PUBLISHED ON : செப் 06, 2026

அனிருத்திடம் இன்னொரு, 'ஹிட்' பாடல் கேட்ட, அஜித்!
அஜித் நடித்த, வேதாளம் படத்தில் இடம்பெற்ற, 'ஆலுமா டோலுமா...' பாடல் தியேட்டரில் ரசிகர்களை அதிரடி ஆட்டம் போட வைத்தது. இந்நிலையில், தற்போது, தான் தயாரித்து நடிக்கும், டேர் டெவில் என்ற தமிழ் படத்திற்கும், அதுபோன்று ஒரு அதிரடிப் பாடல் வேண்டும் என்று, இசையமைப்பாளர், அனிருத்திடம் கேட்டுள்ளார், அஜித்.
'முக்கியமாக, நான் நடித்த முந்தைய படங்களின் பாடல்களை விட, இந்தப் படத்தின் பாடல் இன்னும் பெரிய அளவில் பட்டையை கிளப்ப வேண்டும். தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி, சிங்கப்பூர், மலேஷியா போன்ற வெளிநாட்டு ரசிகர்களையும் வெறியேற்றக்கூடிய பாடலாக இது இருக்க வேண்டும்...' என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
— சினிமா பொன்னையா
காதல் ரகசியத்தை உடைத்த, துஷாரா விஜயன்!
பெரும்பாலும் நடிகையர் தங்களுக்கு காதலர் இருந்தால், அதை மூடி மறைப்பர். ஆனால், துஷாரா விஜயனோ தனக்கு துபாயில் ஒரு காதலர் இருப்பதாக வெளிப்படையாகக் கூறுகிறார். 'இப்படி காதலர் இருப்பதை வெளிப்படுத்துவதால், ஏற்கனவே, 'கமிட்' ஆகிவிட்டோம் என்று தெரிந்து, சினிமாவில் யாரும் நம்மை தேவையில்லாமல் தொந்தரவு செய்ய மாட்டார்கள். அதோடு, காதலரையே அவசரப்பட்டு கல்யாணம் செய்து கொள்ளாமல், பல ஆண்டுகள் காதலித்து அவரது நிறை குறைகளை முழுமையாகத் தெரிந்து கொண்ட பிறகே கல்யாணத்தில் இணைவேன்...' என்றும் கூறுகிறார், துஷாரா விஜயன்.
எலீசா
'கிக்' ஏற்றும், கயாடு லோஹர்!
டிராகன் தமிழ் படத்தில் அறிமுகமாகி, சமீபத்தில் வெளியான, இதயம் முரளி மற்றும் இம்மார்ட்டல் போன்ற தமிழ் படங்களில், 'கிக்' ஏற்றும் பாடல்கள் மூலம் இளவட்ட ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறார், அசாமிலிருந்து தமிழுக்கு இறக்குமதியான, கயாடு லோஹர். இப்படி ரசிகர்களை மட்டுமின்றி, தான் நடித்த படங்களின், 'ஹீரோ'களான, அதர்வா, பிரதீப் ரங்கநாதன், ஜி.வி.பிரகாஷ் ஆகியோரையும் அவர் கிறங்கடித்துள்ளார்.
அவரது இந்த, 'டான்ஸ் மூவ்மென்ட்'டின் ஈர்ப்பை சொல்லி, தங்களையும் அவர் சொக்க வைத்து விட்டதாக அவர்கள் கூறி வரும் நிலையில், தற்போது, கயாடு லோஹர் ஒப்பந்தமாகியுள்ள படங்களின், 'ஹீரோ'களும் கண்டிப்பாக இந்த படத்தில் அவருடன் 'ரொமான்ஸில்' மெய் மறக்கக்கூடிய, 'கிக்'கான பாடல் வைக்குமாறு இயக்குனர்களை கேட்டுக்கொள்கின்றனர்.
- எலீசா
வில்லன் அவதாரம் எடுக்கும் விக்ரம்!
