PUBLISHED ON : அக் 04, 2026

ரஜினியை அதிரவிட்ட, இரண்டாம் பாகப் படங்கள்!
ரஜினிகாந்தை பொறுத்தவரை தான் நடித்து, 'சூப்பர் ஹிட்'டான படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்கத் தயங்குவார். இருப்பினும், தற்போது, ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருக்கிறார். ஆனால், ஏற்கனவே தமிழ் சினிமாவில் வெளியான, சண்டக்கோழி - 2, பில்லா - 2, சாமி - 2, இந்தியன் - 2 மற்றும் சந்திரமுகி - 2 போன்ற, பல இரண்டாம் பாகப் படங்கள் படுதோல்வி அடைந்துவிட்டதால், உள்ளூரக் கலக்கமடைந்துள்ளார்.
இதன் காரணமாகவே, ஜெயிலர் - 2 படம் தன்னையும் பதம் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக, படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகும், தனக்கு அதிருப்தியை ஏற்படுத்திய பல காட்சிகளை மீண்டும் எடுக்க வைத்திருக்கிறார். மேலும், படத்தை சில முக்கிய புள்ளிகளுக்கு போட்டுக் காட்டி, அவர்கள் சொல்லிய திருத்தங்களையும் படத்தில் இடம்பெற செய்திருக்கிறார், ரஜினி.
— சினிமா பொன்னையா
மாளவிகா மோகனனை உற்சாகமூட்டும் நடிகர்கள்!
தமிழ் சினிமாவில், விஜய், தனுஷ், விக்ரம் மற்றும் கார்த்தி என, பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டபோதிலும், இன்னமும், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை பட்டியலில் இடம் பிடிக்க முடியாமல் இருக்கிறார், மாளவிகா மோகனன். இதன் காரணமாக, சில நேரங்களில் மனமுடைந்து, சினிமாவை விட்டே விலகிவிடலாமா, என்று, அவர் நினைக்கிறார். இதை அறிந்து, அவருடன் நடித்த, தனுஷ் மற்றும் விக்ரம் போன்றவர்கள், 'நீ மிகவும் திறமையான நடிகை. ஒரே ஒரு, 'பிரேக்' கிடைத்தால் போதும், நிச்சயம், பெரிய நடிகையாகி விடுவாய்...' என்று அவருக்கு, 'பாசிட்டிவ் எனர்ஜி' கொடுத்து, உற்சாகப்படுத்துகின்றனர்.
'சக நடிகர்கள் கொடுக்கும் இந்த நம்பிக்கையால்தான், தோல்விகளைக் கண்டு துவண்டு போகாமல், தமிழ் சினிமாவில் தொடர்ந்து எதிர்நீச்சல் போட்டு வருகிறேன்...' என, பூரிப்புடன் கூறுகிறார், மாளவிகா மோகனன்.
— எலீசா
வாரணாசி படத்தில், டைனோசர்!
தற்போது, தெலுங்கு நடிகர், மகேஷ் பாபு நடிப்பில், வாரணாசி என்ற பல மொழிகளில் உருவாகும் படத்தை, பிரமாண்டமாக இயக்கி வருகிறார் இயக்குனர், ராஜமவுலி. இந்தப் படத்தின் கதை, ஆப்ரிக்க நாட்டின் காடுகள் வரை செல்வதால், அங்கு, டைனோசர்கள் இடம்பெறுவது போன்று உருவாக்கியிருக்கிறார். அதனால், வாரணாசி பட செட்டில், டைனோசர் உருவங்களை உருவாக்கி, 'கிராபிக்ஸ்' மூலம் அவை உயிர் பெற்று வருவது போன்றும் படமாக்கியுள்ளார். அதோடு, டைனோசருடன், மகேஷ் பாபு மோதும் பிரமாண்ட சண்டைக் காட்சியும் இடம்பெறுகிறது.
— சி.பொ.,
மீண்டும் திரையில், சீமான்!
