PUBLISHED ON : ஆக 30, 2026

அப்துல் கலாம், 'கெட்-அப்'புக்கு மாறும், தனுஷ்!
தனுஷ் நடிக்கயிருந்த, இசையமைப்பாளர், இளையராஜாவின், சுயசரிதை படம் தற்காலிகமாக தள்ளிப்போயுள்ள நிலையில் அடுத்து, முன்னாள் ஜனாதிபதி, ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்காக, தன் கைவசம் உள்ள, மூன்று படங்களையும் முடித்துவிட்டு, அப்துல் கலாம் போல தன் சிகை அலங்காரத்தை மாற்றி, முற்றிலும் அவரது மேனரிசத்துக்கு தன்னை மாற்றி நடிப்பதற்கு தயாராகி வருகிறார், தனுஷ்.
— சினிமா பொன்னையா
ஷாலினி அஜித் எடுத்த அதிரடி முடிவு!
அமர்க்களம் படத்தில், அஜித்துடன் இணைந்து நடித்த, ஷாலினி, அவரைத் திருமணம் செய்த பிறகு நடிப்பிலிருந்து விலகினார். தற்போது, அஜித் நடிக்கும் அவரது, 64-வது படமான, டேர் டெவில் என்ற தமிழ் படத்தின் தயாரிப்பாளராக, 'ரீ--என்ட்ரி' கொடுத்துள்ளார். இப்படத்தில், ஷாலினியை ஏதேனும் ஒரு, கவுரவ வேடத்தில் நடிக்க வைக்க இயக்குனர், ஆதிக் ரவிச்சந்திரன் திட்டமிட்டிருந்தார். ஆனால், ஷாலினியிடம் இதுகுறித்து பேசியபோது, 'இனி, எக்காரணம் கொண்டும் திரையில் தோன்றும் எண்ணமில்லை. திரைக்கு பின்னால் மட்டுமே என் செயல்பாடு இருக்கும்...' என, திட்டவட்டமாக கூறிவிட்டார்.
- எலீசா
அனிருத்தை பாராட்டிய, ரஜினி!
ரஜினியின் படங்களுக்கு தொடர்ந்து மிரட்டலான இசையமைத்து வரும், அனிருத், தற்போது, தர்மன் படத்திற்கும் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின், விளம்பர வீடியோவுக்கு, அனிருத் கொடுத்த பின்னணி இசை, ரஜினியை மிகவும் கவர்ந்து விட, நேரில் அழைத்து, அனிருத்தை பாராட்டியுள்ளார். இப்படத்திற்காக தான் உருவாக்கி வைத்துள்ள, 'மாஸான டியூன்'களையும் போட்டு காட்டி, ரஜினியை மேலும் வியக்க வைத்துள்ளார், அனிருத்.
— சி.பொ.,
குத்தாட்டம் போட மறுத்த, கீர்த்தி சுரேஷ்!
தெலுங்கு நடிகர், நானி நடித்து வரும் புதிய தெலுங்கு படத்தில், ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட, கீர்த்தி சுரேஷ் சம்மதம் தெரிவித்துள்ளார். அதையடுத்து, மேலும், சில, 'கமர்ஷியல்' இயக்குனர்களும் அவரை நோக்கி படையெடுத்தனர். அப்போது, 'முன்னணி, 'ஹீரோ'களுடன் என்றால் மட்டுமே ஒரு பாட்டுக்கு நடனமாடுவேன். அதோடு குத்து பாட்டு என்று சொல்லி, என்னை குட்டை பாவாடை நடிகையாக்கி விடக்கூடாது. குறிப்பாக, சமந்தா, ஸ்ருதிஹாசனை போன்றெல்லாம் அசைவம் கலந்த கெட்ட ஆட்டம் போட மாட்டேன்...' என்று சொல்லி, இயக்குனர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார், கீர்த்தி சுரேஷ்.
— எலீசா
மீண்டும் இயக்குனராகும், சசிகுமார்!