அடுத்தடுத்து தோல்விப் படங்களை கொடுத்து வரும், விக்ரம், வெற்றிப் பட இயக்குனர்களுடன் கூட்டணி வைக்க தீவிர ஆர்வம் காட்டுகிறார். ஆனால், அவர்களோ, விக்ரமை வைத்து இயக்கினால், அந்தத் தோல்வி நம்மையும் தேற்றிக்கொள்ளும் என்று, அவரிடம் சிக்காமல் தெறித்து ஓடிக்கொண்டிருக்கின்றனர். என்றாலும், தன்னைத் துரத்தும் தோல்வியால், 'மார்க்கெட்' மொத்தமாக படுத்துவிடக் கூடாது என்பதற்காக, தற்போது, விஜய் சேதுபதி மற்றும் ரவி மோகன் பாணியில் வில்லனாக நடித்தாவது, 'மார்க்கெட்'டை தக்க வைத்துக் கொள்ள, சில இயக்குனர்களை சந்தித்து வில்லன் வேடத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு, வருகிறார், விக்ரம்.
சினிமா பொன்னையா
கறுப்புப் பூனை!
மலையாளத்தில் களமிறங்கியுள்ள பாகுபலி மற்றும் அருந்ததி படங்களில் நடித்த அந்த உயரமான நடிகை, நீண்ட காலமாக திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதன் பின்னணியில் ஒரு சோகக் கதை இருக்கிறதாம். பாகுபலி நடிகருடன் கிசுகிசுக்கப்பட்ட பிறகு, ஒரு தொழில் அதிபரை உயிருக்கு உயிராக காதலித்துள்ளார். ஆனால், கடைசி நேரத்தில், 'உன் குடும்பம் எங்கள் அந்தஸ்துக்கு சரிப்பட்டு வராது...' என்று கூறி, நடிகையை கழற்றி விட்டுவிட்டார், அந்த தொழிலதிபர்.
இதனால் ஏற்பட்ட விரக்தியில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான நடிகை, சமீபகாலமாக, 'பப்'களிலேயே பொழுதை கழித்து வருகிறார். இந்த ஏமாற்றமே அவர் இன்னும் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு காரணம் என, கோலிவுட்டில் ஒரு பேச்சு அடிபடுகிறது.
****
தளபதியை தொடர்ந்து ரசிகர் மன்றத்தை, அரசியல் கட்சியாக மாற்றத் திட்டமிட்டு வரும், முருகனின் மந்திரத்தை குறிக்கும் இரண்டெழுத்து படத்தில் நடிக்கும் சுள்ளான் நடிகர், தன் ரசிகர் படையை அதிகப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அதற்காக தான் நடித்த படங்கள் திரைக்கு வரும்போது, மாவட்ட வாரியாக இலவச காட்சிகளை போட்டு அதிகப்படியான ரசிகர்களை கூட்டவும் திட்டமிட்டுள்ளார்.
மேலும், வம்பு, அமரன் நடிகர்களின் ரசிகர் பட்டாளத்தையும் தன் பக்கம் இழுக்க, நிர்வாகிகளுக்கு ரகசிய உத்தரவு போட்டுள்ளார், சுள்ளான். ஆனால், இப்படி தங்களது ரசிகர் படை மீது, சுள்ளான் நடிகர் கை வைத்துவிட்டதால், உச்சகட்ட அதிர்ச்சிக்கு ஆளான மேற்படி நடிகர்கள், திரைமறைவில் சுள்ளானுடன் கடுமையான மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
சினி துளிகள்!
* இசையமைப்பாளர், ஏ.ஆர்.ரஹ்மான் முதன்முறையாக சின்னத்திரை இசை நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்க போகிறார்.
* இயக்குனர், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தான் நடிக்கும் படத்திற்கு, ஓம் என்று, 'டைட்டில்' வைத்திருந்தாலும், அது ஆன்மிகம் கலந்த படம் அல்ல என்கிறார், தனுஷ்.
* தற்போது, கத்தனார் என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார், அனுஷ்கா. இது, அவரது, 50வது படமாகும்.
அவ்ளோதான்!