அரசியலில் எதிர்பார்த்தபடி வெற்றி கிடைக்காததால், சரத்குமார், கருணாஸ் போன்ற நடிகர்கள் மீண்டும் சினிமாவுக்குத் திரும்பிவிட்டனர். அவர்களைத் தொடர்ந்து தற்போது, நாம் தமிழர் கட்சியின், சீமானும் சினிமாவில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே, நடிகர், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற தமிழ் படத்தில், அவருக்கு அப்பாவாக நடித்திருந்த, சீமான், தற்போது, சிவகார்த்திகேயன் நடித்து வரும், சேயோன் தமிழ் படத்திலும் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தொடர்ந்து அழுத்தமான வேடங்களில் நடிக்க, இயக்குனர்களிடம் தீவிரமாகக் கதைகளையும் கேட்டு வருகிறார்.
— சினிமா பொன்னையா
கருப்புப் பூனை!
ஆக்ஷன் கிங் நடிகருடன்,வெடி என்ற பொருள் கொண்ட நான்கெழுத்து படம் மற்றும் 'ஹார்ட்' என்ற அர்த்தம் தரும் படம் என, இதுவரை, அந்த நடிகை நடித்து வெளியானது இரண்டும் படங்கள் மட்டும் தான்.
இந்நிலையில், முன்வரிசை நடிகர்களை அனுசரித்து நடந்துகொண்டால், மின்னல் வேகத்தில், 'நம்பர் ஒன்' நாற்காலியைக் கைப்பற்றிவிடலாம் என்ற, தன் மேனேஜரின் சொல்லைக் கேட்டு, சில, 'ஹீரோ'களுடன் அடுத்தடுத்து ரகசிய சந்திப்புகளை நடத்தியிருந்தார்.
ஆனால், காரியம் முடிந்த பின், மேற்படி நடிகர்கள், அம்மணியைக் கண்டுகொள்ளாமல் கழட்டிவிட்டனர். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த நடிகை, தன் மேனேஜரை விரட்டியடித்துவிட்டு, இப்போது, தனக்குத் தானே மேனேஜர் ஆகிவிட்டார். அதோடு, 'அட்ஜஸ்ட்மென்ட்' விவகாரத்தில் அவசரப்படாமல் உஷாராகவும் செயல்படத் துவங்கியிருக்கிறார்.
****
ஒரு காலத்தில், ரசிகர்கள் கோவில் கட்டும் அளவுக்கு வளர்ந்த அந்த மூன்றெழுத்து, பூ நடிகை, மீண்டும் சினிமாவில் இழந்த இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று முயற்சித்த போதும், அவர் செய்து வரும் வெத்து பந்தாக்கள், இயக்குனர்களிடையே அவர் மீது வெறுப்பை ஏற்படுத்திவிட்டது. 'நான் ஒரு மிகப்பெரிய அரசியல் தலைவர் மற்றும் மிகப்பெரிய இயக்குனரின் மனைவி...' என்றெல்லாம், 'சொடக்' போட்டு, பேசி வந்தார்.
இப்படி, அம்மணி படப்பிடிப்பு தளங்களில் செய்யும் அழிச்சாட்டியத்தின் காரணமாக, 'இவரெல்லாம் வேலைக்கு ஆகமாட்டார்...' என்று அவரிடம் நட்பாக இருக்கும் இயக்குனர்கள் கூட, அவரைக் கைகழுவி விட்டனர்.
இந்த உண்மை தெரியாமல், தான் வெத்து பந்தா காட்டினால் தான் தன்னை பெரிய ஆளாக மதிப்பர் என்று நினைத்து, தொடர்ந்து காலரைத் துாக்கி விட்டுக் கொண்டு அலைகிறார், அந்தப் பூ நடிகை.
சினி துளிகள்!
* பிளாஸ்ட் மற்றும் இதயம் முரளி படங்களில் நடித்த, ப்ரீத்தி முகுந்தன், தற்போது, ஹிந்தியிலும் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.
* தமிழ் சினிமாவில், குஷ்பூவுக்கு பட வாய்ப்புகள் இல்லாததால், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட படங்களில், 'கேரக்டர் ரோல்'களில் நடித்து வருகிறார்.
* இயக்குனர், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் குமார் நடிக்கும் , டேர் டெவில் என்ற தமிழ் படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
அவ்ளோதான்
