PUBLISHED ON : ஆக 02, 2026

ஜூனியர் என்.டி. ஆருக்கு போட்டியாக, தனுஷ்!
தெலுங்கு நடிகர், ஜூனியர் என்.டி.ஆர்., நடிப்பில், ஒரு புதிய தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதில், தமிழ் கடவுள் முருகனை, வட மாநிலத்தில் பிறந்தவர் போன்ற கதைக் களம் இருப்பதைக் கேள்விப்பட்டு, தனுஷின் ஆஸ்தான இயக்குனர், வெற்றிமாறன் கொதிப்படைந்து விட்டார். 'தமிழ் கடவுள் முருகனை, வட இந்தியராக சித்தரிப்பதா?' என்று, அந்தப் படம் திரைக்கு வருவதற்கு முன்பாகவே, தமிழ் முருகன் என்ற பெயரில் ஒரு படத்தை, தனுஷை வைத்து, இயக்க தயாராகி விட்டார்.
முருகனின் முழு வரலாற்று சுவடுகளையும் அதில் கொண்டு வந்து, ஆந்திராவிலும் படத்தை ரிலீஸ் செய்து, ஜூனியர் என்.டி.ஆர்., கூட்டணிக்கு அதிர்ச்சி கொடுக்கப் போகிறார், வெற்றிமாறன்.
— சினிமா பொன்னையா
மமிதா பைஜுவுக்கு, 'ஷாக்' கொடுத்த, பிரீத்தி முகுந்தன்!
தமிழில், டியூட் என்ற படத்தில் அறிமுகமானவர், மலையாள நடிகை, மமிதா பைஜு. அதைத் தொடர்ந்து, தனுஷுக்கு ஜோடியாக அவர் நடித்த, கர தமிழ் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால், 'மார்க்கெட்'டில் சற்று பின்தங்கியுள்ளார், மமிதா பைஜு. இந்த நேரத்தில், தமிழில், ஸ்டார், பிளாஸ்ட் மற்றும் இதயம் முரளி ஆகிய வெற்றி படங்களில் நடித்து, கோலிவுட்டில் வேகமாக வளரத் தொடங்கியுள்ள, பிரீத்தி முகுந்தன், மமிதா பைஜு நடிக்க பேச்சுவார்த்தையில் இருந்த இரண்டு பட வாய்ப்புகளை தன் பக்கம் இழுத்து விட்டார். இதனால், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போன அதிர்ச்சியில் இருக்கிறார், மமிதா.
— எலீசா
சினிமாவில், 'ரீ-என்ட்ரி' கொடுக்கும், ஷாலினி!
அமர்க்களம் படத்தில் நடித்தபோது, ஷாலினியை காதலித்து, கடந்த 2000-ம் ஆண்டில், திருமணம் செய்து கொண்டார், அஜித். அதன்பிறகு, சினிமாவில் நடிக்காமல் முழு நேர இல்லத்தரசியாகிவிட்ட, ஷாலினி, தற்போது, கணவர் அஜித் நடிக்கும், 64-வது படத்தின் தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்கப் போகிறார்.
அதோடு இப்படத்தில், முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில், ஷாலினியை நடிக்க வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
முதலில் நடிக்க மறுத்த ஷாலினி, அஜித்தின் அன்பான வற்புறுத்தலின் பேரில், 26 ஆண்டுகளுக்குப் பிறகு, 'ரீ-என்ட்ரி' கொடுக்கச் சம்மதித்துள்ளார்.
— எலீசா
கதை தேடும், விஜய் சேதுபதி!
விஜய் சேதுபதி தன் மகன், சூர்யா சேதுபதியை, பீனிக்ஸ் வீழான் என்ற தமிழ் படத்தின் மூலம், 'ஹீரோ'வாக அறிமுகப்படுத்தினார். ஆனால், அந்த படம் படுதோல்வி அடைந்தது. தற்போது, மகனை, தமிழ் 'வெப் சீரியல்'களில் நடிக்க வைத்திருக்கிறார், விஜய் சேதுபதி. மகன் நடித்த முதல் படத்தின், 'ஆக்ஷன்' கதை கவிழ்த்து விட்டதால், அடுத்தபடியாக ஒரு, 'சென்டிமென்ட்' கதையை தேர்ந்தெடுத்து, மகனின், 'மார்க்கெட்'டை உயர்த்த, சில வெற்றி பட இயக்குனர்களிடம், கதை கேட்டு வருகிறார். அந்தப் படத்தில், மகனுக்கு, 'சப்போர்ட்'டாக இருக்க, ஒரு முக்கிய, 'கெஸ்ட் ரோலில்' தானும் நடிக்க திட்டமிட்டுள்ளார், விஜய் சேதுபதி.
— சினிமா பொன்னையா
கருப்புப் பூனை!
ஏற்கனவே ஒரு இயக்குனர், கிரீடம் என்று அர்த்தம் தரும் நான்கு எழுத்து பெயர் கொண்ட படத்தை, சண்டகோழி நடிகரை வைத்து இயக்கி வந்த நிலையில், அவர் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து படத்தில் இருந்தே அவரை வெளியேற வைத்தார், சண்டக்கோழி நடிகர்; அதையடுத்து, தானே இயக்குனராகவும் உருவெடுத்தார். ஆனால், தற்போது அப்பட வேலைகள் முடிவடைந்து விட்ட நிலையில், படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள் திருப்தி இல்லாமல் இருப்பதோடு, 'நடிகர் படத்தை சொதப்பி விட்டார்...' என்றும் விமர்சிக்கின்றனர். இதனால், 'வெற்றி, படத்தை கொடுக்கிறேன் என்று சொல்லி, எங்களை காலி பண்ணி விட்டாயே...' என்று அப்பட தயாரிப்பாளர், சண்டக்கோழியிடம் கடும் மோதலில் ஈடுபட்டுள்ளார்.
சினி துளிகள்!
* கடந்த, 2017ல், திருட்டுப் பயலே படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கிய, சுசி கணேசன், பல ஆண்டு இடைவெளிக்குப் பின், தற்போது ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார்.
* மாமன் மற்றும் மண்டாடி தமிழ் படங்களுக்கு பின், ஆர்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கும் சூரி, அந்த படத்தில் நடிப்பதற்காக, 25 கோடி ரூபாய் சம்பளம் பேசியுள்ளார்.
* முதல் முறையாக தான் இயக்கி நடித்திருக்கும், மகுடம் படத்தில் மூன்று விதமான, 'கெட்-அப்'களில் நடித்துள்ளார், விஷால்.
* ரோஜாவின், 100-வது படமாக, பொட்டு அம்மன் வெளியாகி, 'சூப்பர் ஹிட்' அடித்த நிலையில், தற்போது சினிமாவில், 'ரீ-என்ட்ரி' கொடுத்திருக்கும் அவர், மீண்டும் அம்மன் கதாபாத்திரங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
அவ்ளோதான்!
