக்கு மனதளவில் சிலிர்ப்பை கொடுக்கும்....' என்கிறார்.
— சினிமா பொன்னையா
சாய் பல்லவி, 'ஷாக்!'
சாய்பல்லவியை பொறுத்தவரை, ஒரு நடிகரின் நடிப்பு தன்னை கவர்ந்து விட்டால், அதை வெளிப்படையாக சொல்லி, அவர்களை புகழ்ந்து பேசுவார். அப்படி, தனுஷ் மற்றும் தெலுங்கு நடிகர், நாக சைதன்யாவின் நடிப்பை அவர் பெருமையாக பேசியதை வைத்து, 'பட வாய்ப்புகளுக்காக தான் இப்படி நடிகர்களை இவர் புகழ்ந்து பேசுகிறார்...' என்று சில ஊடகங்கள் செய்தி பரப்பி விட்டன.
இதை அறிந்து, கடும் கோபத்தில் இருக்கிறார், சாய்பல்லவி. 'ஒருவரின் நடிப்பை பாராட்டும் விஷயத்தை கூட, சுய ஆதாயம் தேடும் முயற்சி என்று இவர்கள் சர்ச்சையை கொளுத்தி போடுவது வேதனையாக உள்ளது...' என்று ஊடகங்களை சாடுகிறார், சாய் பல்லவி. மேலும், 'இனிமேல் வெளிப்படையாக கருத்து சொல்வதை அடியோடு தவிர்க்கப்போகிறேன்...' என்கிறார்.
— எலீசா
'ட்ரெண்டிங்'காகும், த்ரிஷா!
முதலமைச்சர், விஜயின் பதவி ஏற்பு விழா அன்று புடவை, 'கெட்-அப்'பில், த்ரிஷா கலந்து கொண்ட நிலையில், அந்த புடவை, சமூக ஊடகத்தில், 'ட்ரெண்டிங்' ஆனது. இல்லத்தரசிகள் அதே போன்று புடவையை ஜவுளி கடைகளில் தேடத் துவங்கினர்.
தற்போது, த்ரிஷா மூலம் புதிய, 'பிராண்ட்' புடவைகளை விளம்பரம் செய்தால், பெண்கள் மத்தியில் பெரிய அளவில், 'ரீச்' ஆகிவிடும் என்பதை தெரிந்து கொண்ட ஜவுளிக்கடைக்காரர்கள், தங்களது கடைகளுக்கு வரும் புதிய, 'பிராண்ட்' புடவைகளை, த்ரிஷாவை அணிய வைத்து, 'பப்ளிசிட்டி' செய்ய துவங்கி விட்டனர்.
அதனால், தன், 'சோஷியல் மீடியா'களில் புடவைகளை விளம்பரப்படுத்துவதில் தீவிரம் காட்ட துவங்கி இருக்கிறார், த்ரிஷா.
எலீசா
கோபப்படுகிறார், கமல்ஹாசன்!
தற்போது, 71 வயதாகும், கமல்ஹாசனிடம் யாராவது, அவரது வயதை பற்றி கேட்டால், 'என்னை பொறுத்தவரை வயது என்பது ஒரு நம்பர் மட்டுமே. அதோடு நான் இளமை காலத்தில் திரைப்படங்களுக்காக எடுத்தது போன்று, இப்போதும், 'ரிஸ்க்' எடுக்க தயாராக இருக்கிறேன். வயதை காரணம் காட்டி, என் உழைப்பை ஒருபோதும் குறைத்துக்கொள்ள மாட்டேன். அதோடு, 'முன்பு மாதிரி அழுத்தமான வேடங்களில் இவரால் நடிக்க முடியுமா... அவருக்கு வயதாகி விட்டதே' என்று யாரும் தப்பு கணக்கு போடாதீர்கள். இப்போதும் சவாலான வேடங்களில் நடிக்க நான் தயார்...' என்கிறார் கமல்ஹாசன்.
— சினிமா பொன்னையா
கருப்புப் பூனை!
பல கட்சிகளுக்கு மாறி வரும், லொடுக்கு பாண்டி நடிகர், மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தபோதும் கூட, அரசியல் ஆசையும் அவரை விடவில்லை. அதனால், தளபதியின் கட்சிக்கு அடுத்து தாவி விட வேண்டுமென்று கல்லெறிந்து வருகிறார். ஆனால், தளபதியோ, 'கடந்த தேர்தலில் எனக்கு எதிரான கூட்டணியில் இடம்பெற்று என்னையும் மிக மோசமாக விமர்சித்து வந்தீர்கள். அப்படிப்பட்ட உங்களுக்கு என் கட்சியில் இடமில்லை...' என்று, லொடுக்கு பாண்டியை விரட்டி அடித்து விட்டார்.
இப்படி தளபதி நடிகர் திருப்பி அடித்ததை அடுத்து, சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு அவரை விமர்சித்து வந்த மேலும் சில சீனியர் நடிகர்களும், தளபதியின் கட்சியில் இணைவதற்கு, கல் எறிந்தால் தங்களையும் இப்படித்தான் பதிலடி கொடுத்து திருப்பி அனுப்புவார் என்று, தளபதியை சந்திக்கவே பயந்து பின்வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.
*******
சில படங்களில் காம கொடூர வேடங்களில் நடித்து சலசலப்பை ஏற்படுத்திய, பிசாசு நடிகை, அதன்பின் அந்த, 'இமேஜை' மாற்றப்போவதாக சொல்லி, 'ஹோம்லி'யான கதாபாத்திரங்களை தேடினார். ஆனால், அப்படி அவர் நடித்த எந்த கதாபாத்திரமும் அவருக்கு பேர் வாங்கி தரவில்லை; அவரது, 'மார்க்கெட்'டே காலியாகி விட்டது.
மீண்டும் சர்ச்சைக்குரிய வேடங்களில் நடிப்பதற்கு தயாராகி இருக்கும், பிசாசு நடிகை, அவசியப்பட்டால், அரை நிர்வாண காட்சி மற்றும் படுக்கையறை காட்சிகளில் நடிப்பதற்கும் தான் தயாராக இருப்பதாக சொல்லி, சில முக்கிய இயக்குனர்களுக்கு துாது அனுப்பி உள்ளார்.
சினி துளிகள்!
* தனுஷின், கர படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த, கருணாஸ், அடுத்து ஒரு படத்தில் மீண்டும் கதையின் நாயகனாக நடிக்க திட்டமிட்டு வருகிறார்.
* லீடர் படத்துக்கு பிறகு, நோ என்ட்ரி மற்றும் மனுஷி போன்ற தமிழ் படங்களில் நடித்து வருகிறார், தமிழ் நடிகையான ஆண்ட்ரியா.
அவ்ளோதான்!