சுப்பிரமணியபுரம் மற்றும் ஈசன் தமிழ் படங்களுக்குப் பிறகு, முழுநேர நடிகரான சசிகுமார், நீண்ட இடைவெளிக்கு பின், மீண்டும் இயக்குனராகியுள்ளார். விஜயகாந்தின் மகன், சண்முக பாண்டியனை வைத்து, 'குற்றப்பரம்பரை' என்ற, 'வெப்' தொடரை இயக்கி வரும், சசிகுமார், அதை முடித்ததும், மீண்டும், மதுரையை பின்னணியாக கொண்டு, சுப்பிரமணியபுரம் படப் பாணியில், வெட்டு குத்து என்று ரத்தக்களரியான, 'ஆக்ஷன்' படத்தை இயக்கவும் திட்டமிட்டுள்ளார்.
சினிமா பொன்னையா
கருப்புப் பூனை!
'சினிமாவில் இவ்வளவு காலமும் நடித்து கல்லா மட்டுமே கட்டி வருகிறீர்கள். அதனால், இனிமேலாவது உலக நடிகரை போல நீங்களும் இளவட்ட நடிகர்களை வைத்து படம் தயாரித்து கலைச்சேவை செய்யுங்கள்...' என்று சிலர், உச்ச நடிகரிடம் கேட்டுக்கொண்டனர். அதற்கு நடிகரோ, 'நான் தயாரித்த எந்தப் படமும் எனக்கு லாபத்தை கொடுத்ததில்லை; எல்லாமே கையை கடிச்சிடுச்சி. அதனால், இனிமேல் அந்த, 'ரிஸ்க்'கெல்லாம் எனக்கு வேண்டாம் சாமி...' என, 'எஸ்கேப்' ஆகிவிட்டார்.
அதைப்பார்த்து, 'சினிமாவில் தான் சம்பாத்தித்த காசை சிந்தாமல், சிதறாமல், 10 தலைமுறைக்கும் சேர்த்து வைத்து விட வேண்டும் என்பதில் இவர் எவ்வளவு உஷாராக இருக்கிறார் பார்த்தீர்களா?' என்று சினிமாத்துறையின் அபிமானிகளே, உச்ச நடிகரை கலாய்த்து வருகின்றனர்.
*********
கல்விக் கடவுள் பெயரில், சொந்தமாக படம் தயாரித்து, இயக்கி, நடித்த நாட்டாமை நடிகரின் வாரிசு நடிகை, அந்த படம் ரிலீஸாவதற்கு முன்பே, 'இனிமேல் நான் தென்னிந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர் ஆகிவிடுவேன். அதன்பின், என் இயக்கத்தில் நடிப்பதற்கு முன்னணி நடிகர்களே நீண்ட வரிசையில் நிற்பர்...' என்று ஓவர், 'பில்டப்' கொடுத்தார். ஆனால், அந்த படமோ படுதோல்வி அடைந்து விட்டது.
அதையடுத்து இப்போது அவர் எந்த இயக்குனரிடம் சென்று வாய்ப்பு கேட்டாலும், 'நீங்களே பெரிய இயக்குனர் ஆச்சே, நாங்க என்ன வாய்ப்பு தர்றது?' என, நைஸாக பேசி கழட்டி விடுகின்றனர். இதனால்,'ஓவர், 'பில்டப்' கொடுத்து விட்டேனே...' என்று புலம்பி திரிகிறார், வாரிசு நடிகை.
சினி துளிகள்!
* ஜெயிலர்- 2 படத்தை தொடர்ந்து, இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், ரஜினி நடிக்கும், தர்மன் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
* எஸ்.சரஸ்வதி என்ற தெலுங்கு படத்தை இயக்கி நடித்த வரலட்சுமி, தற்போது தமிழ், ஆங்கிலம் மற்றும் அரபு மொழிகளில் தயாராகும், ஸ்ரீலங்கா படத்தில் நடித்து வருகிறார்.
* அசோக் செல்வனுக்கு ஜோடியாக, அன்பில் அவன் என்ற படத்தில் நடிக்கிறார், ப்ரீத்தி முகுந்தன்.
* இயக்குனர், சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும், சேயோன் தமிழ் படத்துக்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
அவ்ளோதான்!
